பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக ஒழித்துவிட்டு, மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலுமே புதிய சட்டமூலங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. மாறாக பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் வேண்டாமெனில் மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வர நேரிடும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மேலும் பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஜி.எஸ்.பி.பிளஸ் வரி சலுகை இரத்தாகும் என முன்வைக்கப்படும் விவாதம் நியாயமற்றது எனக் குறிப்பிட்ட அமைச்சர், அவ்வாறு ஜி.எஸ்.பி.பிளஸ் வரி சலுகை இரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பும் இல்லை என்றும் உறுதியாகக் கூறினார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (27) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பதே எமது வாக்குறுதியாக இருந்தது. அதற்கமைய, பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒழிக்கும் சட்டம் ஆகிய இரு புதிய சட்டமூலங்கள் கொண்டுவரப்படுகின்றன. இவை சர்வதேச மனித உரிமைகளைப் பாதுகாக்கும் அதேவேளையில், சாதாரண மக்களை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரைவிலக்கணங்களுக்கு அமைவாகவே இச்சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் உறுப்பினர்கள், அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள், நிதி உதவி வழங்குபவர்கள் மற்றும் தெரிந்தே வசதி செய்து கொடுப்பவர்கள் மீதே இச்சட்டம் பாயும். எனவே, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து அறியாமல் செயற்படும் சாதாரண பொதுமக்கள் இது குறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நாடு முழுவதும் பரவிவரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்கவுமே இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. பழைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு இவ்வாறான ஜனநாயக ரீதியிலான சட்டங்களைக் கொண்டுவருவதில் எவ்வித ஆபத்தும் இல்லை. பயங்கரவாதத் தடை சட்டம் போன்று பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்ட மூலம் ஆபத்தானதல்ல. எவ்வாறிருப்பினும் பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்ட மூலம் வேண்டாமென விவாதித்தால், மீண்டும் பயங்கரவாதத் தடை சட்டத்தையே கொண்டு வர நேரிடும்.

மோசமான ஏற்பாடுகளைக் கொண்ட பயங்கரவாதத் தடை சட்டம் நடைமுறையிலிருந்த போதே, ஜி.எஸ்.பி.பிளஸ் வரி சலுகை இரத்து செய்யப்படவில்லை. அவ்வாறிருக்கையில் அதை விட சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்ட மூலம் எந்த வகையிலும் ஜி.எஸ்.பி.பிளஸ் வரி சலுகையை பாதிக்காது என்றார்.