பொலன்னறுவ - அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புபுதுகம பகுதியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்தனர்.
புபுதுகம பகுதியில் உள்ள வயல் நிலத்திற்குள் நேற்று செவ்வாய்க்கிழமை (17) புகுந்த காட்டு யானையொன்றை துரத்துவதற்கு முற்பட்ட போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் புபுதுகம, அரலகங்வில பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய விவசாயி என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது அரலகங்வில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அரலகங்வில பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.