தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகள் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் மழை மேலும் சில நாட்களுக்கு தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடாதிபதியும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர்.நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக அவர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

வடக்கு மாகாணத்திற்குப் பரவலாக எதிர்வரும்- 10 ஆம் திகதி வரை மிதமானது முதல் சற்றுக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்த மழை தொடர்ச்சியாக கிடைக்காது. ஆனால், ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களும் இக் காலப் பகுதியில் மழையைப் பெறும். குறிப்பாக எதிர்வரும்- 07, 08,09 மற்றும் 10 ஆம் திகதிகளில் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் சற்றுக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

கிழக்கு மாகாணத்தில் இன்றும் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆனால், எதிர்வரும்- 07, 08,09 மற்றும் 10 திகதிகளில் பல பகுதிகளுக்கும் சற்றுக் கனமான மழையும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.  எதிர்வரும் நாட்களில் மத்திய, சப்ரகமுவா, ஊவா, வட மத்திய,வடமேல், தெற்கு மாகாணங்களின் கணிசமான பகுதிகள் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளன.

குறிப்பாக எதிர்வரும்- 10 ஆம் திகதி வரை நுவரெலியா, கண்டி, புத்தளம், சிலாபம்,  இரத்தினபுரி, பதுளை, குருநாகல், கேகாலை, காலி, அநுராதபுரம்,  மொனராகலை மாவட்டங்கள் திரட்டிய மழை வீழ்ச்சியாக 200 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சியைப் பெறும் வாய்ப்புள்ளன.

ஏற்கனவே மத்திய, சப்ரகமுவா, ஊவா மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கணிசமான அளவு மழை கிடைத்துள்ளதனால் எதிர்வரும் நாட்களில் கிடைக்கவிருக்கும் கனமழை இப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அனர்த்தங்களையும், நிலச்சரிவு அனர்த்த நிகழ்வுகளையும் உருவாக்கக் கூடும் என்பதனால் இப்பகுதி மக்கள் இவை தொடர்பாக அவதானமாக இருப்பது சிறந்தது.

இந்த மழை கிடைக்கும் போது செறிவான இடிமின்னல்களும் இடம்பெறும் வாய்ப்புள்ளன. எனவே இடி மின்னல்கள் தொடர்பிலும் மக்கள் கருத்தில் கொண்டு செயற்படுவது சிறப்பானது.

எதிர்வரும்- 10 ஆம் திகதி வரையான நாட்களில் கிடைக்கும் மழை குழப்பமான வானிலைக் கோலங்களோடு கூடியதாகவே அமையும். அதாவது வெயில், தெளிவான வானம், மேகமூட்டம், செறிவான மழை எனக்  கலவையான வானிலைத் தோற்றப்பாடுகள் நிலவும். ஒரே நேரத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளும் மழையைப் பெறாது எனவும் அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.