அரச வருமானத்தை இலக்காகக் கொண்டு 2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக் கொள்வதற்கான எவ்வித திட்டங்களும் வரவு செலவுத் திட்டத்தில் நேரடியாக குறிப்பிடப்படவில்லை. நிறைவடைந்த 2 ஆண்டுகாலப்பகுதியில் வெளிநாட்டு முதலீடுகள் ஏதும் இலங்கைக்கு கிடைக்கப்பெறவில்லை என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
நிதியமைச்சரான ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பயனுடையதாக அமைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து ஜனாதிபதி 5 மணித்தியாலங்கள் உரையாற்றினார்.ஆனால் ஜனாதிபதியின் உரையில் நடுத்தர மக்களுக்கு நேரடி நிவாரணங்கள் ஏதும் முன்வைக்கப்படவில்லை.
நிறைவடைந்த இரண்டு ஆண்டுகாலப்பகுதியில் பாரிய வெளிநாட்டு முதலீடுகள் ஏதும் நாட்டுக்கு கிடைக்கவில்லை. அவ்வாறு கிடைத்த வெளிநாட்டு முதலீடுகள் என்னவென்று பலமுறை கேள்வியெழுப்பியுள்ளேன்.
இருப்பினும் அதற்கு இதுவரையில் பதில் கிடைக்கவில்லை.வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்வதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்தில் வழமையான போலியான வாக்குறுதிகள் மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளன. நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டங்களையும் ஜனாதிபதி முன்வைக்கவில்லை.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன.அவற்றில் எத்தனை இன்றளவில் செயற்படுத்தப்பட்டுள்ளன. மக்களுக்கு கிடைத்த பயன் என்னவென்பதையும் அரசாங்கம் அறவிக்க வேண்டும் என்றார்.