வவுனியா நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால், பலர் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு அபாயம் கொண்ட இந்நோய் குறித்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது நிறுவனங்களின் வளாகங்களில் மழைநீர் தேங்கக்கூடிய பழைய டயர்கள், பிளாஸ்டிக் போத்தல்கள், யோகட் கோப்பைகள், தேங்காய் சிரட்டைகள், உடைந்த வாளிகள் மற்றும் தகரக் கழிவுகள் ஆகியவற்றை உடனடியாக அப்புறப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தண்ணீர் சேமித்து வைக்கும் கலன்களை மூடி வைப்பதுடன், வீட்டுத் தோட்டங்களையும் சுற்றுப்புறங்களையும் குறைந்தது வாரத்திற்கு ஒருமுறையாவது சுத்தப்படுத்த வேண்டும். காய்ச்சல், தலைவலி அல்லது உடல்வலி ஆகியவை இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால், உடனடியாக அரச வைத்தியசாலைக்குச் சென்று மருத்துவரை அணுகுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொள்ளும் சோதனைகளின் போது நுளம்பு பெருகும் இடங்களோ அல்லது குடம்பிகளோ கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட இடங்களின் உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வவுனியா சுகாதாரத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெங்குவற்ற ஆரோக்கியமான சூழலை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.