எண்ணெய் விலை, எரிபொருள் விலை, மின் கட்டணத்தை குறைத்து, வாழ்க்கைச் செலவை குறைக்கும் பொருட்டு மக்களுக்கு நிவாரணப் பெக்கேஜை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசாங்கத்திடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.
தற்போதைய போர் நிலைமைக்கு மத்தியில் நமது நாட்டின் பொருளாதாரம் பாரிய சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. எண்ணெய் விலை ஏற்றத்தால் ஒட்டுமொத்த வருமான வழிகளும் பாதிக்கப்பட்டு, தொழில்கள் சரிந்து உற்பத்தி மற்றும் சேவை செயன்முறைகளும் முடங்கிப்போயுள்ளன. தரம் குறைந்த நிலக்கரி பயன்பாட்டால் நாட்டின் எரிசக்தி ஆற்றல் பாதுகாப்புக்கு கடுமையான அடி விழுந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
நேற்றைய தினம் நுரைச்சோலை மின் நிலையத்தில் 147 மெகாவோட் குறைவாகவே மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் எண்ணெய் விலை, மின் கட்டணம் என்பன அதிகரித்து வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கம் அதிகரித்து காணப்படுவதனால் ஒட்டுமொத்த உற்பத்திச் சுழற்சி, மக்களின் வாழ்வாதாரம், தொழில்கள் மற்றும் வருமான வழிகளில் பாரிய தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் நாட்டு மக்கள் மரணப் பொறியில் சிக்கியுள்ளனர் என்றும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, எண்ணெய் விலை, மின் கட்டணம் ஆகியவற்றை குறைக்க வேண்டுமென்றும், அதற்காக அரசாங்கம் திறைசேரியில் சேமித்து வைத்திருப்பதாக கூறும் மேலதிக கையிருப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இப்போதாவது மக்கள் வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பேச்சுவார்ததை நடத்தி நிவாரண பெக்கேஜை மக்களுக்கு பெற்றுக் கொடுக்குமாறு அவர் கூறியுள்ளார்.
IMF நிபந்தனைகளை உள்ளவாறு பாதுகாப்பதற்காக இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரவில்லை. மாறாக IMF ஒப்பந்தத்தை புதுப்பித்து, மக்கள் நலனுக்கு சாதகமான, மக்களுக்கு ஆதரவான விதிமுறைகளை ஏற்படுத்தி IMF ஒப்பந்தத்தை மானுடமயமாக்குவதற்கே ஆட்சிக்கு வந்தனர். இது அரசாங்கத்தின் சமூக பொறுப்பும் சமூக உடன்படிக்கையுமாகும்.
நாட்டு மக்களுடன் அரசாங்கம் ஏற்படுத்திக்கொண்ட சமூக உடன்படிக்கை காணப்படுவதனால் அஞ்சாமல் IMFஉடன் பேச்சை நடத்தி எண்ணெய் விலை, எரிபொருள் விலை மற்றும் மின் கட்டணத்தை குறைத்து, வாழ்க்கைச் செலவை குறைக்கும் பொருட்டு மக்களுக்கு நிவாரண பெக்கேஜை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
அரசாங்கத்தின் இந்த மெத்தனப் போக்கு நடைமுறையால் இதுவரை நாட்டில் மருந்து பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. மூலப்பொருட்கள், உரம், எண்ணெய் போன்றவற்றுக்கும் தட்டுப்பாடு காணப்படுகின்றன.
மின்சாரத் துறையில் பாதுகாப்பின்மை உருவாகி மின்வெட்டு கூட ஏற்படலாம். விவசாயிகள், மீனவர்கள் என அனைத்து துறைகளிலும் மக்கள் பாரிய அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒட்டுமொத்த நாடும் மேலும் கடுமையான அழுத்தத்திற்கும் அமைதியின்மைக்கும் ஆட்படாமல் இவர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இப்போதாவது தூக்கத்திலிருந்து விழித்து IMFஉடன் கலந்துரையாடி விரைவான நிவாரண பெக்கேஜை அறிமுகப்படுத்த வேண்டும். எண்ணெய் விலைகளை குறைப்பதற்கும், மின் கட்டணங்களைக் குறைப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்காக எதிர்க்கட்சி பூரண ஆதரவைத் தரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
வாழ்க்கைச் செலவை குறைக்கும் பொருட்டு மக்களுக்கு நிவாரணப் பெக்கேஜை பெற்றுக் கொடுங்கள்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space