வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட் தொகையொன்றைச் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த,வெளிநாட்டு விமானப் பயணி ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 42 வயதுடைய சீன நாட்டு வர்த்தகர் ஆவார்.
இவர் இன்று காலை 09.10 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து மலேசியன் எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான MH-497 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, அவர் கொண்டு வந்திருந்த இரண்டு பயணப் பொதிகளுக்குள் சீனாவில் தயாரிக்கப்பட்ட 28,000 சிகரெட்டுகள் அடங்கிய 140 சிகரெட் காட்டூன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன் பெறுமதி சுமார் 42 இலட்சம் ரூபாய் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேகநபரைத் தடுத்து வைத்துள்ள கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.