தீவிரவாத தாக்குதலில் இருந்து ஃபிளைதுபாய் விமானத்தையும் அதில் பயணித்த பயணிகளையும் காப்பாற்றிய விமான கேப்டன் ஸ்மித் மச்சார் உள்ளிட்ட விமான குழுவினருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய வீரதீர விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் 30 அன்று துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஃபிளைதுபாய் விமானத்தை இயக்கிய கேப்டன் ஸ்மித் மச்சாரை, துணை விமானி ஹமம் அல் ஹம்மாமி காக்பிட் அறையில் இருந்த கோடாரியைக் கொண்டு தாக்கினார். மேலும், தற்கொலைப் படை தீவிரவாதியாகச் செயல்பட்டு விமானத்தை விபத்துக்குள்ளாக்கவும் அவர் முயன்றார். எனினும், பலத்த காயங்களுக்கு மத்தியில் காக்பிட் கதவைத் திறந்து விமானம் விபத்துக்குள்ளாவதை ஸ்மித் மச்சார் தடுத்து நிறுத்தினார்.

இதையடுத்து விமானம் அவசரமாக சவூதி அரேபியாவில் தரையிறக்கப்பட்டது. அங்கு ஸ்மித் மச்சாருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் அவர் அங்கிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்குக் கொண்டு வரப்பட்டு முழு அளவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கேப்டன் ஸ்மித் மச்சார் மற்றும் விமானக் குழுவினரை கவுரவிக்கும் நோக்கில், ஐக்கிய அரபு அமீரகம் அவர்களுக்கு நாட்டின் மிக உயரிய சிவிலியன் வீரதீர விருதினை வழங்கி உள்ளது. விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஸ்மித் மச்சார் கலந்து கொண்டார். அவரை வரவேற்று அவருடன் உரையாடிய அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், பின்னர் அவரை ஆரத்தழுவி தனது அன்பை வெளிப்படுத்தினார்.

மேலும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் விமானத்தை பாதுகாப்பான நிலைக்குக் கொண்டு வருவதிலும் குழுவினர் காட்டிய துணிச்சலையும் தொழில்முறைத் திறனையும் பாராட்டிய அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே ஐக்கிய அரபு அமீரகத்தின் முதன்மையான முன்னுரிமை என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அதிபர் முன்னிலையில், துணை பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம், ஸ்மித் மச்சார் உள்ளிட்ட விமானக் குழுவினரின் செயல்பாடுகளையும் பொறுப்புணர்வையும் பாராட்டி விருதுகளை வழங்கினார். இவ்விழாவில், துபாய் விமான நிலையங்கள் மற்றும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் குழுமத்தின் தலைவர் ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விருதைப் பெற்றுக்கொண்ட ஸ்மித் மச்சார் உள்ளிட்ட விமானக் குழுவினர், அதிபருக்கும் அரசுக்கும் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.