2015 ஆம் ஆண்டு தெமட்டகொடை பகுதியில் உள்ள கடையொன்றில் பணிபுரிந்த இளைஞரைக் கடத்திச் சென்று, சட்டவிரோதமாக தடுத்து வைத்துத் தாக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்குக் குற்றவாளியாகக் காணப்பட்டு, மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, அத்தீர்பை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரணை செய்வதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை (11) மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் ஒன்றை நியமித்துள்ளது.
குறித்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரொஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதி குழாம் முன்பு விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இதன்போது, குறித்த மேன்முறையீட்டு மனுவானது தான் உட்பட நீதிபதி பி. குமாரன் ரத்னம் மற்றும் நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்காக அழைக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரொஹந்த அபேசூரிய அறிவித்தார்.
இந்த மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (10) பி. குமாரன் ரத்னம் மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்பு அறிவிக்கப்படவிருந்தது.
எனினும், வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, நீதிபதிகள் குழாமிடையே பிளவுபட்ட தீர்ப்பு காணப்படுவதாக நீதிபதி பி. குமாரன் ரத்னம் அறிவித்தார்.
இதன் காரணமாக, பொருத்தமான நீதிபதிகள் குழாம் ஒன்றை மீண்டும் நியமித்து, சம்பந்தப்பட்ட மேன்முறையீட்டை மீளாய்வு செய்வதற்காக, குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்படுவதாக நீதிபதி குமாரன் ரத்னம் நேற்று அறிவித்திருந்தார்.
இதற்கமைய,இன்று புதன்கிழமை (11) மேன்முறையீட்டு மனு மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி ரொஹந்த அபேசூரிய முன்னிலையில் அழைக்கப்பட்டதுடன், அங்கு மனுவை விசாரணை செய்வதற்கு புதிய நீதிபதி குழாம் ஒன்றை நியமித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி, மனு மீதான விசாரணையை ஜனவரி 21 ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு அழைப்பதுக்கு திகதி நிர்ணயித்தார.
2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி தெமட்டகொடை பகுதியில் உள்ள கடையொன்றில் பணிபுரிந்த இளைஞரொருவர் டிபென்டர் ரக வாகனத்தில் கடத்தப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கமைய இவ்வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம், 3 வருட கடூழியச் சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்திருந்ததது. அந்த தண்டனைகளிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி அவர் இந்த மேன்முறையீட்டை தாக்கல் செய்துள்ளார்.