'வெரிட்டே ரிசேர்ச்' அமைப்பின் அரச நிதி தொடர்பான இணையத்தளத்தினால் வெளியிடப்பட்டுள்ள மதிப்பீட்டின் பிரகாரம், 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தின் முன்மொழிவுகளில் சுமார் 40 சதவீதமான முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இருப்பினும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகளின் வீதம் 2017 ஆம் ஆண்டின் பின்னர் 2025 இல் மிக உயர்வான மட்டத்தை எட்டியுள்ளது.

அதேவேளை இந்த மதிப்பீட்டின் பிரகாரம் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் 33 சதவீதமான முன்மொழிவுகள் முழுமையாகவும், 8 சதவீதமான முன்மொழிவுகள் கணிசமான அளவிலும் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதுடன், அவற்றின் ஒருங்கிணைந்த மொத்த வீதம் 41 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

அதேபோன்று முன்மொழிவுகளில் 22 சதவீதமானவை பகுதியளவிலும், 14 சதவீதமானவை திருப்தியளிக்காத முன்னேற்றத்துடனும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு 3 சதவீதமானவை மீறப்பட்ட வாக்குறுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் 19 சதவீதமான முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் எத்தகைய முன்னேற்றமும் அடையப்படவில்லை. இத்தரவுகளின் பிரகாரம் அமுலாக்கத்தில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் எட்டப்படாத முன்மொழிவுகள் சுமார் 39 சதவீதமானவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அத்தோடு கண்காணிப்பு ஆரம்பமான 2017 ஆம் ஆண்டின் பின்னர், வரவு, செலவுத்திட்ட முன்மொழிவுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட முன்மொழிவுகளின் வீதம் உயர்வான மட்டத்தில் பதிவானது 2024 ஆம் ஆண்டிலேயே ஆகும் என்றும், அப்போது 17 சதவீதமாகக் காணப்பட்ட அவ்வீதம், 2025 இல் 33 சதவீதமாக உயர்வடைந்திருப்பதாகவும் 'வெரிட்டே ரிசேர்ச்' அமைப்பின் மதிப்பீடு கண்டறிந்துள்ளது.