ஆயுர்வேத மருந்தக கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களுக்கு எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் அக்ரஹார காப்பீட்டுத் திட்டத்தின் பலன்கள் வழங்கப்பட உள்ளதாகச் சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி உறுதியளித்துள்ளார்.
ஆயுர்வேத மருந்தகக் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கான அக்ரஹார காப்பீட்டுப் பலன்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் காப்பீடு வழங்கும் விசேட நிகழ்வு பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி அவர்களின் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (29) பிற்பகல் நாவின்ன, பண்டாரநாயக்க ஆயுர்வேத ஞாபகார்த்த ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் ஆயுர்வேத மற்றும் சுதேச மருத்துவத் துறையை மேலும் மேம்படுத்தி சர்வதேச தரத்துக்கு உயர்த்துவது காலத்தின் கட்டாயமாகும். உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் மேலும் முன்னேதக்கி செல்ல வேண்டும் என்பதோடு, அதனை ஒரு சவாலாக ஏற்று வெற்றிபெற தெளிவான திட்டமிடல் அவசியமாகும்.
ஆயுர்வேத மருந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், இந்தியா போன்ற வெளிநாடுகளிலிருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதில் தொடர்ந்தும் தங்கியிராமல், உள்நாட்டில் மூலப்பொருளை பெற்றுக்கொள்ளவும், அதற்கான சந்தை முறையை உருவாக்குவதும் அவசியம்.
பாரம்பரிய தயாரிப்புகளுக்கு மாத்திரம் தங்கயிருக்காமல் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களுக்கு மாறுவதன் மூலம் சர்வதேச சந்தையில் தமக்கான வாய்புகளை பெற முடியும். தற்போதைய சவால்களைத் தடையாக்கிக் கொள்ளாமல், புதிய வாய்ப்புகளாக மாற்றி அவற்றை நேர்மறையாக எதிர்கொள்ள வேண்டும்.
இந்த வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் அதேவேளை, ஊழியர்களின் நலன்புரித் திட்டங்களை உறுதிப்படுத்துவதும் எமது பிரதான நோக்கமாகும். அதற்கமையவே தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த அக்ரஹார காப்பீட்டு ஊழியர்களின் பாதுகாப்பையும் எதிர்கால நலனையும் பலப்படுத்தும் என்ற நம்பிக்கையுள்ளது என்றார்.

