அடுப்புக்குள் விழ ஆசைப்படுகிறாரா செல்வம்?

தமிழ் மக்­க­ளுக்கு இந்த நாட்டில் தீர்வு வழங்­கப்­ப­டாது போனால், வடக்கு, கிழக்கை இந்­தி­யா­வுடன் இணைத்துக் கொள்­ளு­மாறு கோர நேரிடும் என ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன் அண்­மையில் கருத்து ஒன்றை வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

இது இந்­தியத் தரப்பில் இருந்து கொடுக்­கப்­பட்ட நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில் வெளி­யி­டப்­பட்­டதா? இலங்கை அர­சிடம் இருந்து நியா­ய­மான தீர்வு கிடைக்கும் சாத்­தி­ய­மில்லை என்ற அவ­நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில் வெளி­யி­டப்­பட்­டதா? தீர்­வுக்­காக போராடும் வல்­ல­மையை இழந்து விட்ட சோர்வில் இருந்து வெளி­யா­னதா? அல்­லது, இவ்­வா­றான கருத்தை வெளி­யி­டு­வதன் மூலம் இலங்கை அரசை மிரட்டிப் பணிய வைக்­கலாம் என்ற அசட்டு நம்­பிக்­கையில் இருந்து வெளிப்­பட்ட கருத்தா என்று தெரி­ய­வில்லை.

ஆனால், இந்தக் கருத்து சாதா­ர­ண­மான ஒன்று அல்ல. இது தமிழ் மக்­களின் கருத்தைப் பிர­தி­பலிக்­க­வு­மில்லை. அத்­துடன் இந்தக் கருத்து, வெளி­யி­டப்­பட்­டுள்ள சூழ­லையும் சாதா­ர­ண­மாக எடுத்துக்கொள்­ள­முடியாது.

இலங்­கையை இந்­தி­யா­வுடன் இணைத்துக்கொள்­வது, மகா­கவி பார­தியார் உள்ளிட்ட இந்­திய தேசி­ய­வா­திகள் பல­ரது கனவாக இருந்­தி­ருக்­கி­றது.

“சிங்­களத் தீவி­னுக்கோர் பாலம் அமைப்போம்” என்று பார­தியார் பாடி­யி­ருக்­கிறார்.

அதே­போல, இலங்கை சுதந்­திரம் பெறு­வ­தற்கு முன்னர் இந்­தி­யா­வுடன் அதனை இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை தென்­ப­கு­தியில் இருந்தும் சிலரால் முன்­வைக்­கப்­பட்­டது.

அண்­மைய பொரு­ளா­தார நெருக்­க­டியின்போது கூட சிலர், இலங்­கையை இந்­தி­யா­விடம் ஒப்­ப­டைத்துவிடலாம் என்று ஆலோ­சனை கூறி­ய­வர்­களும் இருக்­கின்­றனர்.

இவற்­றுக்கு மத்­தியில் 75 ஆண்­டுகள் சுதந்­தி­ர­மாக இருந்துவிட்­டது இலங்கை. இப்­போது, இந்­தியா­வு­ட­னான இணைப்­பு­களை பலப்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

இந்­தி­யா­வுக்கும் இலங்­கைக்கும் இடையில் தரை­வ­ழிப்­பாலம் அமைக்கும் திட்டம், குழாய்­வழி எரி­பொருள் விநி­யோ­கத்தை மேற்கொள்ளும் திட்டம், மின்­வ­ழித்­தட இணைப்பை மேற்­கொள்ளும் திட்டம் என்­பன இப்­போது பரி­சீ­ல­னை­களில் இருக்­கின்­றன.

இந்­தி­யா­வுடன் தொடர்­பு­களை பலப்­ப­டுத்தி, அதன் மீது சார்ந்­தி­ருக்­கின்ற சூழல் அதி­க­ரிக்கத் தொடங்­கி­யுள்ள நிலையில்தான் செல்வம் அடைக்­க­ல­நாதன் வடக்கு, கிழக்கை இந்­தி­யாவுடன் இணைத்துக்கொள்­ளு­மாறு கோர நேரிடும் என்று கூறி­யி­ருக்­கிறார்.

இது நடை­முறைச் சாத்­தி­ய­மான விட­ய­மாக இருக்­காது. ஏனென்றால் இலங்கை ஒரு சுதந்­திர நாடு. இலங்­கை­யுடன் இந்­தியா நட்­பு­றவு கொண்­டி­ருக்­கி­றது. இலங்­கையின் தய­வையும், அது தனக்கு எதி­ராக திரும்பிவிடக்கூடாது என்­ப­திலும் இந்­தியா உறு­தி­யாக இருக்­கி­றது.

தமிழர் பிரச்­சி­னைக்­கான தீர்வு விட­யத்தில் இந்­தியா கடந்த நான்கு தசாப்­தங்­க­ளாக அடக்கி வாசித்துக் கொண்­டி­ருப்­ப­தற்கு கார­ணமே, கொழும்பை பகைத்துக்கொள்ளக் கூடாது என்ற முன்­னெச்­ச­ரிக்கை தான்.

தனது காலுக்குக் கீழே ஒரு எதிரி உறங்கிக்கொண்­டி­ருப்­பதை இந்­தியா ஒரு­போதும் விரும்­பாது. அது இந்­தி­யாவின் தேசிய பாது­காப்பு நல­னுக்கு ஆபத்­தா­னது.

அதனால் முடிந்­த­ள­வுக்கு இலங்­கை­யுடன் நட்­பு­றவை பேணிக்கொள்ள விரும்­புமே தவிர, தமி­ழர்­களை முக்­கி­ய­மாக கவ­னத்தில் கொள்­ளாது. அதுவும் வடக்கு, கிழக்கை இந்­தி­யா­வுடன் இணைத்துக்கொள்­வது என்ற கோரிக்கை விட­யத்தில் இந்­தியா மிகவும் முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டனே நடந்துகொள்ளும்.

இந்தக் கோரிக்­கையை 1980களின் நடுப்­ப­கு­தியில் விடுத்­தி­ருந்தால், ஒரு­வேளை இந்­தியா அதற்குச் சாத­க­மான நிலைப்­பாட்டை எடுத்­தி­ருக்கக்கூடும்.

இன்­றைய நிலையில் அதற்­கான சாத்­தி­யங்கள் அரிது. பாகிஸ்தான், சீனா என வடக்கே இரண்டு எதி­ரி­களை வைத்­தி­ருக்­கின்ற இந்­தியா, தெற்கில் இன்­னொரு எதி­ரியை உரு­வாக்க விரும்­பாது.

அதை­விட வடக்கு, கிழக்கை இணைத்துக்கொள்­வதன் மூலம் மாத்­திரம், இந்­தி­யாவின் பாது­காப்பை உறுதிசெய்துவிட முடி­யாது. பலாத்­கா­ர­மான முறையில் அதனை செய்தால், நாட்டின் ஏனைய பகு­திகள் இந்­தி­யா­வுக்கு எதி­ராக திரும்பும்.

பிராந்­தி­யத்தில் அமை­தி­யற்ற நிலை தோன்றும். அதனை சாட்­டாக வைத்துக்கொண்டு அம்­பாந்தோட்டை துறை­மு­கத்தில் சீனா தனது படை­களை இறக்கும். அதன் மூலம் கொரியா இரண்டு நாடு­க­ளாக பிரிந்து மோதிக்கொண்­டது போன்ற சூழல் உரு­வாகும்.

இது இந்­தி­யாவின் நிலை­யான பாது­காப்­புக்குப் பெரும் அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்தும். இந்­தியா பாது­காப்­பா­கவும் அமை­தி­யா­கவும் இருந்தால் தான், பொரு­ளா­தார வளர்ச்­சியை பெற முடியும்.

இந்­தியா பொரு­ளா­தார ரீதி­யாக இன்று வளர்ந்­தி­ருக்­கி­றது. அது அடுத்த கட்­டத்தை நோக்கி நகர வேண்டும். அதற்­குள்­ளா­கவே, அமை­தி­யற்ற நிலைக்குள் சிக்கிக்கொண்டால், எல்லாம் பாழாகிவிடும். எனவே, இந்­தியா நிதா­ன­மா­கவே நடந்துகொள்ளும்.

செல்வம் அடைக்­க­ல­நா­த­னுக்கு இந்­தி­யா­விடம் சர­ண­டையும் இந்த யோசனை எப்­படி தோன்­றி­யதோ தெரி­ய­வில்லை.

உக்ரே­னிடம் இருந்து முன்னர் கிரீ­மி­யா­வையும், பின்னர், டோனஸ்க், லுகான்ஸ்க், டொன்பாஸ் பிராந்­தி­யங்­க­ளையும் கைப்­பற்றி தன்­னுடன் இணைத்துக்கொண்­டி­ருக்­கி­றது ரஷ்யா. இதனை உலக நாடுகள் ஏற்றுக்கொள்­ள­வில்லை. அது­போல இந்­தி­யாவும் நடந்துகொள்ளும் என்று எதிர்­பார்த்­தி­ருப்­பா­ரே­யானால், அது முட்­டாள்தனம்.

அதே­வேளை, ஒன்றில் அர­சாங்கம் தமி­ழர்­க­ளுக்கு தீர்வினை தர வேண்டும் இல்­லாவிட்டால், வேறு வழியை நாட வேண்டும் என்ற நிலை செல்வம் அடைக்­க­ல­நாதன் உள்­ளிட்ட தமிழ்த் தலை­வர்­க­ளுக்கு இருப்­பது உண்மை.

அதுவும் இந்­தி­யாவை மட்டும் நம்­பு­கின்ற தலைவர்­க­ளுக்கு, ஒன்றில் தனி­நாட்டை பெற்றுத் தரு­மாறு கோர வேண்டும் அல்­லது இணைத்துக்கொள்­ளு­மாறு கோர வேண்டும் என இரண்டு தெரி­வுகள் மாத்­திரம் இருப்­ப­தாக சொல்­லப்­ப­டு­கி­றது.

அதற்கு அப்­பாற்­பட்ட நிலைப்­பா­டு­களை எடுப்­பது பற்றி யோசிக்க அவர்கள் தயா­ரில்லை. இந்தியா தனி­நாட்டை பெற்றுத் தராது என்­பது தெரியும். அது­போ­லவே இணைப்­பையும் இந்தியா பரி­சீ­லிக்­காது.

இந்­தியா வடக்கு, கிழக்கை தன்­னுடன் இணைத்துக்கொள்ள இணங்­கினால் மட்டும் தமி­ழர்­களின் பிரச்­சினை தீர்ந்துவிடுமா? இல்லை.

இலங்­கையில் தமி­ழர்­க­ளுக்கு உரி­மைகள், அதி­கா­ரங்­களைப் பெற்றுக்கொடுக்க இந்­தியா விரும்­பினால், அதனை மிக இல­கு­வாக செய்து முடித்­தி­ருக்­கலாம். 13ஆவது திருத்­தச்­சட்டம் அதற்கு உதா­ரணம். அது இலங்கை விரும்பி கொண்டு வந்­த­தல்ல. இந்­தி­யாவின் தலை­யீட்­டினால் அழுத்­தங்­க­ளினால் கொண்டுவரப்­பட்­டது.

எனவே தமி­ழர்­க­ளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்­பது என இந்­தியா தீர்­மா­னித்து விட்டால், அதனை யாராலும் தடுக்­கவோ, தடை செய்­யவோ முடி­யாது. ஆனால் இந்­தியா அவ்­வா­றா­ன­தொரு முடிவை இல­குவில் எடுத்துவிடாது.

13ஆவது திருத்தச் சட்­டத்தில் உள்ள அதி­கா­ரங்­களைப் பெற்றுக் கொடுப்­ப­தற்குக் கூட தீவி­ர­மாக தலை­யிட முடி­யாத இந்­தி­யாவா, வடக்கு, கிழக்கை தன்­னுடன் இணைத்துக்கொண்டு, தமி­ழர்­க­ளுக்கு சம உரி­மையை பெற்றுக்கொடுக்கப் போகி­றது?

சரி, வடக்கு, கிழக்கை இந்­தியா தன்­னுடன் இணைத்துக்கொள்­­கி­றது என்றே வைத்துக்கொள்வோம்.

அதற்கு இந்­தியா மாநில அந்­தஸ்தை ஒரு­போதும் வழங்­காது. இந்­தி­யாவில் மாநி­லங்­க­ளுக்குத் தான் அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட்­டி­ருக்­கி­றதே தவிர, துணை­நிலை மாநி­லங்­க­ளுக்கு அல்ல.

புதுச்­சேரி போன்ற யூனியன் பிர­தே­சங்­களில் ஒன்­றாகத்தான் வைத்துக்கொள்ளும். ஏனென்றால், அப்­போதுதான் மத்­திய அரசின் நேரடி கண்­கா­ணிப்பு இருக்கும். அதனை சுல­ப­மாக கையாள முடியும்.

புதுச்­சேரி முதல்வர் ரங்­க­சாமி மாநில அந்­தஸ்தை பெற்றுக்கொள்­வ­தற்­காக படா­த­ பா­டு­பட்டு நொந்து போயி­ருக்­கிறார். அதற்­காக பா.ஜ.க.வுடன் கூட்டு வைத்தும் கூட ஒன்றும் நடக்­க­வில்லை.

புதுச்­சேரி போன்ற யூனியன் பிர­தே­சங்­களை மத்­தியில் உள்ள அர­சாங்கம் ஆட்டிப் படைக்­கி­றது.

அங்­குள்ள பொலிஸாருக்கு பொல்­லு­க­ளுடன் செயற்­படும் அதி­காரம் அளிக்­கப்­பட்­டுள்­ளது போல இங்கும் மாகாண பொலி­ஸாருக்கு அதி­காரம் அளிக்­கலாம் என்று அண்­மையில் நாடாளு­மன்ற உறுப்­பினர் சி.வி.விக்­னேஸ்­வரனும் ஜனா­தி­பதி ரணி­லுக்கு ஆலோ­சனை கூறி­யி­ருந்தார்.

இந்­தி­யாவின் இன்­னொரு புதுச்­சே­ரி­யாக மாறு­வ­தற்­கா­கவா தமி­ழர்கள் இந்­த­ளவு போராட்­டங்­க­ளையும் அழிவுகளையும் சந்தித்தார்கள்?

புதுச்சேரி போல, மத்திய அரசின் ஆளுகையின் கீழ் இருப்பதானால், இங்கு ஆளுநரின் அதிகாரத்துக்கு கட்டுப்பட்ட மாகாண சபைகளுடனேயே காலத்தைக் கடத்தி விடலாமே.சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் விழ ஆசைப்படுகிறார் செல்வம் அடைக்கலநாதன். தமிழர்கள் தமது தாயகம் அங்கீகரிக்கப்பட்டு, சுயநிர்ணய உரிமை ஏற்றுக் கொள்ளப்பட்டு, சமஷ்டி முறையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற அபிலாசைகளைக் கொண்டிருக்கிறார்களே தவிர, இந்தியாவின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இணைந்து கொள்வதற்கு கனவு காணவில்லை.

அவ்வாறானதொரு தவறான விம்பத்தை உருவாக்கி இந்தியாவை தவறாக வழிநடத்த அல்லது தவறான ஆசைகாட்ட முனைவதை தமிழ்த் தலைவர்கள் தவிர்த்துக்கொள்வதே நல்லது.

கபில்