எவிடம் எவிடம், மதமடி மதமடி! எவிடம் எவிடம், மலையடி மலையடி!

1968ல் திருமலை கோணேஸ்வரர் ஆலயப் பகுதியை புனித நகரமாக அன்றைய பிரதமர் டட்லி சேனநாயக்க பிரகடனம் செய்ததன் தொடராக இப்போது தமிழர் தாயகத்திலுள்ள வெடுக்குநாறிமலை, குருதூர்மலை, வெருகல்மலை. கீரிமலை என பெயர் கொண்ட இடங்களை தொல்லியல் திணைக்களம் தேடி அலைந்து வர்த்தமானி அறிவித்தலூடாக கையகப்படுத்தி வருகிறது. மலை எதுவும் இல்லாத தமிழர் தாயகம் ‘மலை|’ பேரால் தோண்டப்படுகிறது – அரச மரங்களை நாடி புத்தர் சிலையுடன் ஓடுவது போன்று.

ஒரே நேரத்தில் எத்தனை பிரச்சனைகளுக்கு ஒருவரால் முகம் கொடுக்க முடியும்? மிகவும் சிரமமானது என்று மட்டும் பதில் சொல்லலாம். ஓர் இனம் ஒரே வேளையில் தொடர்ச்சியாக பல ஆண்டுகளுக்கு அடுக்கடுக்கான பிரச்சனைகளுக்கு எவ்வாறு முகம் கொடுக்க முடியும்? இதற்குச் சரியான பதிலாக ஈழத்தமிழர்களின் இன்றைய போராட்டங்களையே சுட்டலாம்.

இலங்கைக்கு பிரித்தானியர் சுதந்திரம் வழங்கியதாகக் கூறிய காலத்திலிருந்து இன்றுவரை அந்தச் சுதந்திரத்தை அனுபவிக்கும் சிங்கள இனம் குடிசன எண்ணிக்கையால் கூடுதலானவர்களாக இருப்பதால் குறைந்த எண்ணிக்கையினரான தமிழ் இனத்தை ஆளப்படும் இனமாக்கிக் கொண்டு ஏற்படுத்திய அயோக்கிய அரசியலே தமிழர் பிரச்சனைகளை அதிகரிக்கச் செய்துள்ளது.

தமிழரின் முதல் அரசியல் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் சிறுபான்மை இனங்களுக்கு நாடாளுமன்றத்தில் ஐம்பதுக்கு ஐம்பது கேட்டது ஆரம்ப அத்தியாயம். காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையிலான அணி தமிழரசுக் கட்சியை உருவாக்கி சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தது அடுத்த அத்தியாயம். பிரதமர்களாகவிருந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கஇ டட்லி சேனநாயக்க ஆகியவர்களுடன் தமிழரசுக் கட்சி ஒப்பந்தம் செய்து ஏமாற்றப்பட்டது இன்னொரு அத்தியாயம்.

1956ல் கிழக்கு மாகாணத்தின் கல்லோயா அபிவிருத்தியை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின்போது இனரீதியான தாக்குதலை முதன்முதலாக தமிழர் அனுபவிக்க நேர்ந்தது. இதில் கிடைத்த ருசி இவ்வாறான பல தாக்குதல்களை சிங்களவர் தொடர வாய்ப்பளித்தது.

இனரீதியான தாக்குதலை தொடர்ந்து மொழிரீதியான தாக்குதலை தமிழர் மீது சிங்கள தேசம் ஆரம்பித்தது. 1944ம் ஆண்டு சட்டசபை அங்கத்தவராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன இதற்கு பிள்ளையார் சுழி போட்டார். நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக ஆங்கிலத்துக்குப் பதிலாக சிங்களத்தைச் சட்டமாக்க வேண்டுமென ஜே.ஆர்.முன்வைத்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது.

1954ல் சிங்கள மகாசபையை உருவாக்கி, அதன் வழியாக பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரான பண்டாரநாயக்க ஜே.ஆர்.ஜெயவர்த்தன முன்னெடுத்த சிங்களம் உத்தியோகபூர்வ மொழி என்பதை, சிங்களம் மட்டும் என்ற சட்டமாக 1956ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இனப்பிரச்சனையுடன் மொழிப்பிரச்சனையையும் இணைத்துவிட்டார்.

1972ல் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க புதிய அரசியலமைப்பை உருவாக்கி இலங்கையை சிறீலங்கா ஜனநாயக சோசலிஸ குடியரசாக மாற்றினார். ஏற்கனவே தமிழருக்கு அரசமைப்பு ரீதியாக இருந்த அற்ப உரிமைகூட புதிய அரசியலமைப்பினால் இல்லாமலாக்கப்பட்டது. 1974ல் சிறீமாவோ அரசு தமிழ் மாணவர் பல்கலைக்கழக அனுமதிக்கு இனரீதியான மொழிரீதியான விகிதாசார முறையில் தரப்படுத்தலை நிறைவேற்றிஇ தமிழ் இளையோரின் எதிர்காலத்தை படுகொலை செய்தது.

இதனால் பாதிக்கப்பட்ட தமிழினம் இனரீதியான, மொழிரீதியான, உயர்கல்வி ரீதியான மூன்று வகை தாக்குதலை எதிர்த்து சமகாலத்தில் போராட நேர்ந்தது.

1944ல் சட்டசபையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன சிங்களத்தை அரசகரும மொழியாக்கும் பிரேரணையை சமர்ப்பித்தபோது மற்றைய சிங்களத் தலைவர்கள் தெரிவித்த கருத்தை இப்போது மீள நினைத்தால் அவர்களின் ஏமாற்று வித்தையை அறிந்து கொள்ளலாம்.

தமிழர் இனப்பிரச்சனையை மொழிப்பிரச்சனையாக எவரும் பார்க்காது தேசிய இன அடிப்படையில் பார்த்து கருத்துகளை கூற வேண்டுமென்று சொன்னவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க. தமிழ் மக்கள் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை கொண்டவர்கள் என்ற தீர்மானத்தை இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி அதே ஆண்டில் நிறைவேற்றியது.

இலங்கையில் இரு மொழியானால் ஒரு நாடு! அது ஒரு மொழியானால் இரு நாடு என்று கருத்துக் கூறியவர் கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா. 1972ல் சிறீமாவோ ஆட்சியில் புதிய அரசியலமைப்பு விவகார அமைச்சராகவிருந்து தமிழருக்கான உரிமைகளை அறவே அகற்றியவர் இதே கொல்வின் ஆர்.டி.சில்வாவே.

தமிழும் சிங்களமும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழிகளாக்கப்பட வேண்டுமென 1955ல் வாதிட்ட லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி என்.எம்.பெரேரா அதற்கன ஒரு பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தவர். அத்துடன் நிற்காது, தேசிய இனப்பிரச்சனையின் அடிப்படையில் சமஷ்டி முறையிலான தீர்வு காணப்படவில்லையானால் தமிழர்கள் பிரிந்து சென்று இந்தியாவுடன் இணைந்து விடக்கூடிய வழிமுறைகள் உண்டென்று அன்று எச்சரிக்கை செய்தவரும் இவரே.

இதே கருத்தை வலியுறுத்தி சோல்பரி அவர்கள் அடங்காத் தமிழர் முன்னணியின் தலைவர் திரு.ஸி.சுந்தரலிங்கத்துக்கு எழுதிய கடிதமொன்று ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மேற்சொல்லப்பட்ட விடயங்களை இன்றைய தமிழ் தேசிய அரசியல்வாதிகளும் அவரது கட்சிகளும் எந்தளவுக்கு நினைவில் கொண்டிருப்பார்களோ தெரியாது.

இனரீதியாகஇ மொழிரீதியாகஇ உயர்கல்வி உரிமை ரீதியாக ஒடுக்கப்பட்டு வந்த ஈழத்தமிழினம் மதரீதியாகத் திட்டமிட்டு அரச உயர்மட்டத்தில் பாகுபாடு காட்டப்பட்ட முதலாவது நிகழ்வு எனது நினைவுக்கு எட்டிய வகையில் 1968ம் ஆண்டில் ஆரம்பமானது. 1965 – 1970 வரையிலான டட்லி சேனநாயக்கவின் தேசிய அரசாங்கத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் மு.திருச்செல்வம் உள்;ராட்சி அமைச்சராகவிருந்தார். 1968 பிற்பகுதியில் அமைச்சருக்கு அறிவிக்காது திருமலை கோணேஸ்வர ஆலய கோட்டைப் பகுதியை புனித நகரமாக பிரதமர் டட்லி சேனநாயக்க தம்மிஸ்டப்படி பிரகடனம் செய்தார்.

தமது அமைச்சின் கீழான விடயத்தை தம்முடன் கலந்தாலோசிக்காது பிரதமர் டட்லி சேனநாயக்க அவரது இஸ்டப்படி கையாண்டதைக் கண்டித்து 1968 நவம்பரில் அமைச்சர் பதவியிலிருந்து மு.திருச்செல்வம் ராஜினாமா செய்தார். இலங்கை அரசியல் வரலாற்றில் இது ஓர் முக்கிய நிகழ்வு. இலங்கையின் பிரதமர்களில் கண்ணியமான அரசியல்வாதியென மதிக்கப்பட்டு வந்த டட்லி சேனநாயக்க, திருமலை விடயத்தில் தாமும் ஒரு சிங்கள பௌத்தரே என்பதை நிரூபிப்பதாக இந்தச் சம்பவம் அமைந்தது.

திருமலையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தமிழர் வழிபாட்டுத் தலங்களை ஆக்கிரமிக்கும் சிங்கள தேசத்தின் செயற்பாடு இப்போது சுனாமி வேகத்தில் வீச்சு கொண்டுள்ளது. இதனை அரசாங்கத்தின் துணைக்கரங்களான தொல்லியல் திணைக்களம்இ வனவளப் பாதுகாப்பு திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி செயலகம், மாகாண செயலக காணிப்பதிவு அலுவலகம் போன்றவைகள் இலகுவாக மேற்கொண்டு வருகின்றன.

இலங்கையின் மத்தியிலுள்ள சிவனொளிபாதமலை (சிவன் – ஒளி – பாதமலை) என்பது இன்று பௌத்தர்களுக்கு மட்டுமான கௌதம புத்தர் பாதம் பட்ட மலையாக அரச இயந்திரங்களால் மாற்றப்பட்டு பராமரிக்கப்பட்டு பூசிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தமிழர் பாரம்பரிய நிலங்கள் தொல்பொருள் என்ற பெயரில் அபகரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு உடந்தையாக சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டு தமிழர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கின்றன.

முக்கியமாகஇ தமிழரின் பாரம்பரிய பிரதேசங்களான வடக்கு கிழக்கில் அரசின் ஆசிர்வாதத்துடன் அத்துமீறல் இடம்பெறுகிறது. வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை எனப்படும் ஆதிசிவன் ஆலயம் என்பவற்றைக் காப்பாற்ற மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். தமிழர் பாரம்பரிய பிதிர்க்கடன் செய்யும் கீரிமலை கேணியையும் தொல்பொருள் திணைக்களம் வர்த்தமானி ஊடாக அடையாளப்படுத்தியுள்ளது. திருமலையில் வெருகல்மலையிலிருந்த நீலி அம்மன் ஆலயத்தை இடித்து தரைமட்டமாக்கிவிட்டு அதில் பௌத்த வழிபாட்டுத் தலம் நிறுவும் முயற்சி எடுக்கப்படுகிறது.

இலங்கையில் இயற்கையாக மலைகளும், நதிகளும் (கங்கைகள்) இல்லாத பகுதியாக வடக்கும் கிழக்கும் உள்ளன. ஆனால், நகரங்களுக்கும் இடங்களுக்கும் அடையாளமாக சில மலைகள் இங்குண்டு. திருமலை, சுதுமலை, கம்பர்மலை என்பது போன்று வழிபாட்டுக்குரிய சில இடங்கள் மலைகள் என்ற பெயரில் அமைந்துள்ளன.

அவ்வாறான குருந்தூர்மலை, வெடுக்குநாறிமலை, கீரிமலை, வெருகல்மலை போன்ற புனித இடங்களை தொல்லியல் திணைக்களம் திட்டமிட்டு இலக்கு வைப்பது தெரிகிறது. இதன் நோக்கம் என்ன? குருந்தூர்மலையில் ஒருநாள் பொங்கலுக்கு காவற்துறை, நீதிமன்றம் என்று அலையும் சூழ்நிலையை பௌத்த வெறியாட்டம் ஏற்படுத்தியுள்ளது. இதுதான் நிலைமை என்றால் ஒவ்வொரு பொங்கலுக்கும் ஒவ்வொரு பூசைக்கும் நீதிமன்றத்திடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்படுகிறது போன்று தெரிகிறது. பௌத்தம் போதிக்கும் தர்மம் தமிழர் தாயகத்தின் அரச மரங்களையும் மலை என்ற பெயரிலுள்ள இடங்களையும் சிங்களமாக்க முனைவதுதானா?

பள்ளிப்பராயத்தில் சொல்லித்தரப்பட்ட ஒரு பாடல் அர்த்தமுள்ளது – எவிடம் எவிடம், புளியடி புளியடி என்பது அப்பாடல். இதனை சற்றே மாற்றி, எவிடம் எவிடம்? மதமடி மதமடி – எவிடம் எவிடம் – மலையடி மலையடி என பாடும் காலம் வந்துள்ளது.

பனங்காட்டான்