இந்த ஏழு மாநிலங்களும் இந்தியாவின் பிரதான பெருநிலப்பரப்புடன் சிலிகுரி எனப்படும் மிகச் சிறிய ஓர் ‘ஒழுங்கை’ நிலத்தால் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சிலிகுரி பிரதேசம் 22 கிலோமீற்றர் அகலமான நீண்ட நிலப்பரப்பாகும். இது திபெத்திற்கு தெற்காகவும் வங்காள தேசத்திற்கு வடக்காகவும் உள்ளது. இதனூடாக ஒரு புகையிரதப்பாதையும் வீதியும் அமைக்கப்பட்டுள்ளன.நிலவழி தொடர்புகள் யாவும் இந்த சிறிய ‘ஒழுங்கை’ வழியாகவே இடம்பெறுகிறது.
இந்த ஏழு மாநிலங்களில் நாகாலாந்தும் மணிப்பூரும் போராட்டக் குழுக்களுக்கு நீண்ட காலம் பெயர் பெற்றவையாக இருந்துள்ளன. 1971ஆம் ஆண்டிற்கு முன்பு, அதாவது இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கிழக்கு பாகிஸ்தான் (பங்களாதேஷ்) மீது படை எடுப்பதற்கும் முன்பாக நாகா போராளிகளுக்கும் மணிப்பூர் போராளிகளுக்கும் கிழக்கு பாகிஸ்தான் ஊடாகவும் சீனா ஊடாகவும் பெரும் ஆயுத உதவிகளும் பண உதவிகளும் கிடைத்து வந்தன.
பங்களாதேஷ் உருவான பின்பு இந்த ஆயுதக்குழுக்களுக்கான உதவிகள் பெருமளவில் குறைந்துவிட்டன என்று குறிப்பிடப்படுகிறது. இந்த வட கிழக்கு இந்திய மாநிலங்களை காப்பாற்றும் வகையில் இந்திரா காந்தியின் நடவடிக்கைகள் இருந்தன என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். இருந்தபோதிலும், மத்திய பெரு நிலப்பரப்பில் இருந்து தூரத்தில் இருப்பதாலும் பங்களாதேஷ் இடையில் இருப்பதாலும் வடகிழக்கு பிராந்தியம் புது டெல்லியிலிருந்து அதிக அளவிலான கவனிப்பை பெற்றுக் கொண்டதில்லை என்பது இந்த பிராந்திய மக்களது பார்வையாகும். இருந்த போதிலும், இன்னமும் அயல் நாடான மியன்மாரில் இருந்து தேவையான ஆயுதங்கள் கிடைப்பதுடன் மியன்மாரிலிருந்து சட்ட விரோத குடியேறிகளும் தொடர்ச்சியாக இந்தியாவின் எல்லைக்குள் வருவதாக புதுடில்லி குற்றம் சாட்டி வருகிறது. கட்டுப்பாடுகள் அற்ற எல்லை பிராந்திய நகர்வுகள் இங்கே அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய காலப்பகுதியில் பிரித்தானிய ஆட்சியாளர்களினால் மேற்கு வங்கத்தின் ஊடாக அதிகளவு தொடர்புகள் வைக்கப்பட்டிருந்த போதிலும், சுதந்திரத்தின் பின்பு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அதிகளவில் கைவிடப்பட்ட பிராந்தியமாக வடகிழக்கு பிராந்தியம் அமைந்துள்ளது. இதற்கு காரணம் சுதந்திரத்தின் பின்பு கிழக்கு பாகிஸ்தான் இங்கு பெரும் தடையாக இருந்து வந்தது. இதனால் பல்வேறு பழங்குடி இனத்தவர்களும் தாம் ஒரு சுதந்திர தேசமாக இயங்குவதால் மட்டுமே விடிவு காலம் ஏற்படும் என்ற ஒரு எண்ணப்பாட்டிலேயே இருந்து வந்துள்ளனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு பழங்குடி குழுக்கள் வாழ்ந்து வருகின்றன. ஒவ்வொருவரும் தமக்கே உரித்தான மொழி வழக்குகளையும் இன சம்பிரதாயங்களையும் கொண்டுள்ளனர். அதேவேளை, பொருளாதார ரீதியாக மிகவும் பிற்படுத்தப்பட்ட வாழ்கையை வாழ்ந்து வருகின்றனர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவ்வப்போது கிடைக்கும் பொருளாதார உதவிகளும் கூட உள்ளூர் மாநில அரசாங்கத்தின் மற்றும் அரச அதிகாரிகளால் சூறையாடப்பட்டு விடுவதாக செய்திகள் கூறுகின்றன.
ஏழு மாநிலங்களில் நாகலாந்து போராட்டங்களும் புரட்சிகளுமே அதிக அளவில் பேசப்பட்ட ஒன்றாக உள்ளன. இங்கு குடியிருக்கும் மக்கள் நாகாக்கள் என அழைக்கப்படுகின்றனர் நாகாக்களில் பல்வேறு பழங்குடிப்பிரிவினர் உள்ளனர். இவர்கள் அஸாமின் தெற்காகவும் அருணாசலப்பிரதேசத்தின் கீழ்பகுதியிலும் மணிப்பூரின் மேல் பகுதியிலுமாக பரந்து வாழ்கின்றனர்.
1918ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானியர் ஆட்சி காலத்திலேயே நாகாக்கள் பிரிவினை கோரி வந்தனர். இந்திய குடியரசுக் கட்டமைப்பிலிருந்து விடுபடுவதில் பெரும் ஆர்வம் கொண்டு செயற்பட்டனர். அந்த காலப்பகுதியில் அரசியல் யாப்பு சீர்திருத்தத்துக்காக இந்திய அதிகாரி சைமனிடம் 1929இல் நாகாக்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் பிற்காலத்தில் சிறப்பு பின்தங்கிய மாநிலமாக நாகலாந்து அறிவிக்கப்பட்டதுடன் கிடைக்கப் பெற்ற சிறிய சலுகைகளுக்கு அரசியல் தலைவர்கள் இணங்கியதை தொடர்ந்து நாகலாந்து இந்தியாவில் இணைவதற்கு உரிய சந்தர்ப்பம் ஏற்பட்டது.
இதேபோல காலாகாலமாக இடம்பெற்ற பல்வேறு ஒப்பந்தங்களும் மிதவாத அரசியல்வாதிகளின் மெத்தனப் போக்கும் அரசியல் தலைவர்கள் தமது சொந்த இலாபங்களில் அதிக ஆர்வம் கொண்டு செயற்பட்டமையும் இந்த ஏழு மாநிலங்களின் அரசியலில் பரவலாக காணப்படுகின்றன.
கிழக்கு பாகிஸ்தான் வங்காளதேசமாக மாற்றப்பட்ட பின்பு இந்த மாநிலங்களுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. 1975 நவம்பரில் சில்லோங் ஒப்பந்தம் எனும் ஓர் ஒப்பந்தத்தின் ஊடாக அனைத்து போராட்டக் குழுக்களும் ஆயுத களைவுக்கு ஒப்புக்கொண்டனர்.
ஆனாலும், மிதவாதிகளால் மீண்டும் துரோகத்திற்கு உள்ளக்கப்பட்டதன் விளைவாக தொடர்ந்து போராட்டங்கள் இடம்பெற்று வந்தன. இதன் பின்பு எழுந்த கம்யூனிஸ சித்தாந்தங்களின் பரவல் மேலும் ஆயுதப்போராட்டங்களையும் இன அழிவுகளையும் பாடமாக கொடுத்தன.
தற்பொழுது முற்றும் முழுதாக சந்தர்ப்பவாத அரசியலில் உள்ளூர் அரசியல்வாதிகள் தமக்கு கிடைக்கும் இலாபக்கணக்கை மையமாக வைத்தே தமது நடவடிக்கைகளை கொண்டு நகர்த்துவதான செய்திகள் எங்கும் காணக் கூடியதாக இருக்கின்றன. மணிப்பூர் விவகாரங்களும் இதே அரசியல் காரணங்களைக் கொண்டே நிகழ்வதாக பார்க்கத் தூண்டுகிறது..
அனைத்து பழங்குடியினரின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இடம்பெற்ற மாணவர்களின் போராட்டத்தை சமூகங்களுக்கு இடையிலான கலவரமாக மாற்றிவிடக் கூடிய பொறிமுறை ஒன்று கையாளப்பட்டு, பழங்குடி மக்களை அவர்களது கிராமங்களில் இருந்து வெளியேற்றி அவர்களது வணக்கஸ்தலங்கள் தீக்கிரையாக்கி தற்காலிக கொட்டகைகளுக்கு அவர்களை நகர்த்தும் நகர்வே தற்போது நிகழ்ந்துள்ளதாக உள்ளூர் ஆய்வுகள் கூறுகின்றன.
உள்ளூர் சட்டசபைகளும் அவற்றின் அதிகாரங்களும் இந்திய கைத்தொழில் வர்த்தக அரச திணைக்களங்களும், சுரங்க அகழ்வு திணைக்களம் ஆகியவற்றுடன் இவர்களால் சான்றிதழ் வழங்கப்பட்ட சர்வதேச சுரங்க அகழ்வு மற்றும் கைத்தொழில் நிறுவனங்களும் பல பில்லியன் இந்திய ரூபா கொண்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திருப்பதன் விளைவாக ஏற்பட்டுள்ள வன்முறைகளாகவே இவற்றை பார்க்க வேண்டியிருப்பதாக குறிப்பிட்ட சில ஆய்வுகள் கூறுகின்றன.
பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இருக்க இடம் இன்றி, தெருக்களிலே அலைந்து திரியும் நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளன. நூற்றுக்கும் அதிகமான உயிர்கள் பலியாகி உள்ளன. எங்காவது ஓர் இடத்தில் அமைதியாக வாழவிட்டால் போதும் என்ற நிலைக்கு பழங்குடி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதையும் தமது வாக்கு அரசியலாக அறுவடை செய்வதில் இந்தியக் கட்சிகள் முனைப்பு காட்டி நிற்கின்றன என்பது தான் உண்மையாகும்.
லோகன் பரமசாமி