இந்து சமுத்திரத்தின் நித்திலம் என பெயர் பெற்ற இலங்கை மீது உலக நாடுகள் அதீத அக்கறைகொள்ள அதன் அமைவிடம் பிரதான காரணமாக அமைந்துள்ளது.
குறிப்பாக இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் இலங்கையை தத்தெடுப்பதற்கு இயலுமான காய்நகர்த்தல்களை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றன.
ஆனால், அண்மைக்காலமாக போதைப்பொருள் கடத்தலுக்கான மத்திய நிலையமாக இலங்கை மாறிவருகின்ற நிலையில் போதைப்பொருள் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றதை புள்ளிவிபர தரவுகள் ஊடாக அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
போதைப்பொருள் கடத்தல், பாவனை மற்றும் கைது சம்பவங்கள் தொடர்பான கடந்த கால தகவல்களை ஆராயும்போது கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மாத்திரம் 152,979 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. குறிப்பாக மேல் மாகாணத்திலேயே அதிகளவு கைது சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
குறித்த காலப்பகுதியில் 69,688 கைது சம்பவங்கள் ஹெரோயின் பாவனை மற்றும் விற்பனை தொடர்பில் பதிவாகியுள்ளதுடன் 53,579 கைது சம்பவங்கள் கஞ்சா போதைப்பொருள் தொடர்பிலும் 686 பேர் போதைப்பொருள் வில்லைகள் தொடர்பிலும் 39 பேர் கொக்கெய்ன் தொடர்பிலும் 197 கைது சம்பவங்கள் ஹஸீஸ் தொடர்பிலும் பதிவாகியுள்ளன.
கடந்த ஆண்டு நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற சுற்றிவளைப்புகளில் 1,677.102 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 17,607.422 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக 283.873 கிலோகிராம் மெத்தம்பேட்டமைன் எனப்படும் ஒருவகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு தகவல்களை ஆராயும்போது கிட்டத்தட்ட 110,031 பேர் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் போதைப்பொருள் தொடர்பான கைது சம்பவங்கள் 13 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக, இலங்கை அரசாங்கமானது போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் இராணுவமயப்படுத்தப்பட்ட அணுகுமுறையை கையாளுகின்றது.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தனது விஞ்ஞாபனத்தில் “போதைப்பொருள் அச்சுறுத்தலை” ஒழித்தலுக்கு முன்னுரிமை கொடுப்பேன் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தமைக்கு இணங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டில் இராணுவமயமாக்கல் துரிதப்படுத்தப்பட்டது. எனினும், போதைப்பொருள் கடத்தல் தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.
போதைப்பொருள் பாவனை தொடர்பில் பதிவான அண்மைய சம்பவங்கள்
போதைப்பொருள் பாவனையால் உயிரிழப்புகளும் தற்போது பதிவாகி வருகின்றன. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் நுகர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் கடந்த 4ஆம் திகதியன்று உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இவரது மரணத்துக்கு அதீத ஹெரோயின் பாவனையே காரணம் என வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதேபோன்று கடந்த ஏப்ரல் மாதம் கம்பளையில் இளம் யுவதியொருவர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கைதான இளைஞன் போதைப்பொருள் பாவனைக்கு தான் அடிமையானவர் என்றும் சம்பவ தினத்தன்று போதையில் இருந்ததாகவும் வாக்குமூலம் அளித்திருந்தார்.
அதேபோன்று ஜூலை மாதம் 27ஆம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இணைந்து 21 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வாண்டில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய தொகையாக இது பதிவாகியுள்ளது.
குறித்த போதைப்பொருட்கள் ஹொங்கொங்கிலிருந்து துபாய் வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பிட்ஸ்.ஏர். 8.டி 822 என்ற இலக்க விமானம் மூலம் மிகவும் சூட்சுமமான முறையில் பொதி செய்யப்பட்டு அனுப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 33 கிலோ நிறையுடைய ஒரு கோடி ரூபா பெறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த பொதிகளை பெற்றுக்கொள்ள வந்த மூவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் போதைப்பொருளை கைமாற்றுவதற்கென பிரத்தியேகமாக கொழும்பு புறக்கோட்டையில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றமை தெரியவந்துள்ளது.
இதையடுத்து அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் விற்பனைக்காக பொதி செய்யப்பட்டு தயார் நிலையிலிருந்த சுமார் 20 கோடி ரூபா பெறுமதியான அம்பிடமின் எனப்படும் ஒருவகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து பத்தரமுல்லை பகுதியில் இயங்கிவரும் மற்றுமொரு நிலையமும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், ரஷ்ய பிரஜை உள்ளிட்ட நால்வர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற பல கோடிக்கணக்கான பேதைப்பொருள் கைப்பற்றப்படுவது இலங்கையில் வாடிக்கையான விடயமாகிவிட்டது.
இந்நிலையில், பாடசாலை மாணவர்களையும் இளையோர்களையும் மையப்படுத்தி போதைப்பொருள் வர்த்தகம் முன்னெடுக்கப்படுவது தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் தற்போது போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு மாதகாலப் பகுதியில் மாத்திரம் யாழ் மாவட்டத்தில் 33 சிறுவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக யாழ். மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. இதுபோல நாட்டின் பல பாகங்களில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் அரசாங்கம் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
போதைப்பொருள் தொடர்பில் வெளிநாடுகளில் பதிவான அண்மைய கைது சம்பவங்கள்
சிங்கப்பூரில் 54 கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் அந்நாட்டு பிரஜை ஒருவருக்கு மரண தண்டனை இம்மாதம் முதல் வாரத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்நாட்டில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் இவ்வாண்டு நிறைவேற்றப்பட்ட மூன்றாவது மரணதண்டனை இதுவாகும்.
அதேபோன்று போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் ஜூலை மாதம் 27ஆம் திகதி குவைத் அரசாங்கத்தால் இலங்கையர் உள்ளிட்ட ஐவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் குவைத் பிரஜை ஒருவரும் எகிப்திய பிரஜை ஒருவரும் குவைத்தின் நாடற்ற பிடூன் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.
அதேநேரம் ஆசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின்னர் பெண்ணொருவருக்கு போதைப்பொருள் குற்றச்சாட்டில் கடந்த மாதம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுபோன்று இலங்கையிலும் போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம் தொடர்பில் நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் தண்டனைகளை கடுமையாக்குவது தொடர்பில் ஆராயப்பட வேண்டும் என்பதே ஆய்வாளர்களது கோரிக்கையாக உள்ளது.
புனர்வாழ்வு மையங்களும் சிகிச்சைகளும்
இலங்கையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு மற்றும் சிகிச்சை வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கென அரச சார்பற்ற நிறுவனங்கள், புனர்வாழ்வு மையங்கள், மறுவாழ்வு பணியகம், தேசிய ஒளடதங்கள் அபாயகர கட்டுப்பாட்டு சபை உள்ளிட்ட பல நிறுவனங்கள் செயற்படுகின்றன. குறிப்பாக குற்றங்களுக்காக சிறைச்சாலையில் உள்ளவர்களுக்கு புனர்வாழ்வு கொடுப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
நாடளாவிய ரீதியில் அம்பேபுஸ்ச, வீராவில, களுத்துறை, பல்லன்சேன, வடரேக, அநுராதபுர, மீதிரிகல, கந்தேவத்த, தல்தென, பல்லேகல ஆகிய 10 சிறைச்சாலைகளிலும் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு தேவையான உடல், உள ரீதியான சிகிச்சைகளுக்கென புனர்வாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேவேளை கிட்டத்தட்ட 13 தனியார் புனர்வாழ்வு நிலையங்களும் இதற்கென பிரத்தியேகமாக இயங்கிவருகின்றன.
எனவே, பொதுமக்கள் புனர்வாழ்வு அல்லது சிகிச்சை தொடர்பான தகவல்களைப் பெற 1927 என்ற துரித இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.
அந்த வகையில் கடந்த ஆண்டு 1930 பேர் போதைப்பொருள் பாவனை காரணமாக சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் 740 பேருக்கு தேசிய ஒளடதங்கள் அபாயகர கட்டுப்பாட்டு சபை ஊடாகவும் 67 பேருக்கு சிறைச்சாலை மறுவாழ்வு பிரிவின் ஊடாகவும் 304 பேருக்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாகவும் 819 பேருக்கு கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தின் ஊடாகவும் சிகிச்சைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும், 58 சதவீதமான திருமணம் ஆகாதவர்களே ஒப்பீட்டளவில், போதைப்பொருள் பாவனை காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் கடந்த ஆண்டில் 1923 ஆண்களும் 7 பெண்களும் போதைப்பொருள் பாவனை தொடர்பில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
பாடசாலை செல்லும் மாணவர்கள் எனும்போது ஒப்பீட்டளவில் 45.3 வீதமான சாதாரண தரம் வரை பயின்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படுகின்ற சிகிச்சைகளை கொண்டு ஆராயும்போது நாட்டில் தற்போது மாணவர்கள் மத்தியிலும் திருமணம் ஆகாதவர்கள் மத்தியிலும் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள அதேவேளை அதிலிருந்து மீண்டுவருவது தொடர்பில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.
சர்வதேச ரீதியில் போதைப்பொருள் கடத்தலுக்கான மத்திய நிலையமாக இலங்கை மாற்றப்பட்டுவருகின்ற நிலையில் அப்பாவி பொதுமக்களின் எதிர்காலம் சிதைக்கப்படுவதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கு காணப்படுகின்றது.
குறிப்பாக, இதுபோன்ற போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அல்லது சிகிச்சைகளை அளிப்பதற்கான வேலைத்திட்டங்களை சம்பந்தப்பட்ட தரப்பினர் துரிதப்படுத்த வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.
நிவேதா அரிச்சந்திரன்