சமூக வலைதளங்கள் மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு பாரிய வளர்ச்சி அடைந்திருக்கின்ற இந்த காலகட்டத்தில் போலி செய்திகளை பரப்பாமல் இருப்பதும் போலி செய்திகளை கண்டுபிடிப்பதற்கான தரவு சரி பார்த்தலை மேற்கொள்வதும் எந்தளவு தூரம் முக்கியத்துவமிக்கது என்பது தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
முக்கியத்துவமிக்க தரவு சரிபார்த்தல் (FactChecking)
தரவு சரிபார்த்தல் (FactChecking) என்பது ஒரு உயிர் காக்கும் கருவியாக இன்றைய நிலையில் உருவாகியிருப்பதையும் காணமுடிகிறது. போலி தகவல்களை தவிர்த்து சரியான தகவல்களை சரிபார்த்து உண்மை தகவலை வெளியிட்டால் உயர்களை பாதுகாக்க முடியும் என்பது நிரூபணமாகி வருகின்றது. அந்தளவு தூரம் இன்று இந்த போலி செய்திகள் மக்களின் வாழ்க்கையை பாதிப்பதுடன் மக்களின் உயிர்களையே காவு கொள்ளும் ஒரு ஆபத்தான விடயமாக உருவாகி வருகிறது.
எனவே, இங்கு தரவு சரிபார்த்தல் என்பது மிக முக்கியமானதாக உருவெடுத்து வருகின்றது. அது தவிர்க்கப்பட முடியாததாக ஊடகவியல் செயற்பாடுகளில் காணப்படுகின்றது.
இங்கு முக்கியமாக போலி மற்றும் தவறான செய்திகள் பரப்பப்படுவதால் உயிரிழப்புகள், வன்முறை மற்றும் அமையின்மை ஏற்படுகின்றன என்பதற்கு மணிப்பூர் சம்பவங்களும் சான்று பகிர்கின்றன.
அதிர்ச்சி தகவல்கள்
இந்தியாவில் மணிப்பூரில் இடம்பெற்ற கலவரங்களுக்கு போலி செய்திகளும் காரணம் என்று அதிர்ச்சி தகவல்கள் அண்மையில் வெளியாகின. கடந்த மே மாதம் 3ஆம் திகதி முதல் சிறுபான்மை பழங்குடி மக்களான குகி இனத்தவர்களுக்கும் பெரும்பான்மை மெய்தே இனத்தவர்களுக்கிடையில் ஆரம்பமான வன்முறைகளில் இதுவரை 150 பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
உலகளாவிய ரீதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தக் கொடூர இன வன்முறைகளில் பலவற்றுக்கு ஆரம்பத்தில் இணையத்தளங்கள் மூலமும் பின்னர் உள்நாட்டு பத்திரிகைகள் மூலமும் பரப்பப்பட்ட போலிச் செய்திகளும் வதந்திகளும் காரணம் என பிராந்திய அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அதாவது, சுரசாந்துபூரிலுள்ள பழங்குடியினத்தவர்களால் படுகொலை செய்யப்பட்ட பெண் ஒருவரது சடலம் என்ற பொய்யான செய்தியுடன் பொலித்தீனால் சுற்றப்பட்ட பெண்ணொருவரின் உடலை வெளிப்படுத்தும் புகைப்படம் இம்பெல் பள்ளத்தாக்குப் பிராந்தியத்தில் பரப்பப்பட்டதையடுத்தே மேற்படி இனக் கலவரமானது கிளர்ந்தெழுந்தது.
எனினும், மேற்படி கலவரத்திற்குக் காரணமான புகைப்படத்திலுள்ள பெண் சுரசாந்துபூரில் படுகொலை செய்யப்படவில்லை எனவும் அவர் டில்லியில் படுகொலை செய்யப்பட்ட ஒருவர் எனவும் பின்னர் கண்டறியப்பட்டுள்ளது.
போலிப் புகைப்படமானது காட்டுத் தீ போல பரவியதால் இந்த வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை போலி செய்திகள் எந்தளவு தூரம் மக்களின் வாழ்க்கையை பாதிக்கின்றன என்பதனையும் ஊடகவியலில் தரவு சரிபார்த்தல் என்பது எந்தளவு தூரம் முக்கியம் என்பதனையும் எடுத்துக்காட்டுகின்றது.
உண்மையான அறிக்கையிடல்
ஊடகவியலாளர்கள் செய்திகளை தவறுகள் இன்றியும் நம்பகரமானதாகவும் அறிக்கையிடவேண்டும். அதிலும் தவறான ஒரு தகவல் வெளியிடப்படும் பட்சத்தில் அதனை சரிபார்த்து மீண்டும் திருத்துவதற்கு ஒருபோதும் பின்வாங்கக்கூடாது. இன்றைய நிலையில் தரவு சரிபார்த்தல் என்பது உலகளவில் ஒரு முக்கியமான காரணியாக வளர்ந்து வருகின்றது.
அதாவது, கவலைக்குரிய விடயம் என்னவென்றால் ஒரு சில சந்தர்ப்பங்களில் தவறுதலாக அறிக்கையிடல் செய்யப்படலாம். அதனால் தவறான செய்தி பரப்பப்படலாம். அதனை திருத்திக் கொள்ளலாம். ஆனால் சமூக ஊடங்களிலும் பிரதான ஊடகங்களிலும் சில வேலைகளில் திட்டமிடப்பட்டே போலியான செய்திகள் பரப்பப்படுகின்றமை கவலைக்குரியதாகும். எனவே, தரவு சரிபார்த்தல் என்பது இங்கு மிக முக்கியமான விடயமாக இருக்கின்றது. இல்லாவிடின் மக்களின் உயிர்களை காவு கொள்ளும் அபாயகரமான நிலையை அது உருவாக்கிவிடும்.
பல சந்தர்ப்பங்களில் ஒரு நிறுவனத்தை அல்லது ஒரு தனிநபரை இலக்குவைத்து போலி செய்திகள் வெளியிடப்படுகின்றன. அந்த போலி செய்திகளை உடனடியாக தரவு சரிபார்த்து உண்மையான விடயத்தை மக்களுக்கு வெளிப்படுத்துவதே இங்கு பிரதான விடயமாகவுள்ளது. சமூகத்தில் இனங்களுக்கு மத்தியில் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் பொய்யான, போலியான செய்திகளை பரப்பும் பட்சத்தில் அது எவ்வாறான விளைவுகள் ஏற்படுத்தும் என்பதற்கு மணிப்பூர் இன்று உதாரணமாக இருக்கின்றது. போலி செய்திகள் எந்தளவுதூரம் ஆபத்தானவை, அபாயகரமானது என்பதை மணிப்பூர் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
எனவே, இங்கு போலி செய்திகளை வெளியிடுவதை முதலில் தடுக்க வேண்டும். போலி செய்திகள் வெளியாகும் பட்சத்தில் அவற்றை சரி பார்த்து உண்மையான செய்தியை வெளியிடுவதற்க ஊடகவியலாளர்கள் முயற்சிப்பது முக்கியமாகும்.
சமூகங்களில் அபாயங்களை, வன்முறைகளை, பிரச்சினைகளை, அமைதியின்மையை தடுப்பதற்கு தரவு சரிப்பார்த்தில் மிக முக்கியமாக இருக்கின்றது. தரவு சரிபார்த்தலுக்கு பல நாட்கள், பல வாரங்கள், பல வருடங்கள் கூட எடுக்கலாம். ஆனால் அந்த செயற்பாட்டை நிறுத்தி விடக்கூடாது.
கடந்த வருடம் பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் எரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார். அங்கு ஒரு தவறான செய்தி பரப்பப்பட்டமையே அதற்கு மிக காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறு செய்வது?
இங்கு தரவு சரிபார்த்தலை ஊடகவியலாளர்கள் முன்னெடுப்பதற்கு பல கருவிகள் சர்வதேச ஊடக கற்கை நிறுவனங்களினால் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்தினாலேயே போலியான தகவல்களை கண்டுபிடித்து உண்மை தகவல்களை வெளியிட முடியும்.
தரவு சரி பார்த்தல் செயன்முறைக்காக ஏழு கருவிகள் சர்வதேச மட்டத்தில் பயன்படுத்தப்படுகின்றன. பொய்ன்டர் என்ற சர்வதேச ஊடக கற்கை நிறுவனம் இது தொடர்பில் ஏழு கருவிகளை அல்லது நுட்பங்களை உருவாக்கியுள்ளது.
ஏழு கருவிகள்
அதாவது பேச்சாளரைத் தொடர்பு கொள்ளல், (சம்பந்தப்பட்ட தரப்பு) ஏனைய தரவு சரிபார்த்தல் மூலங்களை பார்த்தல், உயர்ந்தமட்ட கூகுள் ஆய்வு, ஆழமான இணைய ஆய்வு, பல்வேறு கண்ணோட்டங்களைக் கொண்ட நிபுணர்களை நாடுதல், புத்தகங்களை ஆராய்தல், வேறு மூலங்களை பார்த்தல் ஆகிய இந்த ஏழு கருவிகளே தரவு சரிபார்த்தல் முறைக்காக பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை பயன்படுத்தினால் சந்தேகத்துக்குரிய செய்தி தொடர்பில் உண்மையை கண்டுபிடிக்கலாம்.
தற்போது சகல நாடுகளும் இந்த தரவு சரி பார்த்தல் தொடர்பாக கவனத்தில் செலுத்த வேண்டிய அவசியம் காணப்படுகிறது. சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்ற இந்த யுகத்தில் தவறான செய்திகள் போலி செய்திகள் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டு பரப்பப்படுகின்றன. இதனால் கடுமையான நெருக்கடிகள், பிரச்சினைகள் அமைதியின்மை, வன்முறை போன்றன நிகழ்கின்றன.
நிபுணர்களின் நோக்கு
‘’தவறான செய்திகள் மற்றும் போலி செய்துகள் மக்களை மிக வேகமாக சென்றடைகின்றன. ஆனால் அவற்றை பிழைநீக்கம் செய்து முன்னெடுக்கப்படுகின்ற திருத்த செயல்பாடு அந்தளவு தூரம் கவர்ச்சியாக மக்களிடம் செல்வதில்லை. இவை ஆழமாகவும் மக்களிடம் செல்ல வேண்டும். அதற்காக ஆழமான முறையில் செயற்பட வேண்டும்’’ என்று அமெரிக்காவில் நோர்த் கரோலினா மாநிலத்தில் இந்த தரவு சரிபார்த்தல் செயல்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற மற்றும் பொலிடிபெக்ட் இணையதளத்தின் ஸ்தாபகரமாக இருக்கின்ற பேராசிரியர் பில் அடையர் கூறுகிறார்.
ஊடக அறிவு, Media literacy
அதுமட்டுமின்றி ஊடக அறிவும் தெளிவும் சகலருக்கும் இருக்க வேண்டியது அவசியமாகின்றது. ஆங்கிலத்தில் Media literacy என்று கூறுவார்கள். அதாவது ஒரு செய்தியை புரிந்து கொள்ளக்கூடிய தன்மையை இது குறித்து காட்டுகிறது. ஒரு செய்தியை பார்த்தவுடன் இது உண்மையாக இருக்குமா? அல்லது பொய்யானதாக இருக்குமா? போலியானதாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ளக்கூடிய திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். காரணம் நாம் தற்போது தகவல் உலகில் வாழ்கிறோம். எங்கு பார்த்தாலும் தகவல்கள் குவிந்து கிடக்கின்றன. ஒரு செய்தி வெளியிடப்படுகின்றது என்பதற்காக அதனை முற்று முழுதாக நம்பவேண்டிய அவசியமில்லை. அது தொடர்பாக ஒரு ஆய்வு சகல மட்டத்திலும் இருக்கவேண்டும். அப்படியானால் மட்டுமே அதன் பாதிப்பிலிருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா, இலங்கை என பல நாடுகள் இன்று தரவு சரிபார்த்தல் விடயத்தை மிக அதிகமாக முன்னெடுக்க ஆரம்பித்துவிட்டன. இந்தியாவில் பல நிறுவனங்கள் தற்போது தரவு சரிபார்த்தலை செய்கின்றன. ஆனால் அவற்றையும் தாண்டி அசம்பாவிதங்கள் இடம்பெறுகின்றன.
தரவு சரிபார்த்தல், ஊடக அறிவு, போலி செய்திகளை தவிர்த்தல் என்பன தொடர்பாக மிக தீவிரமாக சிந்திக்க வேண்டிய அவசியத்தை தற்போது மணிப்பூர் சம்பவமும் எடுத்துக் காட்டியிருக்கிறது.
ரொபட் அன்டனி