கொக்குத்தொடுவாயில் காணப்படுவது சரணடைந்த விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளின் சடலங்களே
பொலிஸ் பாதுகாப்பில் நம்பிக்கையில்லை.
விசாரணைகள் அகழ்வை சர்வதேச சமூகம் கண்காணிக்கவேண்டும்…
கொக்குத்தொடுவாயில் காணப்படுவது படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் போராளிகளின் சடலங்களே என கருதுவதாக புதைகுழியை நேரில் சென்று பார்வையிட்ட சமூக ஆர்வலர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
அதன் அருகாமையில் இரண்டு பக்கங்களும் அடுக்கடுக்காக விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளின் சீருடைகள் போன்றவை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேர்காணலின்போது இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியதாவது,
கேள்வி : மனிதபுதைகுழிகள் காணப்படும் பகுதியை பார்வையிட்டவர்களில் நீங்களும் ஒருவர். நீங்கள் அவதானித்தவற்றை தெரிவிக்க முடியுமா?
பதில் : கொக்குத்தொடுவாயில் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியை நாங்கள் சென்று பார்வையிட்டபோது மனித எச்சங்களின் எலும்புகள் மேல் நோக்கி காணப்பட்டன.
விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் பயன்படுத்தியிருக்கக்கூடிய அணிந்திருக்கக்கூடிய சேர்ட்கள், மேலாடைகள் காணப்படுகின்றன. பெண்கள் பயன்படுத்தக்கூடிய மேலாடைகளும் காணப்பட்டன.
உதாரணமாக, இந்த மனித எச்சங்கள் நீண்ட காலமாக இருந்ததாக கருத முடியாதவண்ணம் காணப்படுகின்றன.
அது ஒரு மீற்றர் ஆழமான பகுதியிலேயே காணப்பட்டது. அதன் மூலம் எங்களுக்கு தோன்றுவது என்னவென்றால், இது 10 தொடக்கம் 15 வருட காலத்துக்குட்பட்டதாக இருக்கலாம். இறுதிப்போரில் – இறுதிப்போர் நடைபெற்ற காலத்தில் புதைக்கப்பட்டதா அல்லது கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதா என்ற கேள்விகள் எங்களுக்கு எழுந்துள்ளன.
இது இறுதிப்போரில் சரணடைந்த விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளின் உடல் எச்சங்கள் என்பதே உண்மையில் எங்கள் கண்முன் நிற்கின்றது.
பெண்களின் உள்ளாடைகளும் காணப்படுவதால் இது இறுதிப்போரில் சரணடைந்த முன்னாள் போராளிகளின் உடல்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நானும் அவ்வாறே நம்புகின்றேன்.
கேள்வி : அவை விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களின் உடல்கள் என்ற கருத்து காணப்படுகிறது. அதனை உறுதி செய்யும் விதத்தில் எதனையாவது அவதானித்தீர்களா?
பதில் : ஆம். அவை விடுதலைப்புலிகளின் உடல்கள் என்றே நாங்கள் நம்புகின்றோம். காரணம், விடுதலைப்புலிகளின் சீருடையாகவே அதனை நாங்கள் பார்க்கின்றோம்.
அது 1984ஆம் ஆண்டுக்குப் பின்னர் விடுதலைப்புலிகள் எவரும் நடமாடாத இடம் இது. முல்லைத்தீவிலிருந்து கொக்கிளாய் செல்கின்ற ஒரு நேரடிப்பாதை. குறுக்குப்பாதையும் இல்லை. இந்த புதைகுழி பிரதான வீதியில் உள்ளது.
இது விடுதலைப்புலிகளின் உடல்களா என சொல்வதற்கு அவர்களின் சீருடைகளை ஒத்த சீருடைகளை நாங்கள் அவதானித்திருந்தோம்.
இந்த உடல்கள் இராணுவத்தினருடையவை என்றால் அவர்கள் அங்கு அதனை தாண்டியிருக்கமாட்டார்கள். கொழும்புக்கு அவர்களின் வீட்டுக்கு கொண்டு சென்று கொடுத்திருப்பார்கள். இது விடுதலைப்புலிகளின் மனித எச்சங்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இறுதிப்போரில் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளது எங்கள் உறவுகளின் உடல்களாகவே இந்த மனித எச்சங்களை நாங்கள் பார்க்கின்றோம். அதனை உறுதி செய்ய விரும்புகின்றோம்.
இது விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களின் உடல்களாக நம்புவதற்கான காரணம் ஒன்று உள்ளது. இதனை நாளை மறுதினம் நீதிமன்றம் அகழ்வு செய்து ஆராயவுள்ளது அதன்போது விடுதலைப்புலிகள் பயன்படுத்தக்கூடிய இலக்கத்தகடுகள் உடைகள் போன்றவற்றின் மூலம் உண்மை தெரியவரலாம். மேலும் அகழ்வு இடம்பெறுகின்றபோதே உண்மை தெரியவரலாம்.
கேள்வி : குறிப்பிட்ட பகுதி யுத்த காலத்தில் யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டது?
பதில் : இந்த பகுதியிலிருந்து 1984ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் மக்களை அவசரமாக வெளியேற்றியது. அதன் பின்னர் 2009 வரை இந்த பகுதி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.
எங்கள் பொதுமக்கள் எவரும் அங்கு வாழவில்லை. இராணுவத்தினரின் முழு கட்டுப்பாட்டில் அந்த பகுதி காணப்பட்டது. நாயாற்றுப்பாலத்துக்கு அப்பால் இராணுவத்தினரின் முழு பாதுகாப்பில் அந்த பகுதி காணப்பட்டது.
ஆகவே இந்த மனித எச்சங்கள் அதற்கு முன்னர் இடம்பெற்ற போரில் அல்லது மோதலில் கொல்லப்பட்டவர்களுடையது என கருதுவதற்கான வாய்ப்பு இல்லை. அந்த சந்தேகம் எங்களுக்கு எழவில்லை.
ஆனால், ஒன்றை மாத்திரம் தெரிவிக்க முடியும். இவை கடத்தப்பட்ட அல்லது சரணடைந்த விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களின் உடல்களாக இருக்கலாம். தற்போது காணப்படுகின்ற சீருடைகள் விடுதலைப்புலிகளுடைய சடலங்களாக இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. மேலும், அகழ்வுகள் இடம்பெறுகின்றபோதுதான் அவற்றில் பொதுமக்கள் காணாமலாக்கப்பட்டவர்களின் உடல்கள் உள்ளனவா என்பது தெரியவரும்.
கேள்வி : நீதிபதியின் உத்தரவில் பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மனித புதைகுழிக்கு பாதுகாப்பு அளிக்கும் விதம் குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன?
பதில் : நீதிபதியின் உத்தரவின் பேரில் மனித எச்சங்கள் காணப்பட்ட பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு வழங்குகின்றனர். ஆனால், பொலிஸார் மீது எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லாதபடியினால் நாங்கள் அந்த பிரதேச மக்களை உள்வாங்கி சுழற்சி முறையிலான அவதானிப்பு குழுக்களை நிறுத்தியுள்ளோம்.
இராணுவத்தினர் அரசாங்கத்தின் துணையுடன் பொலிஸார் அந்த பகுதியிலிருந்து சான்றுப் பொருட்களை அகற்றக்கூடிய நிலை உருவாகலாம் என்பதற்காகவும், தடயப்பொருட்களின் சாட்சிப்பொருட்கள் ஒருபோதும் அழியக்கூடாது என்பதற்காகவும் சமூக செயற்பாட்டாளர்களான நாங்கள் அந்த கிராமக்களுடன் சேர்ந்து அவற்றை மறைமுகமாக அவதானித்துக்கொண்டிருக்கின்றோம். பொலிஸார் எதை செய்தாலும், வரலாறே சொல்கின்றது பொலிஸார் ஒரு வழக்கை தொடர்ந்தால் அதில் நூறு பொய் இருக்கும். பொலிஸாரின் வழக்குகள் பெரிதாக வென்றதும் இல்லை.
இது ஒரு மனித எச்சம். அதன் சான்றுப்பொருட்களை அழித்துவிடுவார்கள் என்ற அச்சம் என்னிடமும் பொதுமக்களிடம் காணப்படுகின்றது. ஆகவே அதனை கருதி நாங்கள் சுழற்சி முறையிலே சிறு சிறு குழுக்களாக நாங்கள் அவதானித்து வருகின்றோம். பொலிஸார் சான்றுகளை அழித்துவிடுவார்கள் என்ற அச்சம் காரணமாக நாங்கள் இவ்வாறான குழுக்களை அமைத்து அவற்றை அவதானித்து வருகின்றோம்.
கேள்வி : இந்த மனித புதைகுழி விடயத்தில் அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் – சர்வதேச சமூகம் எடுக்கவேண்டிய நடவடிக்கை என்ன என நீங்கள் நினைக்கின்றீர்கள்?
பதில் : வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் தொடர்பில் அரசாங்கம் கரிசனை கொண்டதும் இல்லை. கரிசனை செய்யப்போவதுமில்லை. மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. இதேபோல வடக்கிலே அடுத்து அகழப்படக்கூடிய இடமாக இது கருதப்படுகின்றது.
நீர் விநியோக குழாய்க்காக தோண்டப்பட்ட பகுதியில் இரண்டடி அகலம் ஓரடி ஆழத்தில் தோண்டப்பட்ட குழியில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், அதன் அருகாமையில் இரண்டு பக்கங்களும் அடுக்கடுக்காக உடுப்புகள் அதாவது விடுதலைப்புலிகளின் சீருடைகள் போன்ற சீருடைகள் இருப்பதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன.
அவற்றை அகழ்வு செய்கின்ற போதுதான் எத்தனை உடல்கள், மனித எச்சங்கள் உள்ளன என்பதை கண்டுபிடிக்கக்கூடியதாக இருக்கும். ஆனால் இலங்கை அரசாங்கம் இது குறித்து கரிசனை கொண்டு சரியான தீர்வினை வழங்கப்போவதில்லை. காரணம், ஜனாதிபதியும் நீதியமைச்சரும் தெளிவாக சொல்லிவிட்டனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்திலே உள்ளதால் நாங்கள் அது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என நீதியமைச்சர் தெரிவித்துவிட்டார்
உண்மையில் இந்த மனித புதைகுழிகள் என்பது இறுதிப்போரில் சரணடைந்த ஆண், பெண் போராளிகளுடையனவாக இருக்கலாம் என்ற சந்தேகம் காணப்படுகின்றது. பகுப்பாய்வு முடிவுகள் போன்றவை வந்த பின்னர்தான் அவற்றை உறுதி செய்ய முடியும்.
அனைத்தும் அரசாங்கத்தின் கரங்களில் உள்ளதால் பொலிஸார், இது தொடர்பான திணைக்களங்கள் அனைத்தும் பொலிஸாரின் கரங்களில் உள்ளதால் அவர்கள் சரியான அறிக்கையை கூட மாற்றியமைக்கக்கூடியவர்கள். ஆகவே இந்த அகழ்வுகளும் விசாரணைகளும் சர்வதேச கண்காணிப்பின் கீழ் இடம்பெற வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள்.
இந்த செய்தி ஊடாக நாங்கள் உலக நாடுகளை பகிரங்கமாக கேட்டுக்கொள்வது என்னவென்றால், இந்த புதைகுழி அகழ்வும் விசாரணையும் இடம்பெறும்போதும் உலக நாடுகள் தங்கள் கண்காணிப்பாளர்களை அனுப்ப வேண்டும். அப்போதுதான் இந்த விசாரணை திருப்திகரமாக இருக்கும்.
இதிலே ஒரு பகுதியினருக்கு பல சந்தேகங்கள் உள்ளன. காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு பெரும் சந்தேகம் உள்ளது. புதைகுழியில் காணப்படுவது சீருடையாக இருந்தாலும் சரி, காணாமல்போன பொதுமக்களும் இதற்குள் இருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கின்றனர்.
இதேபோல இறுதிப்போரில் பெற்றோர் பிள்ளைகளையும், மனைவி கணவரையும், கணவர் மனைவியையும் இராணுவத்தினரிடம் ஒப்படைத்த சம்பவங்கள் உள்ளன. அந்த முன்னாள் போராளிகளின் உடல்களாக இவை இருக்கலாம் என்ற சந்தேகங்களும் உள்ளன.
ஆகவே இந்த விசாரணைக்கு சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பு மிக அவசியம்.
இந்த மனிதப்புதைகுழிகள் குறித்த விசாரணைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் விரைந்து உங்கள் கண்காணிப்பாளர்களை அனுப்புங்கள் என சர்வதேச சமூகத்தை, உலக நாடுகளை கேட்டுக்கொள்கின்றோம்.
நேர்காணல் – ரஜீபன்