தமிழ்க் கட்சிகளை தங்களுக்குள் மோதிக் கொள்ளச் செய்து விட்டு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சாவகாசமாக இந்தியப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் மத்தியில் ஆழமான விரிசல்கள் ஏற்பட்டு, அவை கொள்கை முரண்பாடுகளாக மாறத் தொடங்கி விட்டன.
அதன் அடிப்படையில், ஒன்றையொன்று பிய்த்து பிடுங்கும் நிலையும் உருவாகியிருக்கிறது.
இந்தியப் பிரதமருக்கு கடிதம் அனுப்பிய விடயத்தில் ஒவ்வொரு தரப்பும் தங்களை நியாயப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுலாக்கினால் போதும் என்றளவில், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும், தமிழ் மக்கள் கூட்டணியும் கடிதம் அனுப்பியிருந்தன.
அந்தக் கடித்தில், இரா.சம்பந்தன் ஒப்பமிட மறுத்தார். 13 ஆவது திருத்தத்தை மட்டும் வலியுறுத்துவதால் தான், இரா.சம்பந்தன் அதில் ஒப்பமிடவில்லை என்ற காரணமும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்தியாவை இரா.சம்பந்தன் எதிர்க்கிறார், இந்தியாவின் தலையீட்டை அவர் விரும்பவில்லை என்ற தோற்றப்பாட்டை உருவாக்க ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவர்கள் முற்பட்டனர்.சில ஊடகங்களும் அவ்வாறான ஒரு விம்பத்தை உருவாக்கவே முற்பட்டன.
தற்போது, இந்தியாவுக்குப் பின்னால் நிற்றல், அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகத்துக்குப் பின்னால் நிற்றல் என்ற போட்டி ஒன்று தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மத்தியில் உருவாகியிருப்பதாக தெரிகிறது.
தாங்கள் இந்தியாவுக்குப் பின்னால் நிற்பதாக காட்டிக் கொள்ளும் தரப்பினர், 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் செல்ல இந்தியா விரும்பாது, இந்தியா விரும்பாத சமஷ்டியை நாங்கள் வலியுறுத்த முடியாது என்று நியாயப்படுத்தி வருகின்றனர்.
அதேவேளை, 13 ஐ வலியுறுத்த மறுக்கும் தரப்பினரை அவர்கள் இந்திய விரோதிகளாக சித்திரிக்கவும் முற்படுகின்றனர்.
இதன் மூலம், 13ஐ ஏற்காத தரப்பினரை இந்தியாவிடம் இருந்து அந்நியப்படுத்த முனைகின்றனர்.
அவர்கள் தமிழரசுக் கட்சியினரை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகத்துக்குப் பின்னால் இருப்பதாக கருதினாலும், பிராந்திய அரசியல் விவகாரங்களில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒத்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றன என்பதே உண்மை.
இந்தியாவை மீறிச் செயற்படும் நிலையில் அமெரிக்கா இல்லை. அவ்வாறு செயற்பட விரும்பியிருந்தால், 1980களில் ஜே.ஆர்.ஜயவர்த்தன அரசாங்கம் ஆட்சியில் இருந்த போதே, அமெரிக்கா இங்கு தளம் ஒன்றை அமைத்திருக்கும்.
இந்திய-– அமெரிக்க உறவுகள் அதிகம் நெருக்கமில்லாமல் காணப்பட்ட அத்தகைய சூழலிலேயே இந்தியாவைப் பகைக்க அமெரிக்கா விரும்பவில்லை.
இப்போது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அரசியல், இராஜதந்திர, பாதுகாப்பு, மூலோபாயக் கூட்டுகளும் உறவுகளும் அதிகரித்திருக்கின்றன.
கடைசியாக இந்தியாவில் அமெரிக்காவின் போர்க்கப்பல்களை பழுது பார்த்து புதுப்பிப்பதற்கான ஐந்து ஆண்டு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளது.
எண்ணூர் அருகே, காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள தளத்தில் அமெரிக்க போர்க்கப்பல்களை பழுதுபார்க்கும் பணிகளும் தொடங்கப்பட்டு விட்டன.
இந்தளவுக்கு அமெரிக்க,- இந்திய உறவுகளில் நெருக்கம் காணப்படும் நிலையில், தமிழ்க் கட்சிகள் அமெரிக்காவின் ஆள் என்றும், இந்தியாவின் ஆள் என்றும், இந்திய விரோதி என்றும் ஒருவரை ஒருவர் பார்த்து மோதிக் கொண்டிருப்பது தான் வேடிக்கை.
இவ்வாறான நிலையில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குடனான சந்திப்பின் போது, இந்தியப் பிரதமருக்கு தனியான கடிதம் அனுப்ப நேரிட்டமைக்கான காரணத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வெளிப்படுத்தியிருக்கிறார்.
13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும்படி இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஆறு தமிழ் கட்சிகளின் தலைவர்கள் முன்னர் கடிதம் அனுப்பி இருந்தனர்.
அந்தக் கடிதம் அனுப்பப்பட்ட பின்னர், தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக சுமந்திரன் கூறியிருக்கிறார்.
முன்னதாக இந்தியா பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும், தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக அதிகபட்ச அதிகாரப்பகிர்வு இருக்க வேண்டும் என்றும் நிலைப்பாட்டை கொண்டிருந்தது.
அந்தக் கடிதம் அனுப்பப்பட்ட பின்னர் இந்தியா அதிகபட்ச அதிகாரப்பகிர்வு விடயத்தை வலியுறுத்தாமல், 13ஆவது திருத்தச் சட்டத்தை மாத்திரம் வலியுறுத்துகிறது, இது தமிழர்களுக்கான ஒரு பின்னடைவு என்றும் சுமந்திரன் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழர் பிரச்சினைக்கான தீர்வு 13ஆவது திருத்தச் சட்டம் தான் என்று இந்தியா கூறியிருந்தாலும், அவ்வப்போது அதிகபட்ச அதிகாரப்பகிர்வு குறித்தும் கருத்துக்களை வெளியிட்டு வந்தது.
தமிழ்க் கட்சிகளின் கடிதத்திற்கு பின்னர் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் செல்வது பற்றிய இந்திய நிலைப்பாடு மாற்றமடைந்திருப்பது உண்மையானால், அந்த நிலைப்பாட்டுக்கு பொறுப்புக்கூற வேண்டியது தமிழரசுக் கட்சி உள்ளிட்ட கடிதத்தில் கையெழுத்திட்ட அத்தனை தமிழ்க் கட்சிகளும் தான்.
அதிகாரப்பகிர்வு விடயத்தில் இந்திய நிலைப்பாடு மாறி இருந்தால் அது தமிழர் பிரச்சினை தொடர்பான அணுகுமுறைகளில் ஏற்பட்டுள்ள ஒரு பின்னடைவு தான்.
இதன் அடிப்படையில் தான் தமிழரசுக் கட்சி 13 ஆவது திருத்தச் சட்டத்தை மாத்திரம் வலியுறுத்தாமல், அதிகாரப்பகிர்வு தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கடிதத்தில் வலியுறுத்தி இருக்கிறது.
அதேவேளை, சமஷ்டி தீர்வு தொடர்பாக, அந்த கடிதத்தில் இரா.சம்பந்தன் சுட்டிக் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டைக் கிளப்பியிருக்கிறார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்.
தமிழர் பிரச்சினை தீர்வு தொடர்பாக இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு தான் இரா.சம்பந்தன் கோரியிருக்கிறாரே தவிர, சமஷ்டியை வலியுறுத்தவில்லை.
13 ஆவது திருத்தச்சட்ட அமுலாக்கத்தையும், மாகாணசபைத் தேர்தலையும் தான் இந்தியா வலியுறுத்தியது, அதற்கு இலங்கை வாக்குறுதியும் கொடுத்தது.
எனவே, மறைமுகமாக 13 ஆவது திருத்தச் சட்டத்தையே தமிழரசுக் கட்சி வலியுறுத்தியிருக்கிறது என்பது கஜேந்திரகுமாரின் குற்றச்சாட்டு.
தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழ்க் கட்சிகள் ஒத்த நிலைப்பாட்டில் இல்லை, தீர்வு தொடர்பாகவும் ஒத்த கருத்து கிடையாது.
இந்தியாவுக்குப் பின்னால் போகவே பெரும்பாலான கட்சிகள் விரும்புகின்றன. இந்தியா விரும்பாத எதையும் செய்வதற்கும் தயாராக இல்லை.
அவ்வாறு நோக்கினால் கஜேந்திர குமாரின் குற்றச்சாட்டு மெய்யானதே.
அதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பில், 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறும் கேட்கமாட்டோம், அதனை நிராகரிக்கவும் மாட்டோம் என்று நழுவலான பதிலைக் கூறியிருந்தார் சுமந்திரன்.
ஆக, தமிழ்த் தேசியக் கட்சிகள் இப்போது, ஒரு இனத்தின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான தகை மையை இழந்து கொண்டிருக்கின்றன.
தமிழ்ச் சமூகத்தின் பாரிய உயிர்த் தியாகங்கள், போராட்டங்களுக்குப் பின்னர், கிடைக்கும் வாய்ப்புகளை அவை சிதைத்துப் பலவீனப்படுத்துகின்றன.
அற்ப அதிகாரங்களுக்குள் தங்களின் அபிலாசைகளை சுருக்கிக் கொண்டு, இந்தியாவையோ, அமெரிக்காவையோ திருப்திப்படுத்தினால் போதும் என்றளவில் சிந்திக்கத் தொடங்கி விட்டன.
மக்களின் உரிமைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் திறன், ஆளுமை அவர்களிடம் இல்லாதமையே இந்த நிலைக்கு காரணம்.
சமஷ்டிக்கான போராட்டத்தை தீவிரமாக முன்னெடுக்கும் ஒரு தலைமைத்துவமும், அமைப்பும் தோற்றம் பெறும் வரையில், இந்த அரசியல் சிதைவுகள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கும்.
கபில்