தமிழ் தேசி­யமும் அபி­லா­ஷையும்

தமிழ் தேசியம் பேசு­ப­வர்கள், தமது சமூ­கத்தின் அபி­லா­ஷை­க­ளையும் அவர்­களின் இருப்­பையும் பற்றிச் சிந்­திக்க வேண்டும் என்று அண்­மையில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பு ஒன்றில் குறிப்­பிட்­டி­ருக்­கிறார் பேரா­சி­ரி­யரும், யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக வேந்­த­ரு­மான பத்­ம­நாதன்.

இது­வரை காலமும் தாம் அர­சியல் பேச­வில்லை என்றும், அர­சி­யலில் ஈடு­ப­ட­வில்லை என்றும் கூறி­யி­ருந்த அவர், இப்­போது தமிழ் மக்­களின் இருப்பு, அவர்கள் எதிர்­கொள்ளும் ஆபத்து ஆகி­யவை பற்­றியும், எதிர்­காலம் குறித்தும் கருத்­துக்­களைப் பகிர்ந்­தி­ருக்­கிறார்.

தமிழ்த் தேசியம் பேசு­ப­வர்­களை சமூ­கத்தின் அபி­லா­ஷை­களை பிர­தி­ப­லிக்­கா­த­வர்கள், அவர்­களின் இருப்பை பற்றி சிந்­திக்­கா­த­வர்கள் என்­பது போல சித்­தி­ரிக்­கி­றது பேரா­சி­ரியர் பத்­ம­நா­தனின் கருத்து. அவ்­வா­றாயின், தமிழ்த் தேசியம் தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை புறக்­க­ணிக்­கி­றதா என்ற கேள்வி எழு­கி­றது.

பேரா­சி­ரியர் பத்­ம­நாதன் குறிப்­பிட்­டுள்­ளது போல, இன்­றைக்கு தமிழ் மக்­களின் வாழ்வும் எதிர்­கா­லமும் கேள்­விக்­குள்­ளாக்­கப்­பட்டு வரு­கி­றது.

வெளிப்­ப­டை­யாக நடந்து கொண்­டி­ருக்­கின்ற ஆக்­கி­ர­மிப்­பு­க­ளுக்கு அப்பால், வெளியே தெரி­யாத- ஒரு கட்­ட­மைக்­கப்­பட்ட இன அழிப்பு நடந்து கொண்­டி­ருக்­கி­றது.

இன்னும் ஐந்து ஆண்­டு­களில் வடக்கு தமி­ழர்­களின் மாகாணம் என்ற நிலை மாறி விடும் என்று பேரா­சி­ரியர் பத்­ம­நாதன் எச்­ச­ரிக்கும் அள­வுக்கு, இங்கு கட்­ட­மைக்­கப்­பட்ட இன­அ­ழிப்பு நடந்­தேறிக் கொண்­டி­ருக்­கி­றது.

இன­அ­ழிப்பு என்­பது ஒரு இனத்தைக் சேர்ந்­த­வர்­களை கொலை செய்­வது மாத்­தி­ர­மல்ல. அவர்­களின் இருப்பை, கலா­சா­ரத்தை, வாழ்­வி­யலை, நிலத்தை, நிலம் மீதான உரி­மையை இல்­லாமல் செய்­வதும், இன­அ­ழிப்புத் தான்.

பேரா­சி­ரியர் பத்­ம­நாதன் இதனை இப்­போது தான் முதல்­மு­றை­யாக வெளிப்­ப­டுத்­து­கிறார் என்று தெரி­கி­றது. இதற்கு முன்னர் இது­பற்றி அவர் எச்­ச­ரித்­தி­ருக்­கி­றாரா என்று தெரி­ய­வில்லை.

அவரும் சரி, அவர் போன்ற புல­மை­யா­ளர்­களும் சரி, இந்தக் கட்­ட­மைக்­கப்­பட்ட இன­அ­ழிப்பை பற்றி அதிகம் பேசு­வ­தில்லை. வெளிப்­ப­டுத்­து­வ­தில்லை. அல்­லது வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு தயங்­கு­கின்­றனர் என்­பதே உண்மை.

பேரா­சி­ரியர் பத்­ம­நாதன் வேந்­த­ராக இருக்­கின்ற யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­கழகம் இன்­றைக்கு பெரும்­பான்மைச் சிங்­க­ள­வர்­களின் ஆதிக்­கத்­துக்கு உள்­ளா­கி­யி­ருக்­கி­றது. கலைப்­பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்­களில் சிங்­கள மாண­வர்­களின் ஆதிக்­கமே அதி­க­ரித்­தி­ருக்­கி­றது.

யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழகம் தமி­ழர்­களின் சொத்­தாக இருந்த காலம் இப்­போது மாறிக் கொண்­டி­ருக்­கி­றது.

யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களும், மாணவர் ஒன்­றி­யமும், தமிழ்ச் சமூ­கத்தின் அர­சியல் அபி­லா­ஷை­களை பிர­தி­ப­லித்த, அதனை அடை­வ­தற்­கான போராட்­டங்­க­ளுக்கு முன்­னோ­டி­யாக காணப்பட்ட வர­லாறு இருந்­தது. அந்த வர­லாறு இப்­போது மாறிக் கொண்­டி­ருக்­கி­றது.

திட்­ட­மிட்டு சிங்­கள மாண­வர்கள் அதி­க­ளவில் புகுத்­தப்­ப­டு­வதும், தமிழ் மாண­வர்கள் வெளி­யி­டங்­களில் உள்ள பல்­க­லைக்­க­ழ­கங்­களை நாடி ஓடு­வதும், யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் பாரம்­ப­ரி­யமும், மரபும் மாற்­றப்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக அமைந்­தி­ருக்­கின்­றன. இந்த மாற்றம் கடந்த 14 ஆண்­டு­களில் திட்­ட­மிட்டு நிகழ்ந்­தே­றிய ஒன்று.

ஆனாலும் இது­பற்றி பல்­க­லைக்­கழக மட்­டங்­களில் உள்ள துறைசார் நிபு­ணர்கள், கல்­வி­மான்கள் அதிகம் பேசி­ய­தில்லை. மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தி­ய­தில்லை. வெள்ளம் தலைக்கு மேல் போன பின்னர் தான், இதனை அவர்கள் மக்­க­ளுக்கு கூற­வி­ழை­கின்­றனர்.

இனி யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழ­கத்தை சிங்­கள ஆதிக்­கத்தில் இருந்து மீட்க முடி­யாது. பேரா­சி­ரியர் பத்­ம­நாதன், இதனை வெளிப்­ப­டுத்­திய பின்னர், புத்தர் சிலை கொண்டு வரப்­பட்டு, யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழ­கத்­துக்குள் ‘போயா’ வழி­பா­டு­களும் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன.

யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் நிலை­யுடன் ஒப்­பீடு செய்து தான்,  வடக்கு தமி­ழர்­களின் நிலம் என்ற நிலை 5 ஆண்­டு­களில் மாறி விடும் என்று பேரா­சி­ரியர் பத்­ம­நாதன் கூறி­யி­ருக்­கிறார்.

அவர் இந்தக் கருத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்ற சூழலும், வடக்கின் முன்னாள் முத­ல­மைச்­ச­ரான பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சி.வி.விக்­னேஸ்­வரன், தமி­ழர்­களின் நிலமும் இருப்பும் பறி­போன பின்னர் சமஷ்­டியை அடைந்து என்ன செய்யப் போகி­றீர்கள் என்று தமிழ்த் தேசி­ய­வா­தி­களை நோக்கி கேள்வி எழுப்­பி­யி­ருக்­கின்ற சூழலும் ஒன்று தான்.

தமி­ழர்­களின் இருப்பு மற்றும் நிலம் ஆகி­ய­வற்­றுக்கு ஏற்­பட்­டி­ருக்­கின்ற அச்­சு­றுத்­தலை 13 ஆவது திருத்தச் சட்ட அமு­லாக்­கத்தின் மூலம் தடுக்­கலாம் என்ற எதிர்­பார்ப்பின் அடிப்­ப­டையில் தான் இத்­த­கைய கருத்­துக்கள் ஒருங்­கி­ணைக்­கப்­ப­டு­வ­தாக தெரி­கி­றது. தமி­ழர்­களின் இருப்­பையும், அபி­லா­ஷை­க­ளையும் உள்­வாங்­கி­யதால் தான் தமிழ்த் தேசியம் இன்­றைக்கும் நிலைத்­தி­ருக்­கி­றது.

தமி­ழர்­களின் அபி­லா­ஷை­களை தமிழ்த் தேசியம் புறக்­க­ணித்­தி­ருந்தால், தமிழ் மக்­களால் அது நிரா­க­ரிக்­கப்­பட்­டி­ருக்கும்.

இன்­றைக்குத் தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை ஒரு­மித்த குர­லாக வெளிப்­படுத்த வேண்டும் என்­பது தான் முக்­கி­ய­மா­னது.

13ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தினால், தமி­ழரின் நிலங்கள் அப­க­ரிக்­கப்­ப­டு­வதை தடுத்துவிட முடியும் என்­பதோ இருப்பை காப்­பாற்றிக் கொள்ள முடியும் என்­பதோ பகல் கனவு.

சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம், 13ஆவது திருத்தச் சட்­டத்தை தங்­களின் விருப்­புக்­கேற்ப கையாளும் கரு­வி­யா­கவே பார்க்­கி­றது. எப்­போது அது அவர்­க­ளுக்கு ஒத்து வராதோ அப்­போதே அதனை தூக்­கி­யெ­றிந்து விடு­வார்கள். இதனை சிங்­கள பௌத்த பூமி என்றும், தங்­களால் எங்­கேயும் புத்தர் சிலையை வைக்கும் உரிமை உள்­ள­தென்றும், சரத் வீர­சே­கர போன்­ற­வர்கள் கூச்­ச­மே­யில்­லாமல் முழங்­கு­கி­றார்கள்.

அப்­ப­டிப்­பட்­ட­வர்­க­ளுக்கு 13ஆவது திருத்தச் சட்டம் கால் தூசிக்கு சமம். 13ஆவது திருத்­தச்­சட்­டத்தைப் பயன்­ப­டுத்தி, நில ஆக்­கி­ர­மிப்பை தடுக்க முயன்றால்- அவர்கள் அதற்கு மிஞ்­சிய அதி­கா­ரத்தை கையில் எடுப்­பார்கள். அல்­லது அந்த அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்த முடி­யா­த­படி தடுப்­பார்கள்.

எனவே, வடக்­கிற்கு அடுத்த 5 வரு­டங்­களில் வரப் போகின்ற ஆபத்தை, 13ஆவது திருத்­தச்­சட்ட அமு­லாக்­கத்­தினால் தடுத்து விடலாம் என்­பது மிகை­யான கற்­பனை.

13ஆவது திருத்தம் இலங்கை அர­சாங்­கத்­தினால் கையா­ளப்­பட வேண்­டிய ஒன்று. அதனை செயற்­ப­டுத்த அழுத்தம் கொடுக்க வேண்­டி­யது இந்­தி­யாவின் பொறுப்பு.

இலங்­கையும் அதனை நடை­மு­றைப்­படுத்த­வில்லை. இந்­தி­யாவும் அதனை நடை ­மு­றைப்­ப­டுத்­து­மாறு வார்த்­தை­க­ளுக்கு அப்பால் அழுத்தம் கொடுக்­க­வு­மில்லை. அதனால் தான் இத்­த­கை­ய­தொரு நிலை ஏற்­பட்­டது. இப்­போது தமிழர் தரப்பைக் கொண்டே, 13ஐ கோரு­கின்ற நிலை திட்­ட­மிட்டு உரு­வாக்­கப்­ப­டு­வ­தாக தெரி­கி­றது.

சமஷ்டி தீர்வைக் கைவி­ட­வில்லை என்­றாலும், 13 இப்­போது அவ­சியம் என்று கருதும் நிலை ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

ஒரு பக்­கத்தில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வடக்கு-,  கிழக்கு இணைப்பு இல்லை என்­கிறார், பொலிஸ் அதி­காரம் குறித்து எல்லாக் கட்­சி­க­ளு­டனும் பேசி நாடா­ளு­மன்­றத்தின் ஒப்­பு­தலைப் பெற வேண்டும் என்­கிறார், மாகாண சபைத் தேர்­தலா? அதி­காரப் பகிர்வா?  ஏதா­வது ஒன்றைத் தொடுங்கள் என்று சிறு­பிள்­ளைத்­த­ன­மாக கேட்­கிறார்.

இதற்கு மத்­தியில்தான், தமி­ழர்கள் இப்­போது சமஷ்­டியைக் கோரும் தரப்­பினர், 13ஐ கோரும் தரப்பினர் என்று பிளவுபடுத்தப்படுகின்றனர்.

13ஐ நடைமுறைப்படுத்துவதில் தமிழர்கள் ஒரு போதும் பங்காளிகளாக இருக்கவில்லை என்பது முக்கியமானது. அது தமிழர்களின் அபிலாஷைகளை உள்வாங்கி  உருவாக்கப்பட்டதும் அல்ல. தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் ஒன்றாகவும் இருந்ததில்லை.

தனது அரசியல் சட்டத்தை அமுல்படுத்த வேண்டியது இலங்கை அரசின் கடமை. அதனை நடைமுறைப்படுத்தச் செய்ய வேண்டியது, 13ஆவது திருத்தத்தை முன்மொழிந்த இந்தியாவின் கடமை. இதற்குள் தமிழர் தரப்பு ஏன் 13 விடயத்தில் குத்தி முறிய வேண்டும்?

தமிழர்களின் அபிலாஷை என்பது  மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு தான், 1956ஆம் ஆண்டு முதல் அதற்கு ஆதரவாக தமிழ் மக்கள் தங்களின் ஆணையை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். தமிழ்த் தேசியவாதிகள் தான் இந்த ஆணையைப் பெற்றனர். தமிழ் மக்களின் அபிலாஷைகளை அறியாமலா அவர்களுக்கு இந்த ஆணை கிடைத்தது?

என்.கண்ணன்