சாதாரணமான வாழ்க்கையில் சாதனை என்பது நம்மை பொருத்தவரையில், கல்வி நிலையில் உயர்ந்து உயர் அந்தஸ்தை பெற வேண்டும் என்பதே. இந்த முயற்சியிலேயே தற்போது பெரும்பாலான பெற்றோர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்பள்ளியில் பாலர் பாடசாலையில் ஒரு பிள்ளை சேர்க்கப்படும்போதே எல்லா மாணவர்களை விடவும் தனது பிள்ளை முதன்மையானவராக இருக்க வேண்டும் என்றே அதிகமான பெற்றோர்கள் விரும்புகின்றனர். இந்த மனநிலை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின்போது கடும் தீவிரமான மன நோயாளிகளாக பல பெற்றோர்களை மாற்றிவிடுவதனை நாம் பார்க்கின்றோம்.
தனது பிள்ளை புலமைப்பரிசில் பரீட்சையில் கட்டாயமாக சித்தியடைய வேண்டும். அதற்காக என்ன விலை கொடுக்கவும் தயாராக இருப்பவர்களை பார்க்கின்றோம். அதிகமாக ஆசிரியர்களாக இருக்கும் பெற்றோர்களுக்கு தனது பிள்ளையின் சித்தி என்பது கெளரவமாக பார்க்கப்படுகிறது. இதனால் ‘படி… படி…’ என்ற அழுத்தத்தை அதிகமாக பிள்ளைகள் மீது திணிப்பதனையும் பார்க்கின்றோம்.
பாடசாலை நாட்களிலிருந்தே குழந்தைகளின் திறன்களை பெற்றோர் கண்டறிந்து இலகுவான மனநிலையுடன் பாடத்திட்டம் மற்றும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளுக்கு அவர்களை வழிநடத்த வேண்டும்.
விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வெற்றி – தோல்விகளை சமமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் செயற்பட இடமளிக்க வேண்டும். ஆனால், புலமைப்பரிசில் பரீட்சையில் பிள்ளை சித்தி பெறாவிட்டால் அதனை கொலைக்குற்றம் போல பார்க்கின்ற பெற்றோர்களும் உள்ளனர்.
அடுத்து, சாதாரண தரத்தில் அதிகளவிலான ‘ஏ’ சித்தி பெற வேண்டும். அதற்காக பிள்ளைகளை ஆயிரம் தனியார் வகுப்புகளுக்கு கூட அனுப்புவர். அதேபோல உயர்தர பரீட்சையின்போதும் பிள்ளைகள் பல்கலைக்கழகம் சென்றே ஆக வேண்டும் என்ற பிடிவாதம் பல பெற்றோருக்குண்டு. அதுவும் உயர்தரத்தில் ஒரு பிள்ளை என்ன துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது கூட பெற்றோர்களின் விருப்பமாகவே உள்ளது. அத்துறை சார்ந்த பாடங்களை பிள்ளைகள் கஷ்டப்பட்டு படிக்கவேண்டிய நிலை காணப்படுகிறது.
நிச்சயமாக பல்கலைக்கழகம் சென்றே ஆக வேண்டும் என்பதே பெற்றோரின் விருப்பாக பிள்ளைகளின் மீதான திணிப்பாக உள்ளது.
உண்மையில் பார்த்தோமாயின், பெற்றோர்கள் அந்தளவு கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்திருக்க மாட்டார்கள். தன் பிள்ளை படிக்க வேண்டும் என்ற விருப்பை விட தனது கெளரவத்துக்காக அவன் படித்தேயாக வேண்டும். அதுவும் தனக்குப் பிடித்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே பலரதும் விருப்பமாக உள்ளது. ஆனால், கல்வி கற்று பரீட்சைகளில் சித்தி பெற்று பல்கலைக்கழகம் செல்வது என்பது அத்தனை எளிதல்ல. அது மட்டுமன்றி, பல்கலைக்கழகம் சென்ற பின்னர் அங்கு எதிர்நோக்கும் சவால்கள் ஆயிரமாயிரம்.
பாடசாலை கல்வியின்போது பரீட்சையில் சித்தி பெறுவது போல பல்கலைக்கழகத்தில் கடினமாக படித்தால் மட்டுமே ‘ஏ’ சித்தி கிடைத்துவிடும் என்று கூற முடியாது. நம் மீதான விரிவுரையாளர்களின் நேரடி கண்காணிப்பே பரீட்சையில் பெரும்பாலும் மதிப்பீடாக வெளிவரும். சிலர் எத்தனை கஷ்டப்பட்டு பரீட்சை எழுதினாலும், அதற்கான மதிப்பீட்டை பெறமுடியாமல் போய்விடும் சந்தர்ப்பங்களும் உள்ளன.
பல்கலைக்கழகம் என்பது முற்றிலும் புதிய சூழலை கொண்ட உலகம். அங்கு எல்லாமே புதிதாகவும் புதுமையாகவும் தான் இருக்கும். அதற்கேற்ப எம்மை இசைவாக்கம் செய்ய வேண்டும்.
இத்தனை வருடங்களாக வீட்டுக்குள்ளேயே பெற்றோரின் அரவணைப்பில் இருந்த நாம், வேறு புதிய உலகில் தனியாக நுழைவோம். புதிய சூழல், புதிய உறவுகள் என்பதற்கேற்ப நாம் மாற்றப்படுவோம். அங்கு பல்வேறு சவால்கள் உருவாகும். இது மன அழுத்தத்தை மிக வேகமாக நம்மில் உருவாக்கிவிடும். ஆனால், பொறுமை, சகிப்புத்தன்மை, தைரியம், நிதானம், மன அமைதி என்பவற்றை நாம் பற்றிக்கொண்டு சவால்களுக்கு முகங்கொடுக்க பழகவேண்டும்.
பல்கலைக்கழக காலம் என்பது நம்முடைய கட்டிளமை பருவகாலம். உளவியல், உடலியல் ரீதியாகவும் நாம் முகங்கொடுக்க நேரிடும் அத்தனை விடயங்களையும் தாண்டி, முழுமை பெற்ற மனிதராக நாம் சமூகத்துக்குள் நுழைய வேண்டும். சமூகம் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கைகளையும் நாம் காப்பாற்ற வேண்டும். பல்கலைக்கழக மாணவர்கள் சமூகத்தின் சிறந்த பிரஜையாக அடையாளப்படுத்தப்படுமளவு எம்மை உயர்த்திக்கொண்டு சமூகத்தின் முன்னுதாரணமாக ஒரு நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும். ஆனால், இன்றைய காலத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் பெருமளவில் மன அழுத்தத்தை எதிர்கொள்ள துணிவின்றி தற்கொலை என்ற பயங்கர ஆயுதத்தினால் தங்களது வாழ்வை முடித்துக்கொள்கின்றனர்.
அண்மைக் காலமாக பல்கலைக்கழக மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்துச் செல்வதனை பார்க்கிறோம். கடந்த சில நாட்களுக்கு முன் யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
22 வயதுடைய குறித்த மாணவி தங்கியிருந்த விடுதியின் அறையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது போல பல நிகழ்வுகள் இவ்வருடம் நடந்திருக்கின்றன. தூக்கிட்டுக்கொள்வது, விஷம் குடிப்பது, ரயில் முன் பாய்வது என பல வழிகளில் வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றனர். இதற்கு காதலும் ஒரு காரணமே. காதல் தோல்விக்காக சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
காதல் என்பது அந்த வயதில் வெறும் பருவ கவர்ச்சி என்ற அறிவு மாணவர்களுக்கு இல்லாமல்போவது வேதனையே. அதனை போல கடினமான கற்றல் நடவடிக்கைகளும் தற்கொலைக்கு சிலரை இழுத்துச்செல்கின்றது.
மேலும், பல்கலைக்கழகங்களை பொறுத்தவரையில், பெரும்பாலான மாணவர்கள் தனியாக செயற்பட இயலாமை, அழுத்தம், பரீட்சை குறித்த பயம் போன்றவற்றால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலைக்கு என்ற முடிவுக்குச் செல்வதை பார்க்கின்றோம். இதற்கு காரணம், மனதில் துணிவு இன்மையே.
பெற்றோர்கள் சிறு வயதில் இருந்தே பிள்ளைகளுக்கு வெற்றி – தோல்விகளை சமமாக பார்க்கும் மனநிலையை உருவாக்காமல் எப்போதும் வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை ஊட்டி, வெற்றியை நோக்கி உந்தித்தள்ளி, அழுத்தம் கொடுத்தே பிள்ளைகளுக்குள் தோல்வியை எதிர்கொள்ள முடியாத மனநிலையை உருவாக்கிவிடுகிறார்கள். எனவே, குழந்தைகளின் மனநிலை தொடர்பில் சிறு வயதிலிருந்தே பெற்றோர்கள் அவதானமும் கவனமும் செலுத்த வேண்டும்.
பெரியவர்களானாலும் பெற்றோரை விட்டு புதிய சூழலில் பிள்ளைகள் தனியாக விடப்படும்போது அவர்களுடன் நட்பு ரீதியான உறவை பெற்றோர்கள் பேண வேண்டும். பிள்ளகைளுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். இந்த வாழ்க்கை, வாழ்வதற்கு மட்டுமே என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும்.
‘என்ன நடந்தாலும் இறைவன் பார்த்துக்கொள்வான்’ என மனதை இலகுவாக வைத்துக்கொண்டு மாணவர்கள் வாழ்க்கையில் முக்கிய விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் மீது இந்த சமூகமும் நாடும் உறவுகளும் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் முன்னுதாரணமாக செயற்பட வேண்டும். தோல்விகளை கண்டு ஒரு போதும் சோர்ந்துவிடக்கூடாது.
‘நாளை எல்லாம் சரியாகிவிடும்’ என்ற நம்பிக்கையை வளர்த்து வாழ்க்கையை வாழுங்கள். எதற்கும் தற்கொலை தீர்வாகாது. வாழ்க்கை ஒரு முறைதான். அதனை சந்தோஷமாக வாழ வேண்டும்.
நாம் அன்போடு செய்யும் சின்ன சின்ன செயல்களில் கூட சொல்லொனா சந்தோஷங்கள் குவிந்து கிடக்கும்.
நம் மீது முதலில் அன்பை செலுத்துவோம். நம்மை நாம் நேசித்தால் நம்மை நாமே கொலை செய்ய துணிய மாட்டோம். வாழ்க்கையை ரசித்து உணர்ந்து வாழுங்கள். நாம் நினைப்பது அனைத்தும் நடக்கவில்லை என்று கலங்கிவிடக்கூடாது. அதனை விடவும் சிறப்பானதாக வாழ்க்கை மாறும் என நம்புங்கள்.
குமார் சுகுணா