மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்த்த ஜனாதிபதி யார்?

மலையக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றதோ, இல்லையோ… ஆனால், ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் மக்களை வைத்து அரசாங்கத்தின் பக்கம் பதவிகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொண்டு ஐந்து வருடங்களை கடந்து சென்று, பின்பு அரசாங்கத்தை குறை கூறும் அரசியல் கலாசாரம் இலங்கையில் மலையகத்தில் மாத்திரமே அதிகம்.

1977ஆம் ஆண்டு முதன் முதலாக நுவரெலியா – மஸ்கெலியா தொகுதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியாக பாராளுமன்றம் சென்றவர் செளமியமூர்த்தி தொண்டமான்.

ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சியில் இணைந்துகொண்ட அவர் அக்கால சூழலில் இந்த மக்களின் பிரச்சினைகளை படிப்படியாக தீர்க்க முனைந்தார். 1983ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தில் அவர் ஜே.ஆர் அரசுடன் இருந்துகொண்டே சாணக்கியமாக செயற்பட்டு, தலைநகரில் பல இழப்புகளை தவிர்க்க உதவினார்.

அந்த வரலாறு தெரியாதவர்களே அவர் அரசாங்கத்திலிருந்து வெளியேறவில்லை என  விமர்சித்தனர். ஜே.ஆர். காலத்தில் மலையக பெருந்தோட்டப் பகுதி பாடசாலைகள் அரசமயமாக்கப்பட்டன. ஆனால்,   பாராளுமன்றில் வேறு உறுப்பினர்கள் எவரும் இருக்கவில்லை என்பதால் இந்த சமூகத்தைப் பற்றிய குரல்கள் எழவில்லை.

அதன் பின்னர், ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணசிங்க பிரேமதாசவின் மூலமாகவே மலையக மக்களின் பிரஜா உரிமை பிரச்சினைகள் தீர்ந்தன என இன்று வரை கதைக்கப்படுகின்றது. அதுவும் ஒரு அரசியல் சாணக்கியத்தால் பெற்றுக்கொள்ளப்பட்ட உரிமை. அதன் பிறகே மலையக பெருந்தோட்ட மக்கள் தொடர்ச்சியாக ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்துக்கு வாக்களித்து வந்தனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் ஐக்கிய தேசிய கட்சிக்கே தனது ஆதரவை வழங்கி வந்தது. தனது ஆட்சியில் முழுமையான காலப்பகுதியை நிறைவு செய்வதற்கு முன்பே அவர் 1993ஆம் ஆண்டு ஒரு மே தினத்தில் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார். மிகுதியாக உள்ள காலப்பகுதியில் ஜனாதிபதியாக இருந்த டி.பி.விஜேதுங்க மலையக மக்களை மிகவும் இழிவாக கருதிய ஒருவராகவும் இனவாதப் போக்கு கொண்டவராகவும் விளங்கினார்.

1994ஆம் ஆண்டு தேசிய அளவிலும் மலையகத்திலும் அரசியல் காட்சிகள் மாறுகின்ற சூழல் எழுந்தது. தொடர்ச்சியாக 17 வருட ஆட்சியின் பின்னர், ஐக்கிய தேசிய கட்சி அதிகாரத்தை இழந்தது. சந்திரிகா பண்டாரநாயக்க ஜனாதிபதியானார்.

அதே போன்று மலையகத்திலும் மலையக மக்கள் முன்னணி என்ற மாற்று சக்தி உருவாகியது. அதன் ஸ்தாபகத் தலைவர் பெ.சந்திரசேகரனின் ஒரு ஆசனம் மூலம் ஆட்சியை தக்கவைத்த சந்திரிகா முதன் முறையாக இந்த மக்களுக்காக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சை உருவாக்கினார். அதன் மூலம் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் தனிவீட்டுத் திட்டத்துக்கு முதன் முறையாக வித்திட்டார், அமரர் சந்திரசேகரன்.

யுத்த சூழல் உச்சம் பெற்றிருந்த காலமாகையால், பாதுகாப்பு செலவீனங்களுக்கு மத்தியில் சந்திரிகா அம்மையாரால் நாட்டை குறிப்பிடத்தக்களவுக்கு  அபிவிருத்தியை நோக்கி கொண்டுசெல்ல முடியவில்லை. எனினும், குண்டுத்தாக்குதலில் தப்பித்த அவர் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியானார்.

அச்சந்தர்ப்பத்தில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பாராளுமன்றத்தை அலங்கரித்தாலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்பு மற்றும் காணியுரிமை பற்றி எவரும் வாய் திறக்கவில்லை. அதேவேளை யுத்தத்தை காரணங்காட்டி இந்த பிரதிநிதிகள் தமக்குரிய சலுகைகளை அனுபவிக்காமலில்லை.

11 வருடங்கள் ஜனாதிபதியாக இருந்து சந்திரிகா அம்மையார் கொண்டுவந்த தீர்வுப் பொதியையும் எவரும் கணக்கிலெடுக்கவில்லை. இப்படியாக 2005ஆம் ஆண்டு அவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது.

அடுத்ததாக, மகிந்த ராஜபக்ஷ யுகம். அவரின் ஆட்சியிலும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் என மலையக பிரதிநிதிகள் வலம் வந்தாலும் பாராளுமன்றத்தில் எவருமே வாய் திறக்காத காலமாக அது இருந்தது.

அமரர் சந்திரசேகரன் மாத்திரம் தனக்கு வாக்களித்த மக்களின் நலன்கள் குறித்து காத்திரமாக சில கருத்துக்களை முன்மொழிந்தார். மலையக பல்கலைக்கழகம் குறித்தும் தேசிய பாடசாலைகளின் தேவை குறித்தும் அவர் அடிக்கடி விவாதங்களை நடத்தினார். அவரின் முயற்சியினாலேயே ஹட்டன் திறந்த பல்கலைக்கழகத்தின் கற்கை நிலையம் உருவானது. அந்நேரம் அவர் சமூக அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்தார். அதன் தொடர்ச்சியாக தனியானதொரு பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்ற அவரது முயற்சிக்கு மலையகத்தின் மாற்று கட்சியினரிடத்திலிருந்தே முட்டுக்கட்டைகள் போடப்பட்டன என்பதை சகலரும் அறிவர்.

மகிந்த ராஜபக்ஷ இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிட அறிவித்த பிறகும் அவருக்கு ஆதரவு தருவதற்கே மலையக பிரதிநிதிகள் முன்வந்தனர்.

எனினும், 2010ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் பெ.சந்திரசேகரன் திடீர் இறப்பை தழுவ, அங்கு ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. அந்த வாய்ப்பை 2015 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணி நன்றாக பயன்படுத்திக்கொண்டது.

ரணில் மற்றும் மைத்திரி இணைந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இ.தொ.காவை பின்தள்ளிவிட்டு தமிழ் முற்போக்குக் கூட்டணி அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களை பெற்றது.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் தனி வீட்டுத்திட்டங்கள், மலையக அதிகார சபை என்பன உருவாகின. பல்கலைக்கழகத்துக்கு இடம் ஒதுக்கி, அதற்கான பணிகள் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே திடீரென ஜனாதிபதி மைத்திரிபால மகிந்தவை பிரதமராக்கி, நாட்டில் அரசியல் நெருக்கடிகளை உருவாக்கினார்.

எவ்வாறெனினும், ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சியிலிருந்து பார்க்கும்போது ஆர்.பிரேமதாச, சந்திரிகா அம்மையார் மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் ஆட்சிக் காலத்திலேயே மலையக சமூகத்தினருக்கு ஓரளவுக்கு ஏதோ நல்ல விடயங்கள் நடந்தன எனலாம்.

நல்லாட்சிக் காலத்தில் பலவீனமான ஜனாதிபதியாக மைத்திரி இருந்தாலும், ஆட்சி நடத்தியது என்னவோ பிரதமர் ரணில் விக்ரமசிங்கதான்.

மகிந்த ஆட்சியில் யுத்த வெற்றி மயக்கத்தில் நாடே இருந்தபோது, எவ்வளவோ விடயங்களை மலையக சமூகத்துக்கு பிரதிநிதிகள் பெற்றுக்கொடுத்திருக்கலாம். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. அவர் அமைத்துக்கொடுத்த கார்பட் வீதிகளும் மின்சார இணைப்புகளும் மலையக மக்களின் பசியையும் வறுமையையும் தீர்க்கவில்லை.

மைத்திரிக்குப் பிறகு களம் கண்ட கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையை சிங்கப்பூராக மாற்றுவதாக முழக்கமிட்டு ஜனாதிபதியானார். இவர் ஒரு சிறந்த நிர்வாகி. ஆகையால் அவருக்கு ஆதரவு வழங்க நாம் முடிவு செய்தோம் என இ.தொ.காவின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அச்சந்தர்ப்பத்தில் தெரிவித்திருந்தார்.

எனினும், 2019ஆம் ஆண்டு கோட்டாபய ஜனாதிபதியாவதற்கு ஆதரவு நல்கிய ஆறுமுகன் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 2020 மே மாதம் இறப்பை தழுவினார்.

கோட்டாபயவின் குறுகிய கால மோசமான  ஆட்சியைப் பற்றி இப்போது புதிதாக கூறுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ஷ ஆறுமுகனின் கனவை நனவாக்குவோம் என்றும் மலையக பல்கலைக்கழகம் பற்றியும் உறுதி அளித்திருந்தார்.

இன்று ஆறுமுகன் இறந்து மூன்று வருடங்களாகிவிட்டன. இடையில் ஜனாதிபதியாக ரணில் பதவியேற்று மிகுதிக் காலத்தை ஆட்சி செய்கின்றார்.

என்ன பேசப்போகின்றனர்? 

இப்படியானதொரு சந்தர்ப்பத்திலேயே அனைத்து மலையக பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து மலையக சமூகத்தின் பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு நாள் ஒதுக்கப்பட்டது.

கடந்த வாரம் 11ஆம் திகதி நாள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், தமிழ் முற்போக்குக் கூட்டணியானது தாம் ஏற்பாடு செய்த நடைபயண நிகழ்வை காட்டி, இச்சந்திப்புக்கு வேறொரு நாள் கேட்டிருந்தது. எனினும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இதில் கலந்துகொண்டு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தது.

ஏனைய ஜனாதிபதிகளை போன்றல்லாது ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடும்போது மலையக மக்களின் பிரச்சினைகள் பற்றி புதிதாக எதுவும் இந்த பிரதிநிதிகள் எடுத்துக் கூறவேண்டிய தேவைகள் இருக்காது என்பதே உண்மை. ஏனென்றால், அவர் இந்நாட்டின் அனைத்து சமூகங்களினதும் பிரச்சினையை அறிந்தவர்.

அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலில் இவர் போட்டியிடுவது உறுதியாகவுள்ள நிலையில், இது ஒரு அரசியல் தேவையின் நிமித்தமான  கலந்துரையாடலாக அமைந்துவிடக்கூடாது.

மலையக பிரதிநிதிகளில் இ.தொ.கா மாத்திரமே அரசாங்கத்தின் பக்கம் உள்ளது. மூன்று கட்சிகள் கொண்ட தமிழ் முற்போக்குக் கூட்டணி சஜித்தின் பக்கம் உள்ளது. இந்த இரு தரப்பினரும் ஒன்றிணைந்து ஜனாதிபதியை சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியமை ஒரு சந்தேகத்தையும் எழுப்பாமலில்லை. ஆனால், இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இது அமைந்துவிடக்கூடாது என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு.

மலையக சமூகத்தின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும். ஆனால் பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்ட நான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாக இருந்தால் மாத்திரமே அது சாத்தியமாகும் என ரணில் விக்ரமசிங்கவும், அவரை தெரிவு செய்தால்தான் நாம் அவரினூடாக உங்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என மலையக பிரதிநிதிகளும் சொல்லாமல் இருந்தாலே போதுமானது.

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளுக்கு முன்பாக மலையக பிரதிநிதிகள், தமது மக்களின் அபிப்பிராயங்களையும் எண்ண ஓட்டத்தையும் அறிந்துகொள்வது மிக முக்கியமானது என்பதை உணர்ந்தால் சரி.

தேசியன்