1983 – 84 காலப்பகுதியில் இந்திரா காந்தியின் ஆலோசகராகவும் விசேட தூதுவராகவும் இருந்த கோபாலசுவாமி பார்த்தசாரதி, ரணிலின் தந்தையான எஸ்மன்ட் விக்கிரமசிங்க ஊடாகவே மாகாண சபை முறைமையை ஜே.ஆரிடம் தெரிவித்தார். அன்று இளம் அமைச்சராகவிருந்த ரணிலுக்கு இது ஞாபகமில்லைப் போலும். அல்லது வசதி கருதி மறந்துவிட்டாரா?
கடந்த ஆண்டு யூலையில் நாடாளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து அந்த ஆண்டின் இறுதிக்குள் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காணப்போவதாக அறிவித்தார்.
இதற்குக் காரணம், 13ம் திருத்தமே மாகாண சபை நிர்வாகம் எனவும், மாகாண சபை முறைமையே பதின்மூன்றாம் திருத்தம் என்றும் பார்க்கப்பட்டதுவே. அரசியல் அமைப்பில் ஒரு திருத்தத்தை ஏற்படுத்தி அதனை நாடாளுமன்றம் அங்கீகரித்தால் அது சட்டமாகிவிடும். அதனை எவரும் மீறக்கூடாது.
இந்த அடிப்படையில் 1988ல் வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டதும், முதலமைச்சர் தலைமையில் இணைந்த மாகாண சபை நான்கு அமைச்சர்களுடன் இயங்க ஆரம்பித்தது என்பதும் வரலாறு. இதற்கு வழியமைத்தது 13வது அரசியல் திருத்தமே.
ஆனால் பதின்மூன்றாம் திருத்தம் – தமிழருக்கான அரசியல் தீர்வுக்கான முதல்படியான அதிகாரப் பகிர்வை கொண்டிருக்கவில்லை. காலக்கிரமத்தில் அதிகாரப்பகிர்வு கிடைக்கலாமென்ற நம்பிக்கை இருந்தது. கடந்த 36 ஆண்டுகளில் அது பொய்யாகிப் போய்விட்டது.
அதிகாரங்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, தமிழரின் தற்காலிக பாதுகாப்புக்கும் அவர்களின் நிலபுலங்கைள கட்டிக்காக்கவுமாவது மாகாண சபை இருக்கட்டும் – காலக்கிரமத்தில் முழுமையான அதிகாரங்களை படிப்படியாக பெற்றுக் கொள்ளலாமென்ற எதிர்பார்ப்புடனேயே மாகாண சபை தேர்தல்களை தமிழர் தரப்பு சந்தித்தது என்பது ரகசியமன்று.
கடந்த மூன்று தசாப்தத்துக்குள் நிகழ்ந்தவை கசப்பானவை. வடக்கு கிழக்கு இணைப்பை உச்ச நீதிமன்றம் ரத்தாக்கியது. பதின்மூன்றாம் திருத்தத்தில் பல அம்சங்கள் சட்டப்படி பறிக்கப்பட்டன, அல்லது இல்லாமற் செய்யப்பட்டன. எதுவுமே இல்லாத மாகாண சபை தேர்தல்கூட வருடக்கணக்காக நடைபெறவில்லை.
இந்தப் பின்னணியில் தமிழர் பிரச்சனைக்கு ஆறு மாதத்துக்குள் தீர்வு அறிவிக்கப்படுமென ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் திடீரென அறிவித்தபோது அது அதிர்ச்சி வைத்தியமாக இருந்தது.
நல்லாட்சிக் காலத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதனூடாக தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காணவென நூற்றுக்கும் அதிகமான அமர்வுகளை நடத்தியவேளை பிரதமராக இருந்தவர் ரணில். தமிழரசின் சம்பந்தனதும் சுமந்திரனதும் நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும் இவரே இருந்தார். அதனால் கூட்டமைப்பின் பங்காளிகளாகவிருந்த ரெலோவும் புளொட்டும் ரணிலை நம்பி ஆதரவு அளித்து வந்தன.
ஆனால், நல்லாட்சிக் காலம் தமிழருக்கு நல்ல காலமாக அமையவில்லை. ரணிலுக்கும் மைத்திரிக்கும் இடையிலான இணக்கமின்மையால் தமிழரின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லையென கூறப்பட்டிருப்பினும் அது உண்மையன்று. ரணில் தாம் திட்டமிட்டவாறு தமிழரை கைவிட்டார்.
இத்தகைய சூழ்நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற ரணிலின் புதிய தோற்றம் தமிழர் பிரச்சனைக்கு ஒரு தீர்வைக்காண வழிவகுக்கலாமென சிலர் நம்பினர். சொல்லப்போனால் 13ம் திருத்தம் அரசியலில் இருப்பதையே அவர் அடியோடு விரும்பவில்லை என்பது இப்போது வெளிப்படை இதற்கு உதாரணமாக 13ம் திருத்தத்திலிருந்து சிலவற்றை எவ்வாறு நீக்கலாமென்று அவர் முன்மொழிந்த கைங்கரியம்.
அரசியலமைப்பில் அதிகாரப் பகிர்வு இருக்கும்வரை அதனை நிறைவேற்ற வேண்டும். நாடாளுமன்றத்தில் பிரேரணை சமர்ப்பித்து அதிகாரப்பகிர்வை நீக்காதவரை தமது கைகள் கட்டப்பட்டிருப்பது போன்ற அவரது வார்த்தைப் பிரயோகம் சிங்கள பௌத்த இனவாதிகளுக்கு ஒரு விடயத்தை காதுக்குள் போட்டது. இப்போது, அந்தத் திருத்தத்தை அரசியலமைப்பு 22ம் திருத்தமாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்போவதாக உதய கம்மன்பில அறிவித்துள்ளார். இந்தப் பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேறுமானால் ரணிலின் எதிர்பார்ப்பு சுலபமாகிவிடும். அதன் பின்னர் அதிகாரப் பரவலை எவரும் கேட்க முடியாது. இதுதான் ரணிலின் குள்ளநரி மூளை.
மாகாண சபை முறைமை என்பதுவே இன்று சிங்களவர் தமிழர் தரப்பில் அதிகம் பேசப்படுவதாக இருக்கிறது. மாகாண சபை ஆலோசனையின் பிதாமகர் யார் என்ற கேள்வி இங்கு வருகிறது. ராஜிவ் காந்தி, டிக்சிற், டில்லியின் சவுத் புளொக் என்று பல பெயர்கள் அடிபடுகின்றன.
இலங்கையின் மூத்த சிவில் சேவை அதிகாரியான சரத் அமுனுகம தமது நூல் ஒன்றில் முக்கிய தகவலொன்றைத் தந்துள்ளார். நீண்டகாலம் இலங்கையின் தகவல் திணக்கள தலைமை அதிகாரியாகவும் பின்னர் ஜே.ஆரின் ஆட்சிக்காலத்தில் தகவல் ஒலிபரப்பு அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றதையடுத்து அரசியல்வாதியாகி பல அமைச்சுப் பதவிகளையும் வகித்தவர் சரத் அமுனுகம
1983 தமிழின அழிப்பின் பின்னர் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் நேரடித் தலையீடு இலங்கையில் இருந்தது. இதனால் உள்நாட்டில் சிங்கள பௌத்த தீவிர எதிர்ப்பை ஜே.ஆர். சந்திக்க நேர்ந்தது. அப்போது இந்திரா காந்தியின் ஆலோசகராகவும் தனிப்பட்ட தூதுவராகவும் இயங்கிய தமிழரான கோபாலசுவாமி பார்த்தசாரதியின் உதவி இவருக்குத் தேவைப்பட்டது. அவ்வேளை எஸ்மன்ட் விக்கிரமசிங்கவும் (ரணிலின் தந்தை) பார்த்தசாரதியுடன் நெருக்கமான உறவு பேணி வந்தார்.
இது தொடர்பான முக்கிய விடயமொன்றை திரு. சரத் அமுனுகம தமது சுயவாழ்க்கைச் சரிதத்தின் இரண்டாம் பாகத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“Esmond Wickremasinghe (Ranil Wickremasinghe’s father) briefed us of the Parathsarathy proposals which at that time was hotly opposed by many including the monks like Walpola Rahula and the Mahanayake of Asgiriya, Palipane Chandananda. The Parthasarathy proposals were for the setting up of Provincial Councils in a merged North and East. He was a proponent of devolution of powers within a sovereign state.”
(வல்பொல ராகுல போன்ற பிக்குகள் மற்றும் அஸ்கிரிய மகாநாயக்கர் பாலிபனே சந்தனந்தா உள்ளிட்ட பலராலும் கடுமையாக எதிர்க்கப்பட்ட பார்த்தசாரதி முன்மொழிவுகள் குறித்து எஸ்மன்ட் விக்கிரமசிங்க (ரணில் விக்கிரமசிங்கவி;ன் தந்தை) எமக்கு விளக்கினார். இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் மாகாண சபைகளை அமைப்பதற்கான யோசனைகள் பார்த்தசாரதியின் முன்மொழிவுகளாகும். அவர் இறையாண்மை கொண்ட நாட்டிற்குள் அதிகாரப் பகிர்வை ஆதரித்தவர்).
இதனூடாக முக்கியமான விடயமொன்று வெளியாகியுள்ளது. வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாண சபை என்பது 1987 ஒப்பந்தத்தில் கருவானதல்ல. அதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னரே பார்த்தசாரதியினால் முன்மொழியப்பட்டது. அப்போது ஜே.ஆரின் தொடர்பிலிருந்த பார்த்தசாரதி மறுபுறத்தே தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் நம்பிக்கைக்குரியவராகவும் ரணிலின் தந்தையின் நேரடித் தொடர்பாளராகவும் இருந்துள்ளார்.
இதனை ரணில் மீள்நினைவுக்கு உட்படுத்த வேண்டும். ஆனால் அவர் கையில் சிக்கியுள்ள மாகாண சபை குரங்கின் கையில் கிடைத்த பூமாலை நிலைக்குள்ளாகி வருகிறது. அல்லது, குரங்கு அப்பம் பங்கிட்டது போன்று மாகாண சபை அதிகாரங்களை பிய்த்துப் பிய்த்துத் தள்ளி இல்லாமற் செய்ய முயற்சிக்கப்படுகிறது என்றும் சொல்லலாம்.