200 வருடங்கள் கடந்தும் தொடரும் வலிகளும், சுமைகளும் !

இலங்கை வாழ் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை பல நூற்றாண்டுகளை கடந்தும் சவால்மிக்க ஒன்றாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. அன்று இலங்கையில் மலைமேடுகளாகவும், கற்பாறைகளாகவும் காணப்பட்ட தரிசு நிலங்கள்  இன்று பச்சை பசேல் என்று செல்வம் கொழிக்கும் பூமியாகக் காணப்படுகின்றன. இதற்காக சந்ததி சந்ததியாக உழைத்த எமது மூதாதையர்கள் இறுதியில்  கர்ப்பூர தீபமாய் ஒளி வீசி கரைந்து அந்த மண்ணுக்கே உரமாகி விட்டனர். அந்த புனிதமான நிலத்தில் எமக்கு உரிமை வேண்டும், அந்த பூமி எமக்கு சொந்தமாக வேண்டும் என்பதுதான் பெருந்தோட்ட மக்களின் ஆதங்கம். அவர்களின் இந்த ஆதங்கம் நிறைவேறுமா? சற்று விரிவாக அவர்களின்  பின்னணியை அலசுவோம்.

பெருந்தோட்டத் தொழிலாளர் வரலாறு !

பெருந்தோட்டத்  தொழிலாளர்கள் இலங்கைத்தீவில் வாழத் தொடங்கி 200 வருடங்கள்  சென்றிருக்கின்றன. பிரித்தானியர்களால் 1823 ஆம் ஆண்டு கோப்பிச் செய்கைக்காக தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்ட தினத்தோடு இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களின் வரலாறு தொடங்குகிறது.

இலங்கையில் பிரித்தானிய ஆட்சியாளர்களின் நிதி நிலைமைகள் ஆட்டம் கண்டிருந்த நிலையில்  இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தம் சொந்த தேசத்தை விட்டு வந்தவர்கள்  இம்மக்கள். அன்று தொட்டு இன்று வரை தம் உழைப்பால் இந்த தேசத்திற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தந்து  வாழவைத்து கொண்டிருப்பவர்கள். காட்டை வெட்டி நாட்டை உருவாக்கி வீதிகளையும் பாலங்களையும் ரயில் மார்க்கங்களையும் உருவாக்கியவர்களும் இவையெல்லாம் உருவாக காரணமானவர்களும் இந்தத் தொழிலாளர்கள்தான்.

200 வருடங்கள் இந்த தேசத்தின் முக்கிய அங்கத்தினர்களாக இருக்கும் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை பல மாற்றங்களை முன்னேற்றங்களை கண்டிருக்க வேண்டும் என்பதே யதார்த்தம். துரதிஷ்டவசமாக பெருந்தோட்டத்  தொழிலாளர்களின் வாழ்க்கை இரு நூற்றாண்டுகளை கடந்தும் சவால்மிக்க ஒன்றாக “பின்தங்கிய” என்ற அடைமொழியிட்டு நோக்கத்தக்க  துன்பியல் வாழ்வாக  தொடர்ந்து கொண்டிருக்கிறது.  இந்த தேசத்தின் ஏனைய மக்கள் அனுபவிக்கும் உரிமைகளை  கூட போராடியே பெற வேண்டிய நிலையில் இந்த மக்கள் இருக்கிறார்கள் என்பது தான் பெருந்துயரம்.

 45 ஆண்டுகள் போராடி பெற்ற குடியுரிமை !

இந்நாட்டின் குடியுரிமையை பெறவே 45 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. அனைவருக்கும் இலவசமாக கிடைத்தகல்வி 25 வருட தாமதத்திற்கு பின்னரே இம்மக்களை எட்டியது. இன்றும் காணி உரிமை இல்லை. வீட்டுரிமை இல்லை. முகவரி இல்லை. இலங்கை தேசம் சர்வதேச அரங்கில் சொல்லிக்கொள்ளும் இலவச சுகாதாரம், இலவச மருத்துவம் எதிலுமே இம்மக்கள் முழுமையாக உள்வாங்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் நவீன காலத்து அடிமைகளாகவே இன்றும் நடத்தப்படுகின்றனர்.

இந்திய வம்சாவளி மக்களின் இலங்கை வருகை!

இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் மலையகத்தமிழர்  அல்லது இந்திய வம்சாவளி தமிழர் என்று அழைக்கப்படுகிறார்கள். பல நாடுகளின் அதிகாரத்தை வசப்படுத்திக் கொண்ட ஆங்கிலேயருக்கு அங்கே காலூன்ற வருமானத்தை பெருக்க வேண்டிய தேவையும் இருந்தது. தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த இலங்கை உட்பட பல்வேறு கீழைத்தேச நாடுகளில் பொருளாதார நீண்ட கால பயிர்ச் செய்கைக்கு திட்டமிட்டனர். இலங்கையில் இறப்பர், தேயிலை, கோப்பி மற்றும் கறுவா போன்ற பயிர்களை பயிரிட விரும்பினர். இதன் பொருட்டு தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்களை வள்ளங்கள் மூலம் இலங்கைக்கு கொண்டு வந்தனர்.

தென்னிந்தியாவின் திருநெல்வேலி, திருச்சி, மதுரை மற்றும் தஞ்சையைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். இதற்கு முன்னரே கொழும்பில் இருந்து கண்டிக்கு வீதி அமைப்பதற்காக 1817 ஆம் ஆண்டில் முதல் இந்திய தொழிலாளர்கள் குழு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், மேலும் பலர் கோப்பி தோட்டங்களில் (1830-1880) வேலை செய்ய வந்தனர். அந்த கோப்பித் தோட்டங்கள் பூச்சி  தாக்கத்திற்கு  ஆளானபோது, தேயிலை தோட்டங்களில் கவனம் செலுத்தப்பட்டது.


பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டதும், முதல் நெடுஞ்சாலையாக வரலாற்றில் இடம்பிடித்ததுமான கொழும்பு – கண்டி வீதி

இதன் பின்னணியில்  இலங்கைக்கு இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக, ஆண்கள் மற்றும் பெண்கள் என பலர்  அழைத்து வரப்பட்டனர். அவர்கள் இலங்கையின் வடக்கிலிருந்து வடமத்திய மாகாணத்தின் காடுகளின் வழியாக மத்திய மலை நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த பயணம் வார்த்தைகளால் விளக்கிட முடியாத பெரும் துயரக்கதை.

பல நாட்கள் கப்பல் பயணத்தை தொடர்ந்து அடர்ந்த காடுகளின் ஊடாக மேற்கொண்ட   நடைப்பயணம்,  போதுமான உணவு மற்றும் குடி நீர் இன்மை என்பவற்றால் சிலர் செத்து மடிய பலர்  கொள்ளை நோய் காரணமாக உயிரிழந்தனர். இறந்த உறவுகளை எடுத்துப் புதைக்கவோ நின்று அழவோ அவகாசமின்றி காக்கைகளுக்கும் கழுகுகளுக்கும் அவர்களை இரையாக்கி விட்டு எஞ்சியவர்களே மலையகம் போய் சேர்ந்தனர்.

அவர்கள் தேயிலை தோட்டங்களில் லயம் என்ற பெயரில் சிறிய குடியிருப்புகளை அமைத்து தங்கவைக்கப்பட்டனர். அவர்களை கண்காணிக்க மற்றும் வேலை வழங்க பெரியகங்காணிமார், சின்ன கங்காணிமார் நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் பிரித்தானியத் தலைமைகளுக்கு ஈடாக தொழிலாளர் வர்க்கத்தை கசக்கிப் பிழிந்தனர்.

இந்த மக்களின் உழைப்பால் விளைந்த வருமானமே நாட்டின் பல பகுதிகளின் அபிவிருத்திக்கு அடிகோலின. இருந்தும்  இதனை உணராது பெருந்தோட்ட தமிழ் மக்களை அடிமைகள் போன்ற மனப்பாங்குடன் நோக்கும் நிலை இன்றுவரை மாறவில்லை.

எழுச்சிக்கு இடம் கொடாத இறுக்கமான கட்டுப்பாடுகள்!

பிரித்தானிய நிர்வாகமும் அதன்பின் வந்த அரச தனியார் கம்பனிகளும் கையாண்ட இறுக்கமான கட்டுப்பாடுகள், பெருந்தோட்டத் தொழிலாளர் வாழ்க்கை எந்த முன்னேற்றத்தையும் எட்டாத வகையில் அணை போட்டது.

ஆங்கிலேயர் காலத்தில் தொழிலாளர்கள் எந்த வகையிலும் தோட்டத்தை விட்டு வெளியே சென்று விடாதவகையிலும், அவர்கள் வேறு எதையும் சிந்திக்காத வகையிலும் பார்த்துக்கொள்ளப்பட்டார்கள். கம்பளிகள் தொடக்கம் உணவுப்பொருட்கள் வரை நிவாரண அடிப்படையில் வழங்கப்பட்டு, அவர்களின் தேவைகள் ஓரளவுக்கு நிறைவு செய்யப்பட்டதால்  மக்கள்  குடியிருப்பு குறித்து கூடிய கவனம் செலுத்தவோ அன்றேல் தோட்டங்களை விட்டு வேலை தேடி வெளியூர் செல்லவோ எத்தனிக்கவில்லை.

காலப்போக்கில் தேவைகள் அதிகரிக்க கல்வி அறிவும், இளைஞர்களின் எழுச்சியும், தொழிற்சங்கங்களின் வளர்ச்சியும் ஏற்பட உரிமை போராட்டங்களை ஆரம்பித்தனர். சிலர் நகர்ப்புறங்களை நோக்கி நகர ஆரம்பித்தனர்.

 

லயமும் காணிகளும் !

பெருந்தோட்டங்களில் மக்கள் சந்ததி சந்ததியாக சிறிய லயன் அறைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். சுமார் 200 வருட காலம் பழைமைவாய்ந்த  இந்த சிறிய லயன் அறைகள்  எந்த வித அபிவிருத்தியும் இன்றி இருப்பதற்கு அப்பால், அவர்கள்  மூதாதையர்களின் நினைவு சின்னங்களாக விளங்குவதொன்றே  அதற்கான ஒரு சிறப்பம்சமாகும்.  அதன் காரணமாகவே  அந்த இடம் தமக்கு சொந்த இடமாக  மாற வேண்டும் என்ற தார்மிக உணர்வு அவர்கள் மத்தியில் வேரூன்றியுள்ளது.

ஆங்கிலேயர் இந்த மக்களுக்கு குடியிருப்புகளை (லயன்) ஏற்படுத்திக் கொடுத்த போதிலும் இறுதிவரை ஒரு துண்டுக்ககாணியையும் அவர்களுக்கு சொந்தமாக வழங்கவில்லை. ஆனால்  தோட்டங்களில் பிரிட்டிஷ் நிர்வாகிகளாக இருந்தவர்களுக்கு பிரிட்டன் இலவசமாக காணிகளை வழங்கியுள்ளது.

அதேவேளை, மலையகத்தில் குறித்த உடைமைக்கான ஆதாரம் இல்லாத அனைத்து நிலங்களும் – பிரிட்டிஷ் சட்டத்தால் அரச (முடிக்குரிய) நிலமாக கருதப்பட்டு அபகரிக்கப்பட்டன. இந்தச் செயலை மலையக மக்கள்  கண்டித்தபோதும் அது கண்டுகொள்ளப்படவில்லை. தொடர்ந்து தேயிலை தோட்டத்தை  பொறுப்பேற்ற அரச நிர்வாகமும் வெளியாருக்கெல்லாம் தோட்ட நிலங்களை பங்குபோட்டுக் கொடுத்ததே தவிர தோட்டத் தொழிலாளர்களுக்கு காணியுரிமை எதுவும் வழங்கவில்லை.

குடியுரிமை பறிப்பும் நாடு கடத்தலும்!

1948 இல் ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் கீழ், சுமார் நாற்பது சதவீத இந்தியத் தமிழர்களுக்கு மட்டுமே இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட்டது. எஞ்சியவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். 1990களில் பெரும்பாலான இந்தியத் தமிழர்கள் இலங்கைக் குடியுரிமையைப் பெற்றனர். மேலும்,  சிலருக்கு 2003 ஆம் ஆண்டு வரை இலங்கைக் குடியுரிமை வழங்கப்படவில்லை.

அரசியல் பிரசன்னம் !

கால ஓட்டத்தில் இந்திய வம்சாவளி தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் இலங்கையின் அரசியல் வரலாற்றில் பிரிக்கமுடியாத சக்தியாகவும், ஏன் ஆட்சியை தீர்மானிப்போர்களாகவும் மாறினர். இதன்பேறாக சில உரிமைகள் கிள்ளிக் கொடுக்கப்பட்டன. ஆனால்,மலையக மக்களின் பிரச்சினைகள் தேவைகள் இன்னும் தீர்க்கப்படாமல் அரசியல் வாதிகளின் வெற்று வாக்குறுதிகளாகவே இன்றும் நிலைத்திருக்கின்றன.

இந்தியாவிலிருந்து ஒரு பிரிவினர் வர்த்தக நோக்கத்கத்துடனும்  மற்றொரு  பிரிவினர் தோட்டங்களில்  தொழில் புரியும் நோக்குடனும் இரு பிரிவாக வந்தனர். வர்த்தக நோக்குடன் வந்த இந்தியர்கள் புதிய முதலீடுகளில் கவனம் செலுத்தினர். மேலும், இவர்கள் கொழும்பைத் தளமாகக் கொண்டு செயற்பட  தொடங்கினர். காலப்போக்கில் இவர்கள்  சொந்தமாக தேயிலைத் தோட்ட காணிகளை கொள்வனவு செய்து அதில் பயிரிடும் முயற்சியில் ஈடுபட்டனர். விசேடமாக கொழும்பு மற்றும் தென்பகுதியில் கோவில் நிர்மாணம், வர்த்தக கட்டிட நிர்மாணம் என்பனவும் அவர்கள் காலத்தில் உருவாகின.

இந்திய வம்சாவளி செல்வந்தர்கள்

இந்திய வம்சாவளி தமிழர்கள் பலர் இன்று  இலங்கையில் மிகப் பெரும் வர்த்தக புள்ளிகளாகவும், பல்வேறு பல்தேசிய கம்பனிகள் நிறுவனங்களின் உரிமையாளர்களாகவும், வர்த்தக நிறுவனங்களின் சொந்தக்காரர்களாகவும் காணப்படுகின்றனர். குறிப்பாக  கொழும்பில் ஏற்றுமதி, இறக்குமதி, ஆபரணத் தொழில் என்பவற்றில் அவர்களின் பங்களிப்பு கணிசமானது. இது தமிழ் சமுதாயத்திற்கு மாத்திரமன்றி நமது அயல் நாடான இந்தியாவுக்கே பெருமை சேர்ப்பதாகும். இதனை கடந்த 200 வருடங்களில் பாரியதோர் எழுச்சியாக பார்க்க முடியும்.

மலையக மக்களும், காணிப் பிரச்சினையும் !

மலையக மக்கள் நாட்டின் எந்த பகுதியிலும்  (தேசவழமைகளுக்கு  ஏற்ப) காணிகளை கொள்வனவு செய்ய முடியும். ஆனால், இங்கு எழுந்துள்ள பிரச்சினை குறித்த மக்கள் 200 வருடங்களாக சந்ததி சந்ததியாக தோட்டங்களில் வாழ்ந்து வருகின்ற போதிலும் பெரும்பான்மையானவர்களுக்கு  சொந்தமாக காணியோ அல்லது வீடோ இல்லை என்பதாகும்.

தற்போது அவர்களுக்கு வழங்கபட்டுள்ள லயன் அறைகள் குறித்த தொழிலாளர்களுக்கு  குறித்த தோட்டத்தில்  தொழில் செய்யும் வரை மாத்திரமே  உரித்துடையவையாக இருக்கும்.

இந்த லயன் அறைகள் போதுமான இடவசதிகளோ அன்றேல் சுகாதாரவசதிகளோ இல்லாதுள்ளது. இதனை உணர்ந்த வகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மறைந்தசௌமியமூர்த்தி தொண்டமான், மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகர் பெ.சந்திரசேகரன் உள்ளிட்ட தலைவர்கள் வீடமைப்பு திட்டங்களையும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஏழு பேர்ச் காணி வழங்கப்படவேண்டும் என்ற திட்டத்தையும் முன்வைத்தனர். இதன் தொடர்ச்சியாக காணியுரிமை வீட்டுரிமை கோஷம் வலுப்பெற்று பேசு பொருளானது.

இந்திய வீடமைப்பு திட்டம் !

இந்தப்   பின்னணியில் தோட்டப் பகுதிகளில்  வாழும்  இந்திய வம்சாவளி மக்களுக்கு இந்தியா முதலில் வீடமைப்பு பணியில் கால்பதித்தது.

அதற்கமைய, இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட  முதல் தொகுதியான 404 வீடுகளை  2018 ஆகஸ்ட் 12 ஆம் திகதி நுவரெலியா டன்சினேன் தோட்டத்தில் காணொளிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு கையளித்தார்.

இதன்போது, உரையாற்றிய பிரதமர் மோடி, இலங்கை எங்களுக்கு சிறப்பு வாய்ந்தது, “உங்கள் வேர்கள் இந்தியாவில் உள்ளன, அவை இலங்கையில் வளர்ந்துள்ளன. நீங்கள் இரு நாடுகளை மட்டும் இணைக்காமல், இருபெரும் நாடுகளின் இதயங்களைத் தொட்டு கரங்களை வலுப்படுத்தி உள்ளீர்கள் என்று கூறியதுடன் மேலும் 10 ஆயிரம் வீடுகள் அமைத்து கொடுக்கப்படும் என்றார். இந்திய அரசின் 14,000 வீடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் 4,000 வீடுகள் அமைக்கப்பட்டு  மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

லயன் குடியிருப்புக்களை  சொந்தமாக வழங்கும் சாத்தியமுள்ளதா?

தோட்ட குடியிருப்புகள் அவர்களுக்கு சொந்தமாக வேண்டும் என்பதே அனைவரதும் விருப்பம். அதில் ஒரு சட்ட ரீதியான சிக்கல் உள்ளது என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும். அதாவது தோட்ட லயங்கள் அரசுக்கு சொந்தமானவை. அவற்றை கம்பனிகள் குத்தகைக்கு பெற்றுள்ளன. எனவே, குறித்த லயங்களை உரிமை கொள்ள அல்லது அதில் மாற்றம் செய்ய முழுமையாக மாற்றி அமைக்க குறித்த நிர்வாகத்தின் அனுமதி அவசியம் தேவைப்படும் பட்சத்தில்,  அதாவது தோட்டத்தில் குறித்த லயன் அறையை வைத்திருப்பவர் வேலை செய்யாத போது அதனை சுவீகரிக்கவும் பிறிதொருவருக்கு வழங்கவும் முடியும்.

எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அதில் உரிமை கோர வேண்டுமானால், நிர்வகிக்கும் கம்பனிகள் அரசாங்கத்துடனும்  நிலச்சீர்திருத்த ஆணையத்தின் அனுசரணையுடன்  ஓர்  உடன்பாட்டுக்கு வந்து சாதகமாக அணுகலாம்.  அல்லது பிறிதொரு இடத்தில் நிலத்தை வழங்கலாம்.

இதேவேளை, தேவைப்படும் பட்சத்தில் அதாவது தோட்டத்தில் குறித்த லயன் அறையை வைத்திருப்பவர் வேலை செய்யாத போது அதனை சுவீகரிக்கவும் பிறிதொருவருக்கு வழங்கவும் முடியும். இதுவே இன்றுள்ள நடைமுறை.

தனியார் தோட்டங்கள்! 

சுமார் 50,000 ஏக்கர் வரையான தேயிலைத்  தோட்டங்களை கொண்டுள்ள இவர்கள் தேயிலை உற்பத்தியில் பெரும் பங்களிப்பு செய்கின்றனர் . இங்கும் கம்பனிகள் போன்றே பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு லயன் போன்ற அமைப்பிலான வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான   நிலையில் அவர்களால் தோட்டக் காணிக்கு உரிமைகோர முடியுமா ? கோரினால் என்ன நடக்கும் ? என்பது அடுத்து எழும் கேள்வி .  இங்கும் தோட்டத்தில் பணி புரியாதோர் குறித்த லயத்தில் தங்க முடியாது.

அரசு நிலம் என்றால் என்ன?

அரச மற்றும் தனியார் நிலங்கள் தொடர்பாக சுருக்கமாக பார்ப்போம். இலங்கையில் 80 வீத  நிலப்பரப்பு அரசுக்கு சொந்தமானது. எஞ்சியவை தனியாருக்கு சொந்தமானவை. அரச  நில ஆக்கிரமிப்புச் சட்டத்தின் கீழ், 30 ஆண்டுகளுக்கும் மேலாக உரிமை பாராட்டப் படாமல் இருக்கும் அனைத்து தரிசு நிலங்கள், வன நிலங்கள் மற்றும் சாகுபடி செய்யப்படாத நிலங்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தமானதாகக் கருதப்படுகிறது.

முடிக்குரிய நிலம்  மற்றும் அரச காணிகள்!

முடிக்குரிய நிலம்  மற்றும் அரச காணிகள்  அரச நிலங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. மேலும், இது காணி ஆணையரின்வரம்புக்கு உட்பட்டது. காணி ஆணையாளர் தனது அதிகாரங்களை அரசாங்க அதிபர் / பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்க முடியும்.

அரச நிலத்தைப் பயன்படுத்துவதற்கு அரசு அனுமதி வழங்கலாம்.(உதாரணமாக காணிச் சீர்திருத்த ஆணைக்குழு நிலத்தை நேரடியாக வழங்கலாம்) மேலும், அது நிலத்தை தனியார் தரப்பினருக்கோ அல்லது அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கோ குத்தகைக்கு விடலாம்.

குறிப்பாக பல தோட்ட நிறுவனங்களை நடத்தும் ஜனதா தோட்ட அபிவிருத்திச் சபை (JEDB, ) காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான தேயிலை மற்றும் இறப்பர் நிலங்களை 99 வருட குத்தகைக்குபெற்றுள்ளது.

உண்மையில் அரச காணி யாருடையது?

அரசின் காணி மக்களின் நம்பிக்கையில் அரசிடம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இலங்கையின் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின்படி, காணி அல்லது அதன் மீதான உரிமைகள், காணி உரிமை, காணி பரிமாற்றம் மற்றும் காணி பாவனை, காணி குடியேற்றம் மற்றும் காணி மேம்பாடு ஆகிய அனைத்தும் மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், அரசின் நிலம் மத்திய அரசின் நிர்வாகத்தில் உள்ளது. அரச காணி ஜனாதிபதியின் முத்திரையின் கீழ் மட்டுமே அந்நியப்படுத்தப்பட முடியும் (பின் இணைப்பு II, 13வது திருத்தம்).

அரசின் நிலம் மாகாண உயர் நீதிமன்றங்களின் வரம்புக்கு அப்பாற்பட்டது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தவிர, மாகாண சபைகளுக்கு அரசக் காணி மீதான அதிகாரத்தை மத்திய அரசாங்கம் விட்டுக்கொடுக்கவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

(According to the 13th Amendment to the Constitution of Sri Lanka, rights in or over land, land tenure, transfer and alienation of land, land use, land settlement and land improvement are all reserved for the Provincial Councils (item 18 of the Provincial Council List).

However, State Land is vested in the Central Government. State land can only be alienated under the seal of the President (Appendix II, 13th Amendment). The Supreme Court has held that State Land is outside the purview of Provincial High Courts. Court held that the Central government has not ceded its power over state land to the provincial councils,)

அரசக் காணிக்கு பரிந்துரைக்க முடியுமா?

தனியார் தரப்பினர் அரசக் காணிக்கு உரிய உரிமை கோர முடியாது. தனியார் நிலம் என்று வரும்போது இது வேறுபட்டது. 10 வருடங்களாக தடையின்றி, உடைமைகளை வைத்திருப்பது, தனியார் காணிக்கு (சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளுக்குள்) பரிந்துரைக்கப்பட்ட உரிமையைக் கோருவதற்கு வழிவகுக்கிறது. ஆனால், இது அரச காணிக்குப் பொருந்தாது (பிரிவு 103, அரச காணிகள் கட்டளைச் சட்டம்). ஒரு தனியார் தரப்பினர் ஒருபோதும் அரசக் காணியின் மீது பரிந்துரைக்கப்பட்ட உரிமைகோரலை செய்ய முடியாது (பிரிவு 15, பரிந்துரைக்கப்பட்ட கட்டளை).

(Private parties cannot claim a prescriptive right to state land. This is different when it comes to private land- uninterrupted, undisturbed, adverse possession for 10 years gives rise to the claim of prescriptive title to private land (within the requirements set out in the Prescription Ordinance).But this will not apply to state land (section 103, State Lands Ordinance).

காணி தொடர்பில் பல சிக்கல்கள் காணப்படுகின்ற நிலையில், மலையகத்தை உருவாக்கிய மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மலையகத்தில் தனியுரிமை வழங்க வேண்டும் என்பது ஏகோபித்த கோரிக்கையாக உள்ளது.

பெருந் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் !

காணிப்  பிரச்சினையை போலவே மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தில் சம்பளப் பிரச்சினையும் பெரும் தாக்கத்தை செலுத்திக்கொண்டிருக்கிறது. சாதரணமாக தொழிலாளர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 3,000 ரூபாய்வரை சம்பளமாக வழங்கப்பட்டுவரும் நிலையில், தோட்ட தொழிலாளருக்கு, பெரும் போராட்டங்ளுக்கு பின்னர் 1,000 ரூபா மாத்திரமே ( முழுமையாக அல்ல )  வழங்கப்படுகின்றது.

மலையக மக்கள் இலங்கையில் கால்பதித்து 200 ஆண்டுகள் நிறைவை நினைவுகூரும் முகமாக, தலைமன்னாரின் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபி 

வறுமையின் பிடியில் நாடே தவிக்கும் நிலையில் பெருந் தோட்டத் தொழிலாருக்கு வழங்கப்படும் சம்பளம் ஒருவேளை உணவுக்கே போதுமானதல்ல என்பதே யதார்த்தம்.  இதன் காரணமாகவே  பெரும் எண்ணிக்கையான படித்த பல இளம் வயது ஆண்களும், பெண்களும் மலையகத்தை விட்டும் வெளியேறி நகர்ப் புறங்களுக்கும் சிலர் வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்ந்து வருகின்றனர். மேலும், சில  இளைஞர்கள்  முச்சக்கரவண்டிகளை  செலுத்தி சுயமாக உழைக்கின்றனர். இருந்தும் அவர்கள் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

மலையக மக்களின் 200 வருட கால வரலாற்றை நினைவுகூரும் வகையிலும்,இம்மக்களது வரலாறு மற்றும் நாட்டின் அபிவிருத்திக்கு வழங்கிய பங்களிப்பினை வெளிக்காட்டும் வகையிலும்  ‘மலையகம் 200’ நிகழ்வு நாடளாவிய ரீதியில் பல்வேறு அம்சங்களுடன் நடந்தேறி வருகின்றன.

குறிப்பாக, தோட்டத் தொழிலாளர்கள் முதலில் கால் பதித்த தலைமன்னாரிலிருந்து தொடங்கி மாத்தளை வரை நடைபவனி நடத்தப்பட்டுள்ளது.  மக்கள்   பேரணியாக அட்டனில் இருந்தும்,  நுவரெலியாவில் இருந்தும்  தலவாக்கலைக்கு   திரண்டு  சென்று தமது பங்களிப்பை நல்கியுள்ளனர்.

நாடளாவிய ரீதியிலும் கடல்கடந்தும் ஆய்வரங்குகள், அருங்காட்சியகக் கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுடன் மலையகம் 200 ஐ தேசிய நிகழ்வாக நடத்த அரசு முன்வந்துள்ளது. ஆனால், மலையகம் 200 நிகழ்வு வெறும் கொண்டாட்டமாகவும் விழாவாகவும் கடந்து போய்விடாமல் மலையகத்தின் கடந்தகால வளர்ச்சியை மறுபரிசீலனை செய்வதுடன் எதிர்கால வளர்ச்சிக்கு திட்டமிடுவதாகவும் அமைய வேண்டும்.

மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக தேசிய கொள்கைத்திட்டம் வேண்டும். நிலையான அபிவிருத்திக்கும் மாற்றத்திற்கும் தேவையான நடவடிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டும். இதுவே 200 வருட நினைவு கூரலை அர்த்தப்படுத்துவதாக அமையும்.

ஆர்.பி.என்