அடுத்த வருடம் நிச்சயமாக பிரதான தேர்தல் ஒன்று இடம் பெறும் என்றும் அந்த தேர்தல் நடைபெறும் வரையிலாவது குறுகிய அரசியல் இலாபங்களை மறந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டுக்காக பயணிக்க வேண்டும் என்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அடுத்த வருடம் நிச்சயமாக பிரதான தேர்தல் ஒன்று இடம்பெறும். பொதுத் தேர்தல் ஒன்றையோ அல்லது ஜனாதிபதி தேர்தல்
ஒன்றையோ எதிர்நோக்க வேண்டி ஏற்படும். அரசியலமைப்பின் படி நாட்டில் பொதுத் தேர்தல் ஒன்று நடைபெற வேண்டும். அதிலிருந்து எவராலும் விடுபட முடியாது.
அந்த தேர்தல் நடைபெறும் வரையிலாவது குறுகிய அரசியல் இலாபங்களை மறந்து நாம் அனைவரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நாட்டுக்காக ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். அவ்வாறே இந்த நாட்டை மீட்பதற்கான திட்டமொன்றை வகுக்க வேண்டும் என்றார்.