அனைத்துப் பிரதிகளும் காலவரையறையின்றி செல்லுபடியாகும்

இலங்கையில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் அனைத்துப் பிரதிகளுக்கும் இனி செல்லுபடியாகும் காலம் கவனத்திற் கொள்ளப்படாது என பதிவாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் பிரதிகள், செல்லுபடியாகக் கூடிய கால வரையறையின்றி ஏற்றுக்கொள்ளப்படும் என அறிக்கையொன்றை வெளியிட்டு திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

ஆவணங்கள் வழங்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்கள் வரையிலான காலப்பகுதிக்குள் செல்லுபடியாகும் என்ற முந்தைய தேவைப்பாட்டைத் திருத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கல்வியமைச்சு, வெளியுறவுத்துறையமைச்சு மற்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழில் மாற்றங்கள் தேவைப்பட்டால் மட்டுமே உரிய ஆவணங்களின் புதிய பிரதிகளைப் பெறுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சிறந்த மற்றும் தெளிவான பிறப்பு , இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை வைத்திருப்பவர்கள் புதிய பிரதிகளைப் பெறத் தேவையில்லையென திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.