அனைத்து பிரதேச மக்களையும் மலையகம் அரவணைக்கின்றது!

மலையக பிரதேசங்களில்  வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் உள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பலர் அரச தொழில் புரிகின்றனர்.   ஆசிரியர்களாக உள்ளனர். அவர்களின் சேவைகளைப் பெற்று அரவணைத்து வருகின்றது மலையகம். ஆனால் கிழக்கு மாகாணத்தின் சில அரசியல் பிரமுகர்கள் அங்கு ஆளுநராக விளங்கும் செந்தில் தொண்டமானை  பல விதத்திலும் விமர்சித்து வருகின்றனர். இதை ஏற்க முடியாது என  மத்திய மாகாண முன்னாள் உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ராஜாராம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறிய விடயங்கள்

கிழக்கு மாகாணம்   நல்லுள்ளங்களை கொண்ட பிரதேசமாகும். எனினும் ஒரு சில அரசியல் பிரமுகர்கள் பிரதேச ரீதியாக இனவாத கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

அண்மையில்  அமைச்சர் ஒருவர் ஆளுநரை விழித்து பேசுகையில் மலையகத்தில் செய்தது போன்று கிழக்கில்  செய்ய முடியாது என தெரிவித்திருந்தார்.

மலையக மக்கள் செறிந்து வாழ்ந்து வரும் ஊவா மாகாணத்தின் ஆளுநராக முஸ்லிம் பிரமுகர் ஒருவரே இருக்கின்றார்.

அவரை எமது சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லையா? ஊவா மாகாணத்தில் அது நாள் வரை இருந்த தனித் தமிழ்க் கல்வி அமைச்சை வர்த்தமானி அறிவித்தலின் மூலம் தற்போது இருக்கும் ஆளுநரே இல்லாது செய்தார்.

ஆனால் அது அரசாங்கத்தின் உத்தரவு. ஆளுநர் என்பவர் ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதி ஜனாதிபதியின் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளை அமுல்படுத்துதலே அவரின் பிரதான கடமை. ஆளுநர்கள் அரசியல் செய்ய முடியாது.

ஆகவே கிழக்கு மாகாண ஆளுநரும் ஜனாதிபதியின் பணிப்புரைகளையே செயற்படுத்துகிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.மதத்தாலும் இனத்தாலும் வேறுபட்டிருந்தாலும் மொழியால் நாம் தமிழர்கள் என்பதை உணர வேண்டும்.

இதற்கு முன்பதாக கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த பெரும்பான்மையினத்தவர் எத்தகைய நெருக்கடிகளை அம்மாகாணத்தின் தமிழ் பேசும்  மக்களுக்கு கொடுத்தார் என்பதை நாமும் அறிவோம் எனத் தெரிவித்தார்.