அமெரிக்கா, அவுஸ்திரேலியாவின் பயண எச்சரிக்கைகள் கவலைக்குரியவை!

வரலாற்றில் என்றுமே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியாத இரு எதிரணி வேட்பாளர்கள் மற்றும் அவர்களது குழுக்களால் முன்னெடுக்கப்படும் சிறு ஆர்ப்பாட்டங்களை அடிப்படையாகக் கொண்டு அவுஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகள் அந்நாட்டு பிரஜைகளுக்கு இலங்கை வருவது தொடர்பில் பயண எச்சரிக்கை விடுக்கின்றமை கவலைக்குரியதாகும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குடன் நேரடியாகக் கலந்துரையாடவுள்ளதாகவும் , பயண எச்சரிக்கைகளை நீக்குமாறும் கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் திங்கட்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சுற்றுலாத்துறையின் ஊடாக மாத்திரம் நாட்டை அபிவிருத்தியடைச் செய்ய முடியும் என்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நம்பிக்கையாகும். காரணம் கடந்த ஆண்டு சுற்றுலாத்துறை முற்றுமுழுதாக வீழ்ச்சியடைந்து, ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டு தொழிலாளர்கள் அனைவரும் தொழில்களை இழக்கும் நிலைமை காணப்பட்டது. ஆனால் அன்று ஒரு அதிசயத்தைப் போன்று அந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது.

உண்மையில் இந்த நிலைமைக்காக இந்தியாவுக்கு விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். காரணம் இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருகை தரும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலாமிடத்தில் உள்ளது. கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 10 வரை ஒரு இலட்சத்து 48,800 இந்திய சுற்றுலாப்பணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியாவிலிருந்து வருடத்துக்கு 48 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இவர்களில் 4 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு வரவழைத்தால் அது பாரிய வெற்றியாகும்.

எவ்வாறிருப்பினும், அந்தவுக்கு பாரிய சுற்றுலாப்பயணிகளை நிர்வகிக்கும் வளம் எம்மிடம் இல்லாதது பாரிய குறைபாடாகும். எனவே பயன்பாடின்றி காணப்படும் அதி சொகுசு வீடுகள், மாடிக் குடியிருப்புக்கள், தனி வீடுகள் உள்ளவர்கள் தங்களை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்து அவற்றை சுற்றுலாத்துறைக்கு வழங்கி ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். இதன் மூலம் சுற்றுலாத்துறையும் அபிவிருத்தியடையும், நாட்டு மக்களின் உயர் வருமானத்துக்கும் வழி கிடைக்கும்.

செப்டம்பரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட சுற்றுலாத்துறையின் முதற்கட்ட அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறவுள்ளது. அதன் பின்னர் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் சிறு ஆர்ப்பாட்டங்களை மையமாகக் கொண்டு அந்நாட்டு பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுக்கின்றமை கவலைக்குரியது.

உண்மையில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களையும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு பயங்கரவாத செயற்பாடுகள் இடம்பெறவுள்ளதாகவும் பிரசாரங்களை முன்னெடுப்பது வரலாற்றில் என்றுமே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியாத இரு வேட்பாளர்களும் அவர்களது குழுக்களுமே. எனவே அவ்வாறானவர்களின் போலி பிரசாரங்களை நம்பி பயண எச்சரிக்கைகளை விடுக்காமலிருப்பது தொடர்பில் அமெரிக்க தூதுவரை நேரில் சந்தித்து பேசவுள்ளேன் என்றார்.