கடந்த வருடம் இடம்பெற்ற அரகலயவினால் காலிமுகத்திடலில் ஏற்படுத்தப்பட்ட சேதங்களின் மொத்த மதிப்பு ரூ. 5.6 மில்லியன் என இன்று பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியிலிருந்த மேசைகள் மற்றும் கதிரைகளுக்கு ஏற்பட்ட சேதம் ரூ. 1.48 மில்லியன் எனவும் இருக்கைகளுக்கான சேதம் ரூ. 162,000, கைகழுவுமிடங்களின் சேதம் ரூ. 91,000 மற்றும் ஜன்னல் கண்ணாடிகளின் சேதம் ரூ. 45,000 அத்துடன் கதவு பூட்டுகளின் சேதம் ரூ. 80,000 எனவும் ஜன்னல் பூட்டுகளின் சேதம் ரூ. 16,000 எனவும்,
மின் கதவுகளுக்கு ஏற்பட்ட சேதம் ரூ. 56,000 எனவும், மேலும் புற்தரைகளுக்கு உண்டான சேதத்தின் மதிப்பு ரூ. 1.4 மில்லியன் எனவும் மொத்தமாக ரூ. 3.3 மில்லியன் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பணவீக்கத்தைக் கருத்திற் கொள்ளும் போது அது ரூ. 5.9 மில்லியன் எனவும் துறைமுகங்கள் , கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா தெரிவித்தார்.
சுமார் 55 மேசைகள் மற்றும் கதிரைகள், 18 பெஞ்சுகள், ஒரு கைகழுவுமிடம், 1450x800mm ஜன்னல் கண்ணாடி, பத்து கதவு பூட்டுகள், 18 ஜன்னல் பூட்டுகள், எட்டு மின்சார கதவுகள் மற்றும் 14,000 சதுர அடி புல் ஆகியவை அரகலய போராட்டகாரர்களால் அழிக்கப்பட்டுள்ளன என அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி கோட்டை அலுவலகப் பொறுப்பதிகாரி விடுத்த கோரிக்கையையடுத்து இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவரினால் விசாரணை நடத்தப்பட்டது.