சர்வதேச சதித் திட்டங்கள் குறித்து மேலும் தகவல்களை வெளியிடப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.
கடந்த வருடம் இடம்பெற்ற அரகலய ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடைய சர்வதேச சதிகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சதித் திட்டம் குறித்து மேலும் பல தகவல்களை அம்பலப்படுத்திய பின்னர் சதித் திட்டம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என ஜனாதிபதியை கோருவதற்காக நாங்கள் அவரை சந்திப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
சதித் திட்டம் குறித்த முதற்கட்ட விபரங்களை அவர் ‘ஒன்பது : மறைக்கப்பட்ட கதை’ என்ற ஏப்ரல் மாதம் வெளியான நூலில் அவர் வெளியிட்டிருந்தார்.
எனினும் புதிய தகவல்கள் குறித்து மேலதிக விபரங்களை அவர் வெளியிட மறுத்துள்ளார். அவற்றை தவறாக அர்த்தப்படுத்தலாம் என்பதால் மேலதிக விபரங்களை வெளியிட விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்காக அந்த விபரங்களை முதலில் ஜனாதிபதியிடம் கையளிக்கவேண்டும் என தெரிவித்துள்ள விமல் வீரவன்ச, தனது பிரசுரத்தில் உள்ள விடயங்கள் ஜனாதிபதிக்கு தெரியும். லண்டனில் சமீபத்தில் ஆற்றிய உரையில் ஜனாதிபதி தான் தெரிவித்துள்ள விடயங்களை ஏற்றுக்கொண்டுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எங்களிடம் உள்ள ஆதாரங்களை குழப்ப விரும்பவில்லை என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.