அரசமைப்பு ஊடாக ஈழத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள்

அரசமைப்பு  ஊடாக ஈழத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றனவா என முன்னாள் இராணுவபிரதானி லெப் ஜெனரல் ஜகத்டயஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

13வது திருத்தத்திற்கு எதிரான நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தவேளை இதனைதெரிவித்துள்ள அவர் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது வடக்குகிழக்கில் தனிநாடு உருவாவதற்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்திருக்கின்றீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

விக்கிரமசிங்க ராஜபக்ச அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நாடு பிளவுபடுவதற்கு வழிவகுக்கும் என்பதால் அதனை அவசரமாக எதிர்க்கவேண்டிய தேவை உள்ளதாக தான் உணர்ந்ததாகஜகத்டயஸ் குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் உயிர்களை பணயம்வைத்து விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்காக 2009 இல் போரிட்டவர்கள் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை ஊக்குவிக்கும் தற்போதைய நிகழ்ச்சி நிரலை எதிர்க்கின்றனர் என ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார்.

தேசியபாதுகாப்பை புறக்கணித்துவிட்டு சில இராணுவதளங்களை  மூடுவது  தொல்பொருளுடன் தொடர்புள்ள இடங்களை கைவிடுவது பொதுசொத்துக்களை தனியார் மயப்படுத்துவது இராணுவத்தை பலவீனப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் நாட்டை பிளவுபடுத்தும் சூழலை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டவையா எனவும் முன்னாள் இராணுவஅதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னர் ஒருபோதும் இவ்வாறான பொதுநிகழ்வில் கலந்துகொள்ளாத  ஜகத்டயஸ் இந்திய இலங்கை உடன்படிக்கையின் தனக்குள்ள கடப்பாட்டினை இந்தியா நிறைவேற்ற தவறிவிட்டதால் இலங்கைமீது திணிக்கப்பட்ட  13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை நியாயப்படுத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே இலங்கை அந்த உடன்படிக்கையை மதிக்கவேண்டியதில்லை என கஜபா படைப்பிரிவை சேர்ந்த முன்னாள் அதிகாரி தெரிவித்துள்ளார்.

1987 இல் எந்த சூழ்நிலையில் இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது என்பதை நினைவுகூர்ந்துள்ள அவர் யாழ்குடாநாட்டில் வடமராச்சி பிரதேசத்தில் படையினர் இராணுவநடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் விடுதலைப்புலிகளின் தலைவரை பிடிக்கும் நிலையிலிருந்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய இலங்கைஉடன்படிக்கையின் படி விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை களையமுடியவில்லை இதன் காரணமாக இலங்கை இந்த உடன்படிக்கையை மதிக்கவேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ள அவர் உருவாகிவரும் அச்சுறுத்தல் குறித்துநாடு விழிப்படையவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியா 1990 இல் தனது படைகளை விலக்கியது.

1991இல் பிரதமர் வேட்பாளராக போட்டியிட்ட ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அவர் உரிய பாதுகாப்பு வெளிவிவகார கொள்கைகள் இல்லாததால் விடுதலைப்புலிகள் எவ்வாறு சக்தி வாய்ந்த மரபுவழிப்படையாக உருவாகினார்கள் எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.