சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமைச்சரவைக்கும் இடையில் இணக்கப்பாடற்ற தன்மை காணப்படுகிறது.
வெகுவிரையில் அரசாங்கத்துக்குள் புதிய எதிரணி ஒன்று தோற்றம் பெறும் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியிலும் ஊழல் மோசடி முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை.
சுங்க திணைக்களம், மதுவரி திணைக்களம், மோட்டார் வாகன பதிவாளர் திணைக்களம், தேசிய இறைவரித் திணைக்களம் மற்றும் புகையிரத திணைக்களம் ஆகிய அரச திணைக்களங்களில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை குறைந்தபட்சமேனும் நிவர்த்தி செய்துக் கொண்டால் நாட்டு மக்கள் மீது வரி சுமையை சுமத்த வேண்டிய தேவை ஏதுமில்லை என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன குறிப்பிடுகிறார்.
ஊழல் மோசடியை இல்லாதொழிக்க நடைமுறைக்கு சாத்தியமான எந்த நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கவில்லை. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மக்கள் மீது வரி விதிப்பு மனசாட்சி இல்லாமல் சுமத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் தவறான தீர்மானத்தினால் உடவளவ வலய விவசாயிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
விவசாயிகள் வீழ்ச்சியடைந்தால் அதன் தாக்கத்தை ஒட்டுமொத்த மக்களும் எதிர்கொள்கிறார்கள். சமனல அணையில் இருந்து உடவளவ விவசாய வலயத்துக்கு நீர் விடுவிக்காதது தவறு என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிடுகிறார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் தான் விவசாயத்துறை அமைச்சர், மின்சாரத்துறை அமைச்சர், நீர்பாசனத்துறை மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் ஆகியோர் உள்ளார்கள்.
ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய மூன்று அமைச்சுக்களும் முரண்பட்டுக் கொண்டுள்ளன. இறுதியில் விவசாயிகள் தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமைச்சரவைக்கும் இடையில் இணக்கப்பாடற்ற தன்மை காணப்படுகிறது.
வெகுவிரையில் அரசாங்கத்துக்குள் புதிய எதிரணி ஒன்று தோற்றம் பெறும் என்றார்.