அரசாங்கத்தை காப்பாற்ற முயல வேண்டாம்

காணாமல்போனவர்கள் அலுவலகம் அரசாங்கத்தை காப்பாற்ற முயலாமல் பதவி விலகவேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது ஊடக சந்திப்பு ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி கருத்து தெரிவிக்கையில்,

இன்று நாங்கள் இரண்டாயிரத்து முந்நூற்று தொண்ணூறு நாட்கள் தெருவிலே இருந்து எங்களுடைய உறவுகளை தேடுவதற்காக பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து, பல அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி நாங்கள் எங்களுடைய இந்த தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

இந்நிலையிலே 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரது அலுவலகம் தனது பணியை செவ்வனே செய்து முடிக்கவில்லை.

இந்த ஜெனீவா கூட்டத்தொடர் வருகின்ற காலப்பகுதியிலே தாங்களும் வேலை செய்கின்றோம், அவர்களுடன் இணைந்து அவர்களது விபரங்களை திரட்டி அவர்களுக்கான பதிலை அளிக்கிறோம் என காட்டுவதற்காக  தாங்கள் மும்முரமாக செயல்படுவதாக காட்டிக் கொள்கின்றார்கள்.

நாளையதினம் கிளிநொச்சி மாவட்டத்தில் ஓ.எம்.பி அலுவலகம், இந்த பாதிக்கப்பட்ட உறவுகளை அழைத்து அதற்கான பரிகாரம் வழங்க உள்ளதாக எங்களால் அறியக் கூடியதாக உள்ளது.

உண்மையாவே நாங்கள் பல இடங்களில், பல மாவட்டங்களில், பல காலங்களில் நாங்கள் இந்த ஓ.எம்.பி அலுவலகத்தை எதிர்த்து நின்றோம்.

மாவட்ட ரீதியில் அவர்கள் எந்த விதமான வேலை திட்டங்களையும் செய்யாத வகையில் நாங்கள் அவர்களை புறக்கணித்திருந்தோம்.

இன்றைக்கும் நாங்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. ஓ.எம்.பி அலுவலகம் என்பதையே நாங்கள் ஒரு காலமும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

அந்த அலுவலகத்தால் எங்களுக்கு எந்த விதமான தீர்வும் கிடைக்கப் போவதில்லை. இந்த இலங்கை அரசாங்கத்தின் ஊடாக எமக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை என்றபடியால் தான் நாங்கள், ஜெனீவாவின் முப்பத்தி எட்டாவது கூட்டத்தொடரில் இருந்து முட்டை வரைக்கும் நமது உண்மையான குரலை ஜெனிவாவில் பதிவு செய்து வருகின்றோம்.

உண்மைக்கும் நீதிக்குமாக நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்ற இந்த காலப்பகுதியில் எங்களை இன்னல்களுக்கு ஆளாக்காமல், இந்த ஓ.எம்.பி அலுவலகம் அரசாங்கத்தை காப்பாற்ற முனையாமல் விலகிக் கொள்ள வேண்டும். நாங்கள் இந்த அலுவலகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

அரசாங்கத்தோடு சேர்ந்து அரச சம்பளத்தை வாங்குகின்ற மாவட்ட செயலகமாக இருந்தாலும் சரி, பிரதேச செயலகமாக இருந்தாலும் சரி அங்கே பணிபுரிகின்றவர்கள் கூட இதற்கு உடந்தையாக இருக்கின்றார்கள். எங்களுடைய உயிருக்கும் மேலான உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கேட்பதற்கு அவர்களுக்கு முடியாமல் இருக்கின்றது. அவர்கள் பதவிகளில் இருப்பதால் அவர்களுக்கு முடியாமல் இருக்கின்றது. ஆனால் அரசாங்கத்துக்கு சார்ந்து வேலை செய்ய மக்களிடத்தே ஓடி வருகின்றார்கள். அவர்களுடைய பணிகளை அவர்கள் சீராக செய்வதில்லை – என குற்றம் சாட்டியுள்ளார்.