சனத்தொகை மற்றும் குடியிருப்பு மதிப்பீட்டை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கோடிக்கணக்கில் செலவிட்டு சனத்தொகை மதிப்பீட்டை நடத்த முடியுமெனில், ஏன் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த முடியாது என்று பிரதான எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு கேள்வியெழுப்பிய அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
பிரதேசசபை , நகரசபை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான தனிநபர் பிரேரணை கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
கலைக்கப்பட்ட உள்ளுராட்சிமன்றங்களுக்கு மீண்டும் அதிகாரங்களை வழங்குவதே இதன் நோக்கமாகும். எனினும் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் , சர்வசன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆளுங்தரப்பின் பிரதேசபை உறுப்பினர்களை மகிழ்விப்பதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. இதனை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிப்புரைக்கமைய சர்வசனவாக்கெடுப்பு நடத்தப்படுமா? தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லையெனக் கூறும் அரசாங்கத்துக்கு சர்வசன வாக்கெடுப்பை நடத்துவதற்கு பணம் இருக்கிறதா? என்பதற்கு அரசாங்கம் தெளிவான பதிலை வழங்க வேண்டும்.
அது மாத்திரமின்றி இந்த முயற்சியானது மக்களின் வாக்குரிமையை கேள்விக்குறியாக்கும் என்றும் சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் ஏன் அஞ்சுகிறது? சனத்தொகை மற்றும் குடியிருப்பு மதிப்பீட்டை முன்னெடுக்குமாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. செப்டெம்பரில் இதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
எனினும் பாரியதொரு தொகை நிதி ஒதுக்கப்பட வேண்டும். அதே வேளை செப்டெம்பரின் பின்னர் வங்குரோத்தடைந்த நாடு என்ற பட்டியலிலிருந்து இலங்கை நீக்கப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறிருப்பினும் தேர்தலை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்று நாம் நம்புகின்றோம் என்றார்.