அவதானமாக செயற்படுங்கள்!

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடும்போது அவதானமாக செயற்படவேண்டும். மேலும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான தாக்குதல்கள் மற்றும் துன்புறுத்தப்படும் காட்சிகள் உள்ளடங்கிய  பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

நவகமுவ பகுதியிலுள்ள விகாரையொன்றில் பிக்கு ஒருவர் மற்றும் பெண்கள் இருவர் குழுவொன்றினால் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்படும் சம்பவத்தை வீடியோ செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சமூக வலைதளங்களில் பெண்கள் தாக்கப்படுவது மற்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் வீடியோக்கள்வெளியாகியுள்ளன. அதனை வெளியிட்ட நபர் பாரியதொரு குற்றத்தை செய்துள்ளார். அவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மேலும் இது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு  வருகின்றன.

குற்றவியல் சட்டத்தின் 365 டி முதலாவது பிரிவின் அடிப்படையில் இது பாரியதொரு குற்றமாகும். யாரேனும் இதுபோன்ற குற்றத்தை மேற்கொண்டு விசாரணைகளில் நிருப்பிக்கப்படுமாகவிருந்தால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது. அபராதம் விதிக்கவும் வாய்ப்புள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான விடயங்களை குறிப்பாக சட்டத்தால் தடை செய்யப்பட்ட விடயங்களை விளம்பரப்படுத்துதல், மேலும்  சமூக வலைத்தளங்களில் மூலம் இவற்றை பகிரும் போது அவர் நிச்சயமாக பாரியதொருகுற்றத்தை மேற்கொள்கிறார். நவகமுவ சம்பவத்திலும் குறித்த நபரை அடையாளம் கண்டு அவருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவோம் என்றார்.