அஸ்வெசும கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு வலியுறுத்தியே ஆட்சேபனைகள்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பித்துள்ள 968 000 நபர்களில், 6 இலட்சம் பேர் தகுதியுடையோர் பெயர் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளவர்களாவர்.

இவர்கள் தமக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு வலியுறுத்தியே ஆட்சேபனைகளை சமர்ப்பித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அமைச்சரவைக்கு தெளிவபடுத்தியதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் ஆட்சேபனைக்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ள போதிலும் , தாம் கொடுப்பனவுகளைப் பெற தகுதியானவர்கள் என எண்ணுபவர்கள் ஜனாதிபதி செயலகம் , பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட அதிபர் அலுவலகத்துக்கு எழுத்து மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை (11)  இடம்பெற்ற பொது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

அஸ்வெசும தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து அமைச்சரவையில் விரிவாக அவதானம் செலுத்தப்பட்டது. எவ்வாறான பிரச்சினைகள் காணப்பட்டாலும் அங்கவீனமுற்றோருக்கு , நீரிழிவு நோயாளர்களில் இதுவரை கொடுப்பனவு வழங்கப்பட்டவர்களுக்கு மாத்திரமின்றி , காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கும் உரிய கொடுப்பனவுகளை வழங்குமாறு ஜனாதிபதி இதன் போது ஆலோசனை வழங்கினார்.

இதற்கு மேலதிகமாக ஆட்சேபனைக்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் நிறைவடைந்தாலும் , எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நலன்புரி கொடுப்பனவுகளை இழந்துள்ளவர்களுக்கு ஜனாதிபதி செயலகத்துக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்க முடியும். அதே போன்று மாவட்ட அதிபர்கள் , பிரதேச செயலாளர்களிடமும் நலன்புரி திட்டத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க முக்கிய விடயங்களை அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தினார். அதற்கமைய இதுவரை அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் 968 000 ஆட்சேபனைகளும் , 17 500 எதிர்ப்புக்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இவை சகல பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட அதிபர்கள் உள்ளிட்டோரடங்கிய குழுக்களால் மீளாய்வு செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

எனினும் கிடைக்கப் பெற்றுள்ள 968 000 ஆட்சேபனைகளில் சுமார் 6 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஏற்கனவே பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளவர்களாவர். இவர்கள் தமக்கான நலன்புரி கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரி ஆட்சேபனைகளை சமர்ப்பித்துள்ளனர். மாறாக இவர்கள் நலன்புரி கொடுப்பனவுகளை இழந்து ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கவில்லை.

எனவே 968 000 பேருக்கு சமூர்த்தி கிடைக்கவில்லை என அரசியல் பிரசாரங்களை முன்னெடுப்பது பொறுத்தமானதல்ல. இவர்களில் 6 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொடுப்பனவுகளைப் பெற தகுதியானவர்கள் என்பதோடு , சுமார் 3 பேர் தகுதியற்றவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளை பொறுத்தமற்றவர்கள் இந்த திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து 17 500 எதிர்ப்புக்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதமளவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று நாம் நம்புகின்றோம் என்றார்.

இதேவேளை அஸ்வெசும வேலைத்திட்டத்தின் கீழ் நலன்புரி நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பித்துள்ள முதியோர் , சிறுநீரக நோயாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவுகளைப் பெறுபவர்கள் மிகவும் பொருத்தமான குறிகாட்டிகள் மற்றும் வழிகாட்டிகளைப் பயன்படுத்தி தீர்மானிக்கும் வரைக்கும், இதுவரைக்கும் நன்மைகளைப் பெற்றுவந்த குறித்த 03 சமூகக் குழுக்களுக்கும் தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள நலன்புரி நன்மைக் கொடுப்பனவுகளை செலுத்துவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.