ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பற்றாக்குறைக்கு அடுத்த சில வாரங்களில் தீர்வை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் மாகாண மட்டத்தில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர், “விரைவில் மாகாண மட்டத்தில் கலந்துரையாடுவோம். வடமேல் மாகாணத்தில் இதனை ஆரம்பிப்பேன். அதன் பின்னர் மாகாண சபையுடன் இணைந்து மாகாண மட்டத்தில் முழு நாள் நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்வேன். ஏனெனில் இங்குள்ள பாடசாலைகளில் 95% பாடசாலைகள் மாகாணசபையின் கீழ் உள்ளன. அடுத்ததாக ஆசிரியர் பற்றாக்குறை இருப்பது எமக்கு நன்றாகவே தெரியும். அதிபர் பற்றாக்குறையும் உள்ளது. 26,000 ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
அவர்களில் தமிழ் ஆசிரியர்களும் சிங்கள ஆசிரியர்களும் உள்ளடங்குகின்றனர். அடுத்த சில வாரங்களில் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை நிறைவு செய்து ஆசிரியர் நியமனங்களை வழங்க உள்ளோம். துரிதமாக பயிற்சிகளை வழங்கி ஆசிரியர்களை நியமிப்போம். மறுபுறம் ஆசிரியர்கள் இடமாற்றம் குறித்து தொழிற்சங்களுடன் கலந்துரையாடி அந்ததந்த மாகாணங்களுக்கு ஏற்ற வகையில் முறைமையொன்று தயாரிக்கப்படவுள்ளதாக” தொிவித்தார்.