தடையின்றிய மின்சார விநியோகத்தை முன்னெடுப்பதற்கு எதிர்வரும் ஆறு மாத காலத்துக்கு 100 மெகாவாட் மின்சாரத்தை கொள்வனவு செய்ய மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
2009ஆம் ஆண்டு 20ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் 43ஆவது பிரிவின் கீழ் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், 3 முக்கிய நிபந்தனைகளின் கீழ் இன்று (18) முதல் எதிர்வரும் 6 மாத காலத்துக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த மின்சார கொள்முதல் சிறப்புத் தகுதியின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும் மற்றும் மின்சார கொள்முதல் ஒப்பந்த காலத்தின் முடிவில் கொள்முதல் பற்றிய சுயாதீன தணிக்கை செய்யப்பட வேண்டும், கொத்மலை பொல்பிட்டிய 220 கே.வி பாதை 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் செயல்படுத்தப்பட வேண்டும், இந்த மின்சாரத்தை குறைந்தபட்ச விலையின் அடிப்படையில் கொள்வனவு செய்ய வேண்டும் என்ற மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் வறட்சியான காலநிலை நிலவுகின்ற நிலையில் விவசாயத்துக்கு மேலதிகமான நீரை விநியோகிக்க வேண்டுமாயின், எதிர்வரும் நான்கு முதல் ஆறு மாத காலத்துக்கு மேலதிகமாக மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மேலதிக மின்சார கொள்வனவு தொடர்பில் மின்சார சபை முன்வைத்த யோசனையை பரிசீலனை செய்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் குறுகிய காலத்துக்கு தனியார் தரப்பினரிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய அனுமதி வழங்கியுள்ளது.
வறட்சியான காலநிலைக்கு மத்தியில் விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீரை விநியோகிப்பதற்கும், மின்சாரத்தை தடையின்றி விநியோகிப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 06 மாத காலத்துக்கு தேவையான மேலதிக மின்கொள்வனவுக்காக 5 பில்லியன் ரூபாய் மேலதிகமாக செலவாகும் என மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.