ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களை சந்தித்தார் ரணில்

உள்ளூராட்சி சபை, மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் சேவைகள்  வழங்குவதில் ஏற்படும் பண  விரயத்தைத் தவிர்க்க, இந்த மூன்று பொறிமுறைகளின் செயற்பாடுகளை மையப்படுத்தி, புதிய பொறிமுறையொன்றை தயாரிக்க நடவடிக்கை எடுப்பதாக   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மாகாண ஆளுநர்களுடனும் பிரதம செயலாளர்களுடனும் கலந்தாலோசித்து, ஒரு மாத காலத்திற்குள் இது தொடர்பான அறிக்கையைத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

மாகாண ஆளுநர்களுடனும், பிரதம செயலாளர்களுடனும் நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடந்த சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

மாகாண சபை முறைமையுடன் எதிர்கால நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க:

மாகாண சபைகளின் நிர்வாக முறைமை தொடர்பில் கலந்துரையாட நான் உங்கள் அனைவரையும் அழைத்துள்ளேன். மத்திய அரசின் நிர்வாக கட்டமைப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தி, இதனை  எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும்.

சில சமயங்களில் உள்ளூராட்சி மன்றம், மாகாண சபை, மத்திய அரசாங்கம் ஆகிய மூன்று பிரிவுகளாலும் ஒரே மாதிரியான சேவைகள் வழங்கப்படுகின்றன. உதாரணமாக, வடிகால் வெட்டுதல், மின் கம்பம் நடல், வீதிகள் அமைத்தல் போன்றவற்றை சுட்டிக்காட்டலாம்.இவ்வாறு நடப்பதால்  பெருமளவு பணம் வீணாகிறது. அப்படியானால், இந்த மூன்று பொறிமுறைகளின் செயல்பாட்டை மையமாகக் கொண்டு ஒரு புதிய பொறிமுறையை அமைக்க வேண்டும். மாகாண பிரதம செயலாளர்களுடன் கலந்தாலோசித்து ஒரு மாதத்திற்கு முன்னர் அதற்கான புதிய பொறிமுறையொன்றைத் தயாரிக்குமாறு நான் ஆலோசனை வழங்கியுள்ளேன்.

மாகாண சபைகள் இயங்காததாலும், மாகாண சபைகளில் அமைச்சர்கள் இல்லாததாலும் இன்று மாகாண சபை முறைமையில் மாகாண ஆளுநர்களாகிய உங்களுக்கே முழுமையான ஆட்சி அதிகாரம் உள்ளது. மாகாண பிரதம செயலாளர்களுடன் கலந்தாலோசித்து, ஒரு மாதத்திற்குள் அதற்கான புதிய கட்டமைப்பைத் தயாரிக்குமாறு நான் ஆலோசனை வழங்கியுள்ளேன்.

கடந்த ஆண்டு நாம் மிகப் பெரிய நெருக்கடிகளை எதிர்கொண்டோம். அதை மீண்டும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் அதே வேளையில், நாட்டின் நிர்வாக முறைமையை  வழமைக்கு கொண்டுவர வேண்டும்.

குறிப்பாக கீழ்மட்ட சேவைகள்  மாகாண சபைகள் ஊடாகவே மேற்கொள்ளப்படுகிறன. மாவட்ட அளவிலான சேவைகள்   மத்திய அரசின் கீழ் மேற்கொள்ளப்படுகிறன. இந்த சேவைகளை வழங்கும் போது  அதிகாரப்போட்டியின்றி கூட்டாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

தற்போது நாடு முழுவதும் உணவுப் பாதுகாப்பு திட்டத்தை அமுல்படுத்தியுள்ளோம். அதன்படி, எதிர்வரும் பெரும் போகத்தில் அதிக விளைச்சல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். மேலும், மக்களின் ஊட்டச்சத்து குறைபாடு கடந்த ஆண்டை விட குறைவாக இருந்தாலும், அதில் திருப்தி அடைய முடியாது. அஸ்வெசும திட்டம் நாட்டு மக்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைக்க வழிவகுத்துள்ளது.

குறிப்பாக பாராளுமன்றம் அடுத்த வருட இறுதி வரை செயற்படும் என்பதால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாகாண சபை நிர்வாக செயற்பாடுகளில்  இணைவதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆளுநருடன் இணைந்து செயல்பட விசேட  ஆலோசனைக் குழுவை நியமிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பான மாகாண சபை அதிகாரங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகின்றது. குறிப்பாக, கல்வி, தொழில்பயிற்சி மற்றும் அந்தந்த மாகாணங்களில் புதிய பல்கலைக்கழகங்களை நிறுவுதல் ஆகிய பணிகளிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் மாகாண மட்டத்தில் சுற்றுலா சபைகளை ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களை ஊக்குவிக்கும் வகையில் பல வேலைத்திட்டங்கள் எதிர்காலத்தில் மாகாண மட்டத்தில் முன்னெடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

மத்திய அரசாங்கத்துடன் பணியாற்றும்போது மாகாண சபைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க ஜனாதிபதி அலுவலகம் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக ஜனாதிபதியின் செயலாளர்  சமன் ஏக்கநாயக்க இதன்போது தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த மாகாண ஆளுநர்கள், மாகாண சபைக்குட்பட்ட அதிகார எல்லையில் காணப்படும்  ஆசிரியர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர்.

சில பாடசாலைகளில் மேலதிகமாக ஆசிரியர்கள் உள்ளதை சுட்டிக்காட்டிய ஆளுநர்கள், சில பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவித்ததோடு, ஆசிரியர் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் அதனை சீராக்க சந்தர்ப்பம் வழங்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த  பாடசாலை’ என்ற கருத்திட்டத்தின் கீழ் பாடசாலைகளில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடங்கள், கட்டி முடிக்கப்படாமல் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதால் சில கட்டிடங்கள் சேதமடைந்து வருவதாகவும், அவற்றை சீர்செய்வதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் ஆளுநர்கள் சுட்டிக்காட்டினர்.

இடைநடுவில் கைவிடப்பட்ட  அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்த நிதி ஒதுக்கப்பட்ட போதிலும், சில திட்டங்களுக்கு இதுவரை நிதி கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அத்துடன், மாகாண மட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த சந்தர்ப்பம் வழங்குமாறும் மாகாண ஆளுநர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின்  பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, நிதி அமைச்சின் செயலாளர், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் மற்றும் தொடர்புள்ள அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள்  இந்த கலந்துரையாடலில் பங்கெடுத்திருந்தனர்.