இத்தாலியில் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!

இத்தாலி தூதுவராலயத்தில் இலங்கையர்கள் எதிர்கொண்டுள்ள அசௌகரியங்களை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பில் இத்தாலி தூதுவராலயத்துடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) தயாசிறி ஜயசேகர எம்.பி எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தயாசிறி எம்பி தமது கேள்வியின் போது, இத்தாலி தூதுவராலயத்தில் இலங்கையர்கள் எதிர்கொண்டுவரும்  அசௌகரியங்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தமது அவதானத்தை செலுத்த வேண்டும்.

இலங்கையர்கள் இத்தாலிக்கு செல்லும் போது  அவர்கள் தொடர்பில் எந்த பொறுப்பேற்பும் இத்தாலி தூதுவராலயத்தில் மேற்கொள்ளப்படுவதில்லை. அங்கு அவர்களது சேவையை பெற்றுக் கொள்வதற்காக எமது நாட்டவர்கள் மாதக்கணக்கில் அலைந்து திரிய வேண்டியுள்ளது.

ஒரு குடும்பத்தில் தகப்பன் இத்தாலியில், பிள்ளைகளும் மனைவியும் இலங்கையில் என்றாள் அவர்களை இத்தாலிக்கு அழைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கும் போது அதற்காக பெருமளவு காலம் செலவாகின்றது. சில விடயங்கள் அந்த தூதரகத்தினால் நிராகரிக்கப்படும்போது  அது தொடர்பில் காரணம் கேட்கும் போது அதற்கான பதிலும் அங்கிருந்து கிடைப்பதில்லை.

இவ்வாறு இலங்கையர்கள் இத்தாலியில் எதிர்கொள்ள நேர்ந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் அந்த தூதரகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வெளிவிவகார அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதற்கு தொடர்ந்து பதிலளித்த அமைச்சர் தெரிவிக்கையில்,

இத்தாலிக்கு செல்வோர் தொடர்பில் பெருமளவு முறைப்பாடுகள் உள்ளன. போலி ஆவணங்களை சமர்ப்பித்து இலங்கையர்கள் இத்தாலி செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தாலியில் உள்ள இலங்கை தூதுவராலயத்தில் அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் செல்லுபடி தன்மை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பொதுவாகவே போலி முகவர்களால் இது பெரும்  வர்த்தகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனை முற்றாக நிறுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அதற்காக மேற்கொள்ள வேண்டிய அத்தனை செயற்பாடுகளையும் நாம் முன்னெடுப்போம்.

எமது வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அது தொடர்பில் கவனம் செலுத்தி அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்.

அதற்கிணங்க கடந்த வாரம் முதல்தடவையாக எமது ஆவணங்கள் பரீட்சைகள் திணைக்களத்துக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கைகளுக்கு பதிலாக அதனை இணையவழி முறைமையில் மேற்கொள்வதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கு செல்லாமல் இணையவழி மூலமாகவே அதை சான்றுப் படுத்திக் கொள்ளக்கூடிய வசதி இதன் மூலம் ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று நாம் இணையவழி விண்ணப்ப முறைமையொன்றை ஆரம்பித்துள்ளோம்.

அது நடைமுறைப்படுத்தப்படும் போது முன்னர் போன்று ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து காத்துக் கிடக்க வேண்டிய அவசியம் கிடையாது. சம்பந்தப்பட்டவர்கள் இணையவழி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். அதற்கான காலம் அவர்களுக்கு வழங்கப்படும். மூன்று தினங்களில் அவர்களுக்கு பதில் அனுப்பப்படும்.

இத்தாலியைப் பொறுத்தவரை எமக்கு மாத்திரம் ஒரு பிரச்சினை உள்ளது.ஒரு நாளில் அவர்கள் 40 அனுமதிகளையே வழங்குகின்றனர். எனினும் நாம் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி தற்போது 140 அனுமதிகள் கிடைக்கின்றன. எனினும் ஆயிரக்கணக்கானோர் ஒரு நாளில் தமக்கான அனுமதியை எதிர்பார்க்கின்றனர். அது முடியாத காரியமாக உள்ளது. எனினும் அந்த முறைமையை விரைவுபடுத்துவதற்காக அவர்களுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த முடியும். அது தொடர்பில் நாம் கவனம் செலுத்துவோம் என்றார் .

இதன்போது குறுக்கிட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா போலி ஆவணங்கள் கூட வெளிவிவகார அமைச்சின் மூலம்தான் வழங்கப்படுகின்றன. அது தொடர்பில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், அதனை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். எனினும் சில விடயங்கள் நடக்கலாம். எவ்வாறெனினும் தற்போதைய நிலைமையில் நூற்றுக்கு நூறு வீதம் மோசடிகளை நிறுத்த முடியாதுள்ளது. அதனை முற்றாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.