இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் நேற்று கையளிக்கப்பட்டது கடிதம்

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியாவுக்கு வருகைதரவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு வலியுறுத்தி ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் தயாரிக்கப்பட்டுள்ள கடிதம் நேற்று வியாழக்கிழமை (13) இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் 5 கட்சிகளும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரனும் கையெழுத்திட்டிருக்கும் இக்கடிதத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி கையெழுத்திடவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ள நிலையில், தமிழர் விவகாரத்தில் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தவேண்டுமெனக்கோரி ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கடிதமொன்றைத் தயாரித்துள்ளது.

இக்கடிதத்தில் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் புளொட் சார்பில் த.சித்தார்த்தனும், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதனும், ஈபி.ஆர்.எல்.எப் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரனும், ஜனநாயகப் போராளிகள் கட்சி சார்பில் வேந்தனும், தமிழ்த்தேசிய கட்சி ஸ்ரீகாந்தாவும் கையெழுத்திட்டுள்ளனர். அதேவேளை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரனும் இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இக்கடிதம் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட குழுவினரால் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் கையளிக்கப்பட்டது.

இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கான இந்தக் கடிதத்தில் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் அறிமுகப்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும், மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடத்துவதற்கும் அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.