இந்தோ-பசிபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு நேற்று திங்கட்கிழமை (14) கொழும்பில் ஆரம்பமானது. அமெரிக்க இந்தோ – பசிபிக் கட்டளை, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர கடற்படை இணைந்து கொழும்பு – ஷங்ரிலா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாடு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற இதன் ஆரம்ப நிகழ்வில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங், காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன, பாதுகாப்புப் படைகளின் பிரதானி, ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றிருந்தனர்.
நான்கு நாட்கள் இடம்பெறவுள்ள இம்மாநாட்டில் இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் உள்ள மூத்த இராணுவ வீரர்கள் மற்றும் உயர்மட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கலந்து கொள்கின்றனர்.
இந்தோ-பசிபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்றத்தின் 12 ஆவது பதிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பங்குதாரர்களிடையே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான விளக்கக்காட்சிகள், குழு அமர்வுகள் மற்றும் குழு செயல்பாடுகளை உள்ளடக்குவதாக அமைந்துள்ளது.
இந்த ஆண்டுக்கான இந்தோ-பசிபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாட்டில் 28 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 140க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பங்கேற்கின்றனர்.
அத்தோடு, கடற்படைத் தளபதியின் வழிகாட்டுதல்களின் பேரில், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர கடற்படை ஆகியவை அமெரிக்க இந்தோ – பசிபிக் கட்டளையுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.