ஐக்கியநாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத் தொடர் தற்போது ஜெனிவாவில் இடம்பெற்று வரும் நிலையில் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையொன்றை மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் வெளியிட்டிருக்கிறது. குறித்த அறிக்கையை நாங்கள் ஒட்டுமொத்தமாக வரவேற்பதாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். எனினும் அறிக்கையிலுள்ள இரண்டு விடயங்கள் தொடர்பில் தனது அதிருப்தியையும் அவர் வெளியிட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை(25.06.2023) பிற்பகல் கொழும்பில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
போர் முடிவடைந்த பின்னர் சிறிலங்கா அரசு பொறுப்புக் கூறலை முன்னெடுக்க வேண்டுமென மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட தரப்புக்கள் வலியுறுத்தியிருந்தும் கூட எந்தவிதத்திலும் பொறுப்புக் கூறல் முன்னெடுக்கப்படவில்லை. முன்னேற்றம் அடையப்படவில்லை என்ற விடயத்தை இந்த அறிக்கை ஆணித்தரமாகப் பதிவு செய்திருக்கிறது.
இந்த வாய்மூல அறிக்கையில் சிறிலங்காவில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் உருவாக்கப்பட்டிருந்தும் கூட அந்த அலுவலகம் மூலமாக அதன் முழுமையான நோக்கங்களை அடைய முடியவில்லை. தோல்வியடைந்திருக்கிறது என்ற அடிப்படையில் முதன்முறையாகப் பதிவு செய்திருப்பதை முக்கியமானதொரு விடயமாகவே நாங்கள் கருதுகின்றோம்.
ஆயினும் இந்த அறிக்கையில் இரண்டு விடயங்களில் நாங்கள் அதிருப்தியடைந்திருக்கின்றோம். தமிழ்மக்களுக்கெதிராக நடைபெற்றிருக்கின்ற பாரிய மனித குலத்திற்கெதிரான, சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் அனைத்துக்கும் சிறிலங்காவிலுள்ள சிங்கள-பெளத்தப் பேரினவாதத்தின் அரசியல் கொள்கை நிலைப்பாடே காரணம். இவ்வாறான சிங்கள- பெளத்த தேசியவாதத்தால் பிரதானமாகக் குறிவைக்கப்பட்டு, இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ள தமிழ்மக்களின் அடையாளம் இந்த அறிக்கையில் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இதனைப் பாரியதொரு குறைபாடாக நாங்கள் கருதுகிறோம்.