மாகாணசபைத் தேர்தல் மற்றும் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இராஜதந்திர மட்டத்தில் அது தொடர்பில் இந்தியாவிடம் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவார் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வடக்கு – கிழக்கிற்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள உறுதிமொழியை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இரா.சம்பந்தன் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, வடக்கு மற்றும் கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதங்களில் மாகாணசபைத் தேர்தல்களை மேலும் காலம் தாழ்த்தாது உடனடியாக நடத்துமாறு இலங்கையை வலியுறுத்துமாறும், 13ஆவது அரசியலமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறும் குறிப்பிட்டு இந்திய பிரதமருக்கு கதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வியெழுப்பிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மேற்கூறப்பட்ட காரணிகள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் , அவை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிடம் இராஜதந்திர ரீதியில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிப்பார். அது தவிர இவ்விடயத்தில் வேறு எந்த சிக்கலும் கிடையாது என்றார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் வியாழக்கிழமை (20) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளதோடு, அங்கு உயர்மட்ட சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.