கனடா, ஒமான் நாடுகளுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து இருவரிடம் 28 இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட கொழும்பு மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த இரு போலி முகவர்களை திங்கட்கிழமை (17) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.
கனடாவிற்கு அனுப்புவதாக கொழும்பிலுள்ள போலி முகவர் ஒருவர் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவரிடம் 15 இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டு அவரை கடந்த 6 மாதகாலமாக ஏமாற்றி மோசடி செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த போலி முகவருக்கு எதிராக விசேட குற்ற விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்ததையடுத்து போலி முகவரை கொழும்பில் வைத்து கைது செய்தனர்.
அதேவேளை ஓமான் நாட்டிற்கு வேலை பெற்று தருவதாக ஒருவரிடம் சின்ன ஊறணியைச் சேர்ந்த போலி முகவர் ஒருவர் 13 இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டு ஏமாற்றி வந்த நிலையில் பாதிக்கப்பட்டவர் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய போலி முகவரை கைது செய்தனர்.
இந்த இரு வெவ்வேறு சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். வாங்கிய பணத்தை திருப்பி கொடுப்பதாக இருவரும் தெரிவித்தனர். இதனையடுத்து இருவரும் இரண்டு சரீரப்பிணைகளில் விடுதலைச் செய்யப்பட்டனர்.