கிளிநொச்சி மாவட்டத்தின் அதிகளமான கடற் தொழிலாளர்களைக் கொண்ட பகுதியாக பூநகரி பள்ளிக்குடா பிரதேசம் காணப்படுகிறது.
குறித்த பகுதியில் சுமார் 460 வரையான தொழிலாளர்கள் 300-க்கும் மேற்பட்ட படகுகளை பயன் படுத்தி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உரிய இறங்கு துறை வசதிகள் இன்மையால் மேற்படி தொழிலாளர்கள் தமது படகுகள் மற்றும் இயந்திரங்களை தொழில்களுக்கு கொண்டு செல்வதிலும் தொழிலுக்கு சென்று திரும்புவதிலும் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு குறித்த பகுதியில் இறங்கு துறையை ஆழப்படுத்தி புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு அவை இடை நடுவில் கைவிடப்பட்டதாகவும் குறித்த பகுதி கடற் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளதுடன் நாளாந்தம் தொழில் மூலம் கிடைக்கும் வருமானம் குறைவாக இருந்தும் உரிய இறங்கு துறை வசதிகள் இன்மை காரணமாக இயந்திரங்கள் படகுகள் தொடர்ச்சியாக சேதமடைந்து வருவதாகவும் கடத்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே தமக்கான இறங்கு துறைகளை உரியவாறு ஆழப்படுத்தி புனரமைத்து தருமாறும் தமது கடற் கரையோரப் பகுதிகளை கடல் அரிப்பிலிருந்து பாதுகாத்து பாதுகாத்துக்கொள்ள ஏற்ற வகையில் தடுப்புச் சுவர்களை அமைத்து தருமாறும் குறித்த பகுதி கடற் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.