இழுபறி நிலை ! இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும்!

அரசியலமைப்பின்  13   ஆவது திருத்தச்சட்டம் , அதிகார பகிர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகக் கூறி முன்னெடுக்கப்படும் விடயங்கள் இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவித்து விடும்.

எனவே ஜனாதிபதி இவ்வாறான வீணான குழப்பங்களை  ஏற்படுத்தி காலத்தை இழுத்தடிப்பு செய்யாமல்  உடனடியாக தீர்மானமொன்றுக்கு வரவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பொரளை பகுதியில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டு மக்கள் 13 ஆவது திருத்தச்சட்டம் பற்றி கதைக்கிறார்களா? இல்லை. பொருளாதார பிரச்சினைகள்,  அதிகரிக்கப்பட்ட நீர் கட்டணம், செலுத்த முடியாமல் உள்ள மின் கட்டணம், சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள மந்தபோசனை, கடைக்குச் சென்று பொருட்களை அதிக விலைக்கு கொடுத்து கொள்வனவு செய்ய முடியாமை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பிலேயே  அதிகம் கதைக்கிறார்கள்.

மக்களுக்கு வருமானம் பெற்றுக் கொள்ளும் வழிகள் கிடையாது. தமக்கு நிம்மதியாக வாழ்வதற்கான சூழல் ஒன்றை  உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள் எனவே கோரிக்கை விடுக்கின்றனர்.

இவ்வாறு பல பிரச்சினைகள் காணப்படும் போது ஜனாதிபதி 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஏன் அடிக்கடி கதைக்கிறார்?. இந்த சந்தர்ப்பத்தில் 13  தொடர்பில்  ஏன் கதைக்க வேண்டும்.

இவற்றை பார்க்கும் போது இரண்டு விடயங்கள் தெரிகிறது. ஒன்று 13 அமுல்படுத்தப் போவதாக கூறி நாட்டில் நிலவும் உண்மையான பிரச்சினைகளை மறைப்பது.

இரண்டாவது அடுத்த வருடம் இடம்பெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வது என்பனவாகும்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி 13 ஐ நடைமுறைப்படுத்த போவதுமில்லை. நான் அதனை செய்வேன் என இந்தியாவினையும், தமிழ் அரசியல்வாதிகளையும், வடக்கு கிழக்கு மக்களையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்.13 என்பது அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும்.

முதலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துங்கள். தேர்தலை நடத்தினால் 13 ஆவது திருத்தில் உள்ள 98 வீதமான விடயங்களை பூர்த்தி செய்ததை போன்றதாகும்.

மிகுதி பொலிஸ் அதிகாரங்கள் மற்றும் இடம் என்பன தொடர்பில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி மன்றங்களுடன் கலந்துரையாடி தீர்மானங்களை எடுக்க முடியுமல்லவா என்றார்.