உணவுப் பொருட்களை திருடிய இரு சமையல்காரர்கள் கைது!

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் உள்ளக நோயாளிகளுக்கு உணவு தயாரிப்பதற்காக சமையல் அறையில்  வைக்கப்பட்டிருந்த உலர் உணவுப் பொருட்களை திருடிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகம மற்றும் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 38, 54 வயதுடைய அதே வைத்தியசாலையின் சமையல்காரர்கள் இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக குறித்த வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டு சேமித்து வைக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் பொருத்தமில்லாத இடத்தில் காணப்படுவதாக நிர்வாகத்துக்கு  தெரிவிக்கப்பட்ட தகவல் தொடர்பில் மஹரகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், உலர் உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியை பொலிஸார் கைப்பற்றியதுடன் வைத்தியசாலையின் சமையற்காரர்கள் இருவரையும் கைதுசெய்தனர்.