உறங்கிக்கொண்டிருக்கும் தெற்கு இளைஞர்களை மீண்டும் எழுப்ப முயற்சிக்க வேண்டாம்

தமிழ் தேசியவாதிகள் அதிகார பகிர்வை கோரி நாட்டில் பிரிவினை வாதத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம். ஒருபோதும் அதிகார பகிர்வு கிடைக்கப்போவதில்லை. அத்துடன் வடக்கு மக்களும் இதற்கு இடமளிக்கப்போவதில்லை என இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தமிழ் அரசியல்வாதிகளுடன் அதிகார பகிர்வு தொடர்பில் நான்கு சுற்று பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தைகளில் அமர்ந்த தமிழ்த் தேசியவாதிகள் வெளியில் சென்று இது அவசியமில்லை. அதிகாரபகிர்வு இன்றி இதனை முடிக்கப் போவதில்லை என்று கூறுகின்றனர்.

கனவு காண வேண்டாம் என்று நான் அவர்களிடம் கேட்கின்றேன். அதிகார பகிர்வுகோரி வட்டுக்கோட்டை வரை சென்று மீண்டும் 2009 வரை இந்நாட்டு இளைஞர்களை இரத்த களரிக்குள் கொண்டு சென்றனர். மீண்டும் யுத்தத்தையா கேட்கின்றீர்கள்?

அன்றைய கூட்டத்தில் சம்பந்தன் இருந்தார். அவர் சரத் பொன்சேகாவுடன் யாழ்ப்பாணத்தில் சிங்கக்கொடியை அசைத்து பிரிக்கப்படாத நாட்டுக்குள் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வுக்குள் போவோம் என்று அன்று உறுதியளித்தார்.

அப்படியென்றால் எப்படி இன்று வந்து பேச்சுவார்த்தை நடக்கும் போது ஒழுக்கத்தை மீறி வெளியில் சென்று அதிகாரபகிர்வை தவிர நாங்கள் எதனையும் ஏற்கமாட்டோம் என்கின்றனர்.

அதனால் அவர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்கின்றேன். இந்த நாட்டை ஒருபோதும் பிரிக்க முடியாது. பிரிவினை வாதத்திற்கு நாடு முகம்கொடுக்காது.

மீண்டும் யுத்தத்திற்குள் தள்ள வேண்டாம். உறங்கிக்கொண்டிருக்கும் தெற்கு இளைஞர்களை மீண்டும் எழுப்ப முயற்சிக்க வேண்டாம்.

எங்களுக்கு சர்வதேசத்தை மகிழ்விக்கவும், அமெரிக்க, இந்திய தூதுவர்களை மகிழ்விக்கவும் முடியும். ஆனால் அதுவல்ல நடக்க வேண்டியது. அனைத்து இனங்களில் உரிமைகளுக்காகவும் பொதுவில் ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்வோம்.

பயணத்தை ஆரம்பிக்க முன்னரே பிரிவினை வாதம், அதிகார பகிர்வு தொடர்பில் கூறினால் அதற்கு எங்களால் இடமளிக்க முடியாது. வடக்கு மக்கள் இதற்கு இடமளிக்கப் போவதில்லை. அடுத்த தேர்தலில் தோல்வியடையும் தமிழ் தேசிய வாதிகள் முன்னெடுக்கும் இந்த செயற்பாடுகளுக்கு நாங்கள் எதிர்ப்பு என்றார்.