இலங்கையில் நீண்டகாலமாக இருந்து வந்த ஆனால் கடந்த காலத்தில் இழந்த அந்த வாய்ப்பை மீண்டும் இளைஞர்களுக்கு வழங்குவதே இதன் நோக்கமாகும் எனவும் அதற்காக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் பெறப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (18) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நாட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குவதும், தீர்மானம் எடுக்கும் செயற்பாட்டில் இளைஞர் பிரதிநிதித்துவத்திற்கான வாய்ப்புகளை வழங்குவதும் ஜனாதிபதியின் வேலைத்திட்டம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தொலவத்த தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த மேலும் குறிப்பிட்டதாவது,
”இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தைப் பற்றி நாங்கள் தொடர்ந்து பேசிவருகிறோம். நம் நாட்டில் பல கலவரங்கள் நடந்துள்ளன. 1971 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளைப் போலவே, கடந்த காலத்திலும் ஒரு இளைஞர் எழுச்சியைக் கண்டோம்.
ஆனால், 1989ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் நமது நாட்டு இளைஞர்கள் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு கிடைத்ததோடு அதற்குத் தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இளைஞர் அதிருப்தி ஆணைக்குழுவினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு 25% இளைஞர்களின் வேட்புமனுக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக கடந்த காலத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பில் உரிமை வழங்குவதற்கான உள்ளூராட்சி சட்டத் திருத்தத்தின் போது இளைஞர்களுக்கான வாய்ப்பு பறிபோனது.
இதனால் 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்படி 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வயதானவர்களே அதிகமாக போட்டியிட்டார்கள்.
பாராளுமன்றத்தில் இளைஞர் பிரதிநிதித்துவம் பற்றி நாம் பேசினாலும், அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதை காண முடியவில்லை. ஆனால் உள்ளூராட்சி மன்றங்களில் இளைஞர் பிரதிநிதித்துவம் என்பது பல தசாப்தங்களாக நாம் காணக்கூடிய ஒன்று. அதன்படி, அரசியல் குடும்பப் பின்னணி இல்லாத இளைஞர்கள் பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சர்களாக பதவி வகித்த சந்தர்ப்பங்களை நாம் பார்த்திருக்கிறோம்.
இளைஞர்களுக்கு 25 சதவீதமான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் உரிமையை இளைஞர்களுக்கு வழங்கும் வகையில் உள்ளூராட்சி மன்ற சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவதோடு அவர்களுக்குரிய உரிமையை மீளப் பெற்றுக்கொடுப்பதற்காகவே இந்தப் பிரேரணை முன்வைக்கப்படுகிறது.
தனிநபர் பிரேரணையாக இந்த முன்மொழிவை நான் சமர்ப்பித்தேன். இந்த பிரேரணை கொண்டு வரப்பட்டு நீண்ட காலம் கடந்ததுடன், இந்த விடயங்கள் பாராளுமன்ற அரசியலமைப்பு தெரிவுக் குழுவிலும் அமைச்சரவையிலும் தொடர்ச்சியாக ஆராயப்பட்டது. சில நேரங்களில் தனிநபர் பிரேரணை சட்டமாக மாற மிகவும் கடினமானது என்பதோடு நீண்ட காலம் எடுக்கும்.
இளைஞர் பிரதிநிதித்துவச் சட்டம் , அமைச்சரவையில் இரண்டு முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இளைஞர் தினத்தையொட்டி, அடுத்த பாராளுமன்ற அமர்வில் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை 25% ஆக அதிகரிப்பதற்கான சட்டமூலத்தை மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தனிநபர் பிரேரணையை பாராளுமன்றத்தில் சட்டமாக மாற்ற தேவையான ஆதரவை வழங்கியமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதில் அவரது பங்களிப்பை பாராட்ட வேண்டும்.
எமது நாட்டில் நீண்டகாலமாக இருந்து வந்த ஆனால் கடந்த காலத்தில் இரத்துச் செய்யப்பட்ட இளைஞர் பிரதிநிதித்துவத்தை மீளப் பெறுவதற்கு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத ஏனைய கட்சிகளினதும் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றும் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த தெரிவித்தார்.