ஊசி ஏற்றப்பட்டதும் உடல் நீலமான யுவதி மரணம்

பேராதனை போதனா வைத்தியசாலைக்கு வயிறுவலிக்கு சிகிச்சை பெற வந்த 21 வயதுடைய யுவதியொருவர் வைத்தியசாலையில் ஊசி போடப்பட்ட சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பேராதனை போதனா வைத்தியசாலையும் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொத்தப்பிட்டிய அலகல்ல பகுதியைச் சேர்ந்த சாமோதி சந்தீபனி ஜயரத்ன என்பவர் வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த 10ஆம் திகதி கெட்டப்பிட்டி அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அம்புலன்ஸ் மூலம் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அவர் செவ்வாய்க்கிழமை (11) காலை 10.00 மணியளவில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தாதியொருவர் இரண்டு ஊசிகளை செலுத்தியுள்ளார். அதனையடுத்து அவரது உடல் திடீரென நீல நிறமாக மாறி உயிரிழந்துள்ளார் என்று சிறுமியின் தாய் திருமதி மாயா இந்திராணி கூறுகிறார்.